Thursday, December 31, 2020

இறந்தவர் பெயரில் போலி ஆவணம் தயாரித்து ஆஸ்திரேலியாவில் வசிப்பவரின் ரூ.4 கோடி நிலத்தை அபகரித்த 2 பேர் கைது

இறந்தவர் பெயரில் போலி ஆவணம் தயாரித்து ஆஸ்திரேலியாவில் வசிப்பவரின் ரூ.4 கோடி நிலத்தை அபகரித்த 2 பேர் கைது


31.12.2020

இறந்தவரின் பெயரில் போலியான ஆவணங்கள் தயார் செய்து ஆஸ்திரேலியாவில் வசிப்பவரின் ரூ.4 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரித்ததாக 2 பேரை அடையாறு போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை, கிழக்கு தாம்பரம், திருமங்கை மன்னர் தெருவில் வசிப்பவர் சுவாமிநாதன் (65). இவர் அடையாறு காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில், அவர் கூறியிருப்பதாவது: ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் நிர்மலின் சந்திரிகா ப்யூட்லர் என்பவருக்கு சொந்தமான ரூ.4 கோடி மதிப்புள்ள மனை அடையாறு, கஸ்தூரிபாய் நகர், 3-வது குறுக்குத் தெரு, தனலட்சுமி அவென்யூவில் உள்ளது.

அந்த மனையை நான் பராமரித்து வருகிறேன். இதை சில மர்ம நபர்கள் போலி ஆவணங்கள் மூலம் பட்டா பெற்று அபகரித்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க அடையாறு துணை ஆணையர் விக்ரமன் உத்தரவிட்டார். அதன்படி, அடையாறு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், ‘சம்பந்தப்பட்ட மனை எவாலின் கேளிப் என்பவருக்கு சொந்தமானது என்றும், இவர் 1989-ம் ஆண்டு இறந்து விட்டதால், அவரின் வாரிசுதாரரான நிர்மலின் சந்திரிகா ப்யூட்லர் என்பவர் பெயருக்கு மாற்றம் செய்து பட்டா பெறப்பட்டதும், நிர்மலின் சந்திரிகா ப்யூட்லர் ஆஸ்திரேலியாவில் வசித்து வருவதால் அந்த மனையை தனக்கு தெரிந்த சுவாமிநாதன் பராமரித்து வந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில்தான் இறந்துபோன எவாலின் கேளிப் வேறு ஒருவருக்கு மனையை அனுபவிக்கவும், விற்கவும் அங்கீகாரம் கொடுத்தது போல போலி ஆவணங்கள் தயார் செய்து மோசடி நடந்துள்ளது தெரியவந்தது. இந்த மோசடியில் ஈடுபட்டதாக சாலிகிராமம், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த நேசன் டிக்சன் கிரிஸ்டோபர் (44), விருகம்பாக்கம், பள்ளிக்கூடம் தெருவைச் சேர்ந்த சிவசங்கர் (45) ஆகிய இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024