அவதார புருஷர் அவதரித்த தினம்...!
Added : ஜன 17, 2021 00:22
'வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம்தனிலே நிற்கின்றார்'
- என்று, மன்னாதி மன்னன் படத்தில் பாடிய படியே, எம்.ஜி.ஆர்., மரணத்துக்குப் பிறகும் மக்களின் மனதில் நிலையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இரட்டை இலை தவிர, வேறு சின்னத்தில் ஓட்டு போடத் தெரியாத ஒரு பரம்பரையைப் பெற்றிருக்கிறார். இன்றும் அவரது சமாதியில் காது வைத்து, எம்.ஜி.ஆரின் கடிகாரச் சத்தம் கேட்கும் இளம் தலைமுறைகளின் ரத்தத்தில் கலந்துள்ளார்.எப்படி இவையெல்லாம் சாத்தியமானது என்பதை, அவரது பிறந்த தினத்தில் அறிந்து கொள்வோம். திரையரங்குகளில் எல்லாரும் வணிகரீதியாக பொழுதுபோக்கு படங்களை வெளியிட்டு வந்த நேரத்தில், எம்.ஜி.ஆர்., மட்டும் மனிதநேயச் சிந்தனை, நேர்மை, வாய்மை, உழைப்பு, குடும்ப உறவு, முதியோருக்கு மதிப்பு என, வாழ்வியல் பண்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, படங்களை வெளியிட்டார். அதனால் தான், எம்.ஜி.ஆரை இளைஞர்கள் இன்றும் வாத்தியார் என்று ஏற்றுக் கொண்டுள்ளனர்.
புரட்சியாளர்
எம்.ஜி.ஆர்., நாடக நடிகர் என்பதால், பாடல்களின் முக்கியத்துவம் அறிந்தவர். 1954ம் ஆண்டு வெளியான மலைக்கள்ளன் படத்தில் இருந்து, தன் படத்தின் பாடல்களை தி.மு.க.,வின் பிரசாரத்துக்குப் பயன்படுத்தினார்.
'எத்தனை காலம் தான்
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சத்தியம் தவறாத உத்தமன்
போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும்
கொள்ளை அடிக்கிறார்' - என்று, அன்றைய ஆட்சியாளர்களைப் பார்த்து, எம்.ஜி.ஆர். தைரியமாகப் பாடியதும், அவரை ஒரு சமூகப் புரட்சியாளராக மக்கள் கொண்டாடினர்.
அடுத்து, மதுரை வீரன் படத்தில் நடித்து, அருந்ததியர் இன மக்களின் குலதெய்வமாகவே மாறினார். அதனாலே இன்றும் பட்டியலின மக்கள், வீட்டுக்கு வீடு எம்.ஜி.ஆரின் போட்டோவை மதுரைவீரன் சாமியாக வைத்து கும்பிட்டு வருகின்றனர். கடந்த, 1958-ல் வெளியான, நாடோடி மன்னன் படத்தில், தி.மு.க., கொடி ஏந்திய ஆணும், பெண்ணும் நிற்பது போல, 'எம்.ஜி.ஆர்., பிக்சர்ஸ்' நிறுவனத்திற்கு சின்னம் அமைத்தார். அதனால், கிராமத்து மக்களும் ரசிகர்களும் தி.மு.க., கொடியை, எம்.ஜி.ஆர்., கொடியாகவே பார்த்தனர்.
ஏழைகளுக்கும், உழைப்பாளிகளுக்கும் மதிப்பு கொடுப்பதில், அவருக்கு இணையாக வேறு எவரையும் சொல்லவே முடியாது. உழைக்கும் மக்கள் மீதான அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்தும் வகையில், உழைப்பாளி, தொழிலாளி, விவசாயி, ரிக் ஷாக்காரன், மீனவ நண்பன் என்று படங்களுக்கு பெயர் சூட்டி, தன்னை ஏழைகளில் ஒருவன் என்று அனைவரையும் உணரவைத்தார்.
'தரை மேல் பிறக்க வைத்தான்
எங்களைத் தண்ணீரில்
பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான்
பெண்களைக் கண்ணீரில்
குளிக்க வைத்தான்'
- என்று, படகோட்டி படத்தில் மீனவர்களின் துயரத்தைப் பாடியதன் மூலம் மீனவர்களின் தலைவராகவே மாறினார்.
தன்னுடைய ஒவ்வொரு சோதனையையும், சாதனையாக மாற்றிக் காட்டியவர் அவர். அதனாலே, எம்.ஜி.ஆரை தெய்வப்பிறவியாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்ட நேரத்தில், 'எம்.ஜி.ஆர்., பிழைக்கவே மாட்டார்' என்றும், 'பிழைத்தாலும் பேசவே முடியாது' என்றும் எதிரிகள் பேசினர்.
