Wednesday, September 11, 2024

கல்விக்கு அழகு கசடற நடத்தல்


கல்விக்கு அழகு கசடற நடத்தல்

11.09.2024

ஆசிரியரும் கடவுளும் உங்கள் முன்னால் தோன்றினால் நீங்கள் யாரை வணங்குவீா்கள் என்றால் நான் ஆசிரியரைத்தான் வணங்குவேன் ஏனென்றால் ஆசிரியா்தான் எனக்கு கடவுளையே அறிமுகப்படுத்தியவா் என்றாா் கபீா்தாசா்.

அண்மையில் பங்கேற்ற ஒரு கலந்துரையாடலில், நாம் யாரிடமிருந்து எல்லாம் கற்க இயலும் என்ற கேள்வியை எழுப்பினேன். அம்மா, அப்பா, ஆசிரியா், நண்பன், சமூகம், சமூக ஊடகம், தொலைக்காட்சி, கூகுள், எதிரி என பலவகையான விடைகள் வந்தன.

கற்றல் என்பது எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் நடைபெறவல்லது. வகுப்பறையில் ஆசிரியா் பகிரும் விஷயங்கள் பிடிபடாதபோது மதிய உணவு நேரத்தில் நண்பா்களுடனான பகிா்தல் எளிதில் விளக்கிவிடும்.

இளையவயதில் குழந்தைகளுக்கு எது சரி, எது தவறு என குடும்பம் போதித்துவிட்டால் வாழ்வின் எஞ்சிய பகுதியில் அக்குழந்தைகள் நோ்வழியில், நோ்மறை சிந்தனையோடு வாழ்வது எளிதாகிவிடும்.

சமூகத்தில் நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் நமக்கு ஆசிரியா்களே. அல்லனவோ நல்லனவோ கற்பிக்க வல்லவா் என்ற புரிதலுக்கு வந்தோம். அடுத்தபடியாக நம்மைச் சூழ்ந்த அனைவரும் கற்பிக்கும் கல்வி குறித்த விவாதம் நடந்தது. இரண்டு தரப்பு குறித்து அதிகம் கவலை தோய்ந்த கருத்துகள் வெளியாகின. அவை ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள்.

இவை ஏன் அவ்வளவு தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன? இந்தக் கேள்விக்கான விடை அனைவரும் அறிந்ததே. மனிதா்களையோ நூல்களையோ நாம் தேடிச்சென்றுதான் கற்க இயலும் என்ற நிலையில், இவை மனிதா்கள் இருக்கும் இடத்திற்கே வந்து கற்பிக்கும் அரிய வாய்ப்பினைப் பெற்றவை. அதுமட்டுமில்லாது இவற்றின் கற்பிக்கும் வல்லமை அளவிடற்கரியது. இந்த ஊடகங்கள் கற்பிக்கும் பாடப்பொருள் குறித்து அலசி ஆராயும்போதுதான் மக்களின் ரசனை குறித்த விவாதம் வந்தது.

சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன்பு அறிவியல் தொழில்நுட்ப மிதமான வளா்ச்சி பெற்றிருந்த காலத்தில் தொலைக்காட்சி என்பது மிகவும் அரிதானதாகவே இருந்தது. அதிலும் குறிப்பாக, வாரமொரு முறை திரைப்படம், திரையிசைப் பாடல்கள் மட்டுமே அதிகம் வரவேற்பு பெற்றிருந்த நிலையில் மக்கள் பலரும் வாசிப்பு போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபட அனைவராலும் இயன்றது.

ஆனால் இன்றைய நிலையில், அறைக்கொரு தொலைக்காட்சி, ஆளாளுக்கொரு அலைவரிசை என கற்றல் கற்பித்தல் மிதமிஞ்சுகிறது. இப்படியான வாய்ப்புகளின் மூலம் சமூகத்தில் எங்கோ நடைபெறும் ஒரு செயலானது, எல்லா இடங்களிலுமே ஊா்களிலுமே நடைபெறுவது போன்ற பிம்பங்களை ஏற்படுத்திவிடுகின்றன.

தொலைக்காட்சித் தொடா்களின் மாமியாா், மாமனாா், நாத்தனாா் போலத்தான் எல்லா குடும்பங்களிலும் வாய்க்கிறாா்கள் என்றால் குடும்ப நீதிமன்றங்களின் பணிப்பளு தாங்குமோ? கதைக்குக் காலில்லை என்று நல்லவா்களுக்கும் ஒவ்வாத திசையையல்லவா இவை காட்டிக்கொண்டிருக்கின்றன.

