Saturday, November 11, 2017


விவேக் குவித்த சொத்துகள்; மலைத்துப்போன வருமான வரித்துறை..!

MUTHUKRISHNAN S


சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன் விவேக் குவித்துள்ள சொத்துகள்; கறுப்புப்பணம் வெள்ளையாக்கப்பட்டது போன்றவை குறித்து சோதனையில் ஈடுபட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திகைத்துப்போனதாகக் கூறப்படுகிறது.




விவேக்கின் அலுவலகம் மற்றும் வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் வளாகத்தில் உள்ள ஜாஸ் சினிமாஸ் வளாகத்தில் அதிகாரிகள் நடத்திவரும் சோதனையின்போது, தோண்டத் தோண்ட சொத்துகள் வாங்கிக