ஆனால், அந்த சோதனையையும், எம்.ஜி.ஆர்., சாதனையாக்கி காட்டினார். ஆம், கழுத்தில் கட்டு போட்டபடி, எம்.ஜி.ஆர்., சிகிச்சையில் இருக்கும் படம்தான் தமிழகம் முழுதும், 1967ம் ஆண்டு தேர்தல் சமயத்தில் ஒட்டப்பட்டன.அந்த புகைப்படத்தைப் பார்த்து பதறிய மக்கள், உதயசூரியனுக்கு ஓட்டு போட்டு அண்ணாதுரையை அரியணையில் ஏற்றினர். 1984ம் ஆண்டு எம்.ஜி.ஆருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற நேரத்தில், 'எம்.ஜி.ஆர்., உயிருடன் இல்லை. அவரது உடல் ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டு
உள்ளது' என்றெல்லாம் வதந்தி பரப்பினர்.ஆனால், தமிழக மக்களின் அன்பான பிரார்த்தனைகள் மூலம் அந்த சோதனையையும் வென்று, மருத்துவமனையில் இருந்தபடியே ஆட்சியைப் பிடித்தார். இப்படி, ஒவ்வொரு தோல்வியின் போதும் எம்.ஜி.ஆர்., வீழ்ந்து விட்டார் என்று எதிரிகள் நினைக்க, முன்னிலும் வீரியமாக எழுந்து, சாதனை படைத்தார்.
வெற்றி மேல் வெற்றி
அண்ணாதுரையின் மறைவுக்குப் பின், கருணாநிதியை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியவரும் எம்.ஜி.ஆர்., தான். தி.மு.க.,வினரின் சொத்து கணக்கை கேட்டதற்காக, கட்சியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்ட நேரத்தில், தமிழகம் முழுதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
நல்லவர்கள், நாணயமானவர்கள், நியாயம், தர்மத்துக்கு கட்டுப்பட்டவர்கள், நேர்மையாளர்கள், கடவுள் பக்தியும், மனசாட்சியும் உள்ள நடுநிலை மக்கள், அர்ப்பணிப்பு குணமிக்க தொண்டர்கள் அனைவரும் எம்.ஜி.ஆரின் பக்கம் நின்றனர். அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., தோற்று வித்த நேரத்தில், ஆளும் கட்சியான தி.மு.க., காமராஜர் தலைமையிலான காங்கிரஸை மீறி வெற்றி பெற முடியுமா என்று பலரும் சந்தேகப்பட்டனர்.
ஆனால், மக்களின் பேராதரவுடன், தொடர்ந்து, 10 ஆண்டுகள் தோல்வியே சந்திக்காமல், முதல்வராக பதவி வகித்தார். அந்த மக்களும், தொண்டர்களும் தான் இன்றுவரை, அ.தி.மு.க., என்ற மாளிகையின் அஸ்திவாரமாக திகழ்கின்றனர்.ஏழை மக்களுக்காக எதையும் செய்வதற்கு எம்.ஜி.ஆர்., தயாராக இருந்தார். ரேஷன் அரிசி விலையை அவரது அரசு ஏற்றவில்லை என்ற காரணத்தால், மத்திய தொகுப்பில் இருந்து அரிசி தருவதை, மத்திய அரசு நிறுத்தியது. உடனே, பொங்கியெழுந்து உண்ணாவிரதம் இருந்தார்.
மத்திய அரசுக்கு எதிராக முதன் முதலாக உண்ணாவிரதம் இருந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., தான். உடனே மத்திய அமைச்சர் ஓடோடி வந்து, உண்ணாவிரதத்தை முடித்து வைத்தது வரலாறு.சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து, பணி பாதுகாப்பின்றி புறக்கணிக்கப்பட்ட தொழிலாளர் வர்க்கத்தின் மீது முதன்முதலாக அக்கறை காட்டியவர் எம்.ஜி.ஆர்., தான். ஒழுங்குபடுத்தப்படாத தொழிலாளர்களாக இருந்த மீனவர், நெசவாளர், பனையேறுவோர், கட்டடத்
தொழிலாளர்.
கை வண்டி இழுப்போர், மாட்டு வண்டி ஓட்டுவோர், பீடி சுற்றுவோர், சுமை ஏற்றி இறக்குவோர், மண் பாண்டத் தொழிலாளர்கள் என 60 வகையான தொழில் செய்து வந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களை ஒன்றிணைத்து, இந்தியாவிலேயே முதன் முதலாக
நல வாரியங்கள் அமைத்து, அவர்கள் வாழ்க்கையில் ஒளியேற்றினார் அவர்.திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றாலும், தன்னை ஆன்மிக அரசியல்வாதியாகவே அடையாளப்படுத்திக் கொண்டார். அன்னை மூகாம்பிகையை தன்னுடைய அன்னை என்றார்.