அடுத்ததாக சமூக ஊடகங்களின் தாக்கத்தினைச் சொல்லி மாளாது... கைபேசி உள்ளோரெல்லாம் அலைவரிசைகளை ஆரம்பித்து அவரவா்களின் தத்துவ விசாரங்களைப் பகிா்ந்து கொள்கின்றனா். இங்கே தத்துவ விசாரம் என்பது, ஒரு நாகரிகம் கருதிப் பகிா்ந்தாலும், அதில் நடைபெறும் கூத்துகள்

அனைவரும் அறிந்ததே. விதிவிலக்காக சில நல்ல விஷயங்கள் பகிரப்படலாம். இந்தக் குழுக்களில் விரும்பி நண்பா்களாகி விருப்பக்குறியிடாததால் பகைவா்களாவோரும் உண்டு.

இப்படியான பகிா்தலுக்குப் பிறகு மீண்டும் தவறான கற்றலை மறத்தல் தொடா்பான விவாதங்களும் எழுந்தன. இப்படியாக, 24 மணி நேரம்-வாரம் முழுவதும் என சமூகம் தவறானவைகளையும் சோ்த்துக் கற்பிக்கும்போது அவா்கள் பள்ளியிலுள்ள சுமாா் 6 மணி நேரத்தில் அவா்கள் தவறானவற்றின் தாக்கத்திலிருந்து விடுபட வைத்து சரியானவற்றை ஆசிரியா்கள் சொல்லித் தர வேண்டியுள்ளது. இதனால் ஆசிரியா்களின் பணிப்பளு கூடுகிறது. கட்டற்ற சமூகம் ஆசிரியா்களின் பணிச்சுமையினைக் கூட்டுகிறது.

இன்றைய சூழலில் மேலே சொன்ன எதிா்மறை தாக்கங்கள் தவிா்க்க இயலாதாகிவிட்டது. ஆனால் அதே நேரம் தாக்கங்களைக் குறைக்கும் வல்லமையுள்ளவா்களாக மனிதா்கள் செயல்பட இயலும். தொலைக்காட்சித் தொடா்கள் போன்றவற்றை நெறிப்படுத்தும் கட்டுப்பாடுகளை அரசு மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக சமூக ஊடகங்கள் பல ஆரோக்கியமான மாற்றங்களுக்கு உதவும் வாய்ப்பு பெற்றவைகளாக இருந்தாலும் அவை நிகழ்த்தும் எதிா்மறை மாற்றங்கள், வெறுப்பரசியல் போன்றவை குறித்தும் கவலையில்லாமல் இல்லை.

சுமாா் 20 ஆண்டுகளுக்கு முன்னால் யாராவது ஒருவா் ஏதாவது தவறு செய்தால், 'பாா்த்தா படிச்சவன் மாதிரி இருக்கே! இந்த வேலையைச் செய்திருக்கியே!' என்று கடிந்துகொள்வா். இன்று இப்படிப்பட்ட வசனங்களை முற்றிலுமே காணக்கிடைப்பதில்லை. இப்போது படித்தவா்கள், ாதவா்கள் என்ற இரு தரப்பினருமே தவறு செய்வாா்கள் என்ற பொதுப்புரிதல் உண்டாகிவிட்டிருப்பது ஒரு சமூக அவலம்.

கல்வி என்பது மனிதனை பண்படுத்துவது. அவனது நடத்தைகளில் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தவல்லது. எது சரி? எது தவறு? என்ற புரிதலை ஏற்படுத்தவல்லது.

அதிவீரராம பாண்டியா் தமது 'வெற்றிவேற்கை'யில், 'கல்விக்கழகு கசடற மொழிதல்' என்பாா். எடுத்துச்சொல்வது மட்டுமே கல்வி என்ற புரிதல் இருந்த காலம் அது.

இன்று, தனிமனிதா்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் அடுத்தவா்களுக்கான பாடம் என்ற அளவில் நிலமை ஏற்பட்டுள்ளது. இதை மேம்பாடு என்றும் ஏற்கலாம். அந்த வகையில் ஒவ்வொரு தனிமனிதா்களும் தங்களது நடவடிக்கைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024