Monday, January 18, 2021

மொய் நோட்டு எதற்கு.. கூகுள் பே இருக்கு..! வைரலாகும் புதுமண தம்பதியரின் புது ஐடியா..!!


மொய் நோட்டு எதற்கு.. கூகுள் பே இருக்கு..! வைரலாகும் புதுமண தம்பதியரின் புது ஐடியா..!!

Updated : ஜன 17, 2021 20:15 | Added : ஜன 17, 2021 20:13 

மதுரையில் திருமண வீட்டில் மொய் பணத்தை வசூல் செய்ய கூகுள் பே, போன் பே போன்ற டிஜிட்டல் முறையில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த புது ஐடியா சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருமணங்கள் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்பார்கள். அதிலும் உறவினர்கள் சூழ, பெற்றவர்கள் முன்னிலையில் நடைபெறும் திருமணங்கள் உண்மையில் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது தான். மேலும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் மொய்பணம் வழங்குவது நமது கலாச்சாரத்தில் மறுக்க முடியாதது. இந்த நிலையில் மதுரையில் நடந்த ஒரு திருமண விழாவில் மொய்பணம் வழங்குவதில் சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த ஜெயந்தி - ஜெகதிஸ்வரன் ஆகியோரது மகள் சிவசங்கரிக்கும், மதுரை பாலரெங்கபுரம் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் - சாந்தி ஆகியோரது மகன் சரவணன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் இவர்களின் திருமணம் மதுரை கான்பாளையம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ஞாயிறன்று நடைபெற்றது.

தற்போது கொரானா பரவல் உள்ள நிலையில் அரசும் பல்வேறு விதிமுறைகளையும், கட்டுபாடுகளையும் அறிவுறுத்தியுள்ளது. மக்கள் அதிகமானோர் கூட்டமாக கூடுவதை தவிர்க்க அரசு அறிவுறுத்தி வரும் இந்த நிலையில், திருமணத்திற்கு வரமுடியாத முதியவர்கள், உடல் நலம் குன்றியவர்கள், வெளியூரில் வசிப்பவர்கள் ஆகியோர் திருமண தம்பதிகளுக்கு மொய் செலுத்துவதற்கு சிரமப்பட்டு வந்தனர். இதற்கு வசதியாக புதிய ஐடியாவை மதுரையில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அதாவது திருமண பத்திரிக்கையிலேயே ஆன்லைன் பணப்பரிமாற்ற செயலிகளான கூகுள் பே மற்றும் போன் பே ஆகியவற்றின் பார்க்கோடு விவரங்களை அச்சிட்டிருந்தனர்.அதோடு திருமண மண்டபத்தில் மணமகள் பெயர் மற்றும் தொடர்பு எண் கொண்ட கூகுள் பே, போன் பே விவரங்களையும் பார் கோடுடன் வைத்திருந்தனர்.

இன்று ஆன்லைன் பரிமாற்றங்கள் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது இந்த நிலையில் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் உறவினர்கள் தங்கள் மொய்பணத்தை செலுத்த வசதியாக கல்யாண வீட்டார் இந்த ஏற்பாடு மதுரை மக்களிடையே சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 14,11,2024