உயர்நீதிமன்றம் பாராட்டு
Added : டிச 25, 2020 01:23
மதுரை:தனியார் மருத்துவக் கல்லுாரியில் சேரும் தகுதியான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கட்டணத்தை அரசே ஏற்கும் தமிழக முதல்வரின் சலுகை அறிவிப்பை பாராட்ட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
பரமக்குடி பிடாரிசேரி கார்த்திகாஜோதி தாக்கல் செய்த மனு:என் பெற்றோர் கூலி தொழிலாளிகள். மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அடிப்படையில், தனியார் மருத்துவக் கல்லுாரில் எனக்கு இடம் கிடைத்தது. கட்டணம் செலுத்த இயலாததால் சேர முடியவில்லை.தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் சேரும் தகுதியான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கட்டணத்தை அரசே ஏற்பதாக தமிழக முதல்வர் அறிவித்தார்.
இதனடிப்படையில் எனக்கு மருத்துவப் படிப்பில் இடம் ஒதுக்க வேண்டும். இவ்வாறு கார்த்திகா ஜோதி குறிப்பிட்டார்.நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவு: தனியார் மருத்துவ கல்லுாரிகளில் சேரும் தகுதியான மாணவர்களுக்கு அரசே கட்டணம் செலுத்தும் சிறந்த முடிவை தமிழக முதல்வர் எடுத்துள்ளார். அது தொடர்பான அறிவிப்பு தனியார் கல்லுாரியில் கிடைத்த வாய்ப்பை மனுதாரர் நிராகரித்த பின் வெளியாகியுள்ளது.
அகில இந்திய ஒதுக்கீட்டில் திரும்ப ஒப்படைத்த இடங்களில் இருப்பு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் மனுதாரர் போன்றவர்களுக்கு வாய்ப்பளிக்க பரிசீலிக்கப்படலாம்.மக்களுக்கு சேவையாற்ற தகுதியான டாக்டர்களை உருவாக்கும் நோக்கில் முதல்வரின் முடிவு அமைந்து உள்ளது.
மருத்துவப் படிப்பு மற்றும் உயர் படிப்பிற்கு சீட் பெற ஒருவர் அதிக பணம் செலவிட்டால், பணம் ஈட்டவே முயற்சிப்பார். சேவை செய்ய முன்வரமாட்டார். தமிழக முதல்வரின் சலுகை அறிவிப்பை பாராட்ட வேண்டும்.மனுதாரர் மற்றும் மாணவர்கள் அருண், சவுந்தர்யா, கவுசல்யாவிற்கு தலா ஒரு இடத்தை காலியாக வைக்க வேண்டும். விசாரணை ஜன., 7க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றார்.
No comments:
Post a Comment