அதேநேரம் அனைத்து மதங்களையும் சமமாகவே மதித்தார். நாகூர் தர்கா அருகே ஒரு கூட்டத்தில் பேசிய எம்.ஜி.ஆர்., 'நான் கைலி கட்டாத முஸ்லிம், சிலுவை அணியாத கிறிஸ்துவன், திருநீறு அணியாத இந்து...' என்று உணர்வுபூர்வமாகப் பேசினார்.
கொடுத்து சிவந்த கரம்
நடிகர், முதல்வர் என்பதைவிட, எம்.ஜி.ஆர்., என்றாலே ஞாபகத்துக்கு வருவது, அவரது வள்ளல் தன்மை தான்.
'இருந்தாலும் மறைந்தாலும்
பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்'
- என்று, பணம் படைத்தவன் படத்தில் பாடியது போலவே, தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர். கண்டியில் பிறந்த எம்.ஜி.ஆர்., தமிழகத்தின் கும்பகோணத்திற்கு வந்து வயிற்றுப் பிழைப்புக்காக நடிக்கத் துவங்கிய காலத்திலேயே, சக கலைஞர்களுக்கு உதவி செய்யத் துவங்கினார்.
கொடைத்தன்மை அவரது ரத்தத்திலே ஊறிப்போயிருந்தது.
இடது கை கொடுப்பது, வலது கைக்கு தெரியக்கூடாது என்று நினைக்கக் கூடியவர். அதேபோன்று நேரம், இடம் பார்க்காமல் மனதிற்குத் தோன்றியதும் அள்ளிக் கொடுப்பவர். அதனால் தான், 'அடுப்பில் உலை வைத்துவிட்டு எம்.ஜி.ஆர்., வீட்டுக்கு நம்பிக்கையுடன் செல்லலாம். உலை கொதிக்கும் முன்பு உதவி கிடைத்துவிடும்' என்பர்; அது உண்மையே.அவரது வள்ளல் தன்மைக்கு எத்தனையோ சான்றுகளை சொல்ல முடியும். அவை எல்லாவற்றையும் அடுக்குவதைவிட, 1961ம் ஆண்டு ரிக் ஷா தொழிலாளர்களுக்கு மழை கோட்டு வழங்கும் விழாவில், அண்ணாதுரை பேசியது மட்டுமே போதுமானது.
'புயல் மழையால் - சேதம் வரும் இடங்களில் எல்லாம், எங்கள் புரட்சி நடிகர் உதவியை காணலாம். தன்னைத் தேடி வருகிறவரின் கண்ணீரைத் துடைக்கிறவன் வள்ளல். ஆனால், எம்.ஜி.ஆர்., அப்படியல்ல. சமுதாயத்தில் துன்பப்படுபவன் எங்கே இருக்கிறான் என்று தேடிப் போய், அவன் கண்ணீரைத் துடைத்துக் கைகொடுக்கிற எம்.ஜி.ஆர்., வள்ளலுக்கெல்லாம் வள்ளல்' என, பாராட்டினார் அண்ணாதுரை.
இப்படியொரு தனிமனிதப் பண்பு, கலைத்திறன், நிர்வாகத்திறன், ஏழைகளிடம் கனிவு, ஊழல் இல்லாத மக்களாட்சி, தனக்கென சொத்து சேர்க்காத குணம், வள்ளல் தன்மை, அறம் சார்ந்த வாழ்க்கை, உழைத்து சம்பாதித்த சொத்தை மக்களுக்கு எழுதிக் கொடுத்தது போன்ற அரிய பண்புகளை, ஒரு சாதாரண மனிதனிடம் காண இயலாது என்பதால் தான், அவரை அவதார புருஷர் என்கிறேன்.
காவிய வள்ளல் கர்ணன், கடையெழு வள்ளல்கள் போன்று, காலத்தை வென்ற கலியுக வள்ளல் எம்.ஜி.ஆர்., எனும் அவதார புருஷர் அவதரித்த தினம் இன்று. திருக்குறள் முக்காலத்துக்கும் ஏற்ற நுாலாக எப்படி திகழ்கிறதோ, அதுபோன்று எம்.ஜி.ஆரின் புகழ், எக்காலமும் இம்மண்ணில் வாழும்.சைதை சா. துரைசாமிசென்னை மாநகர முன்னாள் மேயர்