கற்றதனால் ஆய பயன் என்கொல்...!
DINAMANI
தமிழ்நாட்டில் உள்ள 224 தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஒரே நேரத்தில் 353 பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்டவற்றில் பணிபுரிந்து வருவதாக அறப்போர் இயக்கம் வெளியிட்ட தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 480-க்கும் மேற்பட்ட இணைப்பு பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வில் பங்கேற்க இந்தக் கல்லூரிகள், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் (ஏஐசிடிஇ) அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். போதிய உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வகங்கள், பேராசிரியர்கள் பணியிடங்கள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டு அங்கீகாரம் வழங்கப்படும்.
2023-24 கல்வியாண்டில், 224 தனியார் கல்லூரிகளில் இந்த அங்கீகாரம் பெற 353 பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்டவற்றில் பணிபுரிவதாக கணக்கு காட்டப்பட்டதாக அறப்போர் இயக்கம் என்ற தன்னார்வ அமைப்பு குற்றஞ்சாட்டியது. இந்த முறைகேடு தொடர்பான விவரங்களை ஆதாரங்களுடன் மத்திய கல்வித் துறை அமைச்சர், ஏஐசிடிஇ, அண்ணா பல்கலைக்கழகம், தமிழக ஆளுநர், முதல்வர், உயர்கல்வித் துறை அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி உள்ளது. இதுகுறித்து விசாரிக்க வலியுறுத்தி லஞ்ச ஒழிப்புத் துறையிடமும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைகேடு குறித்த குற்றச்சாட்டு வெளிவந்தவுடன் அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பேராசிரியர்களின் பெயர், பிறந்த தேதி, ஆதார் எண் ஆகியவற்றைப் பொருத்திப் பார்த்ததில் 189 பேர் தங்கள் ஆதார் எண்ணை மாற்றிப் பதிவு செய்து ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் பணியாற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 52,500 பேராசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 2,000 ஆசிரியர் பணியிடங்களில் இந்த 189 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் ஒருவர் 32 கல்லூரிகளில் பணியாற்றிவருவது ஆய்வில் தெரிய வந்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழக அப்போதைய துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் கூறியுள்ளார். சிலர் தங்களது அடையாளம் தெரியக் கூடாது என்பதற்காக பல்வேறு காலகட்டங்களில் எடுத்த புகைப்படங்களை
அளித்துள்ளனர்.
இந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க ஏஐசிடிஇ சார்பில் தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் உஷா நடேசன், அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் பேராசிரியர் என்.குமாரவேல், தமிழக அரசு சார்பில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக ஆணையர் டி.ஆபிரகாம் ஆகிய மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகள் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு 295 கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பேராசிரியர்கள் பல கல்லூரிகளில் பணிபுரிவது என்பது இப்போதுதான் நடைபெறுகிறது என்று கருத வேண்டாம். "நான் பணியில் இருந்த காலத்திலேயே இத்தகைய சம்பவங்கள் நடைபெற்றன. அப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒரு கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. சில கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அளவு குறைக்கப்பட்டது' என்று அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த சூரப்பா அண்மையில் குறிப்பிட்டுள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கது.
தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகள் தொடங்க தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டவுடன் புற்றீசல் போல கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இந்தக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சுமார் 1.80 லட்சம் இடங்கள் உள்ளன. நடப்புக் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில் 2 கட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் வெறும் 4 கல்லூரிகளில் மட்டுமே அனைத்து இடங்களும் நிரம்பி உள்ளன. 197 கல்லூரிகளில் 10 சதவீதமும், 58 கல்லூரிகளில் ஒரு சதவீதமும் மட்டுமே இடங்கள் நிரம்பி உள்ளன. 30 கல்லூரிகளில் ஒருவர் கூட சேரவில்லை.
கடந்த சில ஆண்டுகளாகவே பொறியியல் கல்லூரிகளில் 55 ஆயிரம் முதல் 60 ஆயிரம் இடங்கள் பூர்த்தி ஆவதில்லை. பல கல்லூரிகளில் தேர்ச்சி விகிதமும் மெச்சும்படியாக இல்லை. மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள கல்லூரிகளில் வருவாய் இல்லாத காரணத்தால் பேராசிரியர்கள் பணிபுரிவதாகக் கணக்கு காட்டும் போக்கு அதிகரித்து வருகிறது.
அதிகமான பொறியியல் கல்லூரிகளில் போதிய கட்டமைப்பு வசதிகள், தகுதியான பேராசிரியர்கள் போன்றவை இல்லாததால் தரவரிசையில் முன்னணியில் உள்ள சில பொறியியல் கல்லூரிகளில் படிப்பவர்களைத் தவிர மற்றவர்களுக்குத் தகுந்த வேலைவாய்ப்பு கிட்டுவதில்லை என்பதே எதார்த்தம்.
ஆசிரியர் பணி என்பது மற்ற பணிகளைப் போன்றது அல்ல. மற்ற பணிகளில் ஒழுக்கக்கேடு நிலவினால் அதனால் ஏற்படும் பாதிப்பு தொடர்புடையவரோடு போய்விடும். ஆனால், ஆசிரியரே முறைகேடுகளில் ஈடுபடுவாரேயானால் அதனால் மாணவர் சமூகமே பாதிக்கப்படும்.
எனவே, முறைகேடு செய்து பேராசிரியர் ஆனவர்கள் வாழ்நாள் முழுவதும் வேறு எந்தக் கல்வி நிறுவனத்திலும் பணியில் சேர முடியாதபடி தடை விதிக்கப்பட வேண்டும். அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவும் இதையே பரிந்துரை செய்துள்ளது. மேலும் முறைகேட்டில் தொடர்புடைய கல்வி நிறுவனங்களில் அடுத்த கல்வியாண்டு முதல் அசல் பேராசிரியர் எண்ணிக்கைக்கு ஏற்பவே மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
இத்துடன், கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் குழுவினரும் முறையாக ஆய்வு செய்து அனைத்துத் தகுதிகளும் இருந்தால் மட்டுமே அங்கீகாரம் அளிக்க வேண்டும்.
இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறினால், உயர்கல்வி சேர்க்கையில் நம்பர் 1 மாநிலமாக தமிழகம் இருந்தாலும், தமிழகத்தில் பெறப்படும் பொறியியல் பட்டம் மரியாதை இழக்கும் நிலைமை ஏற்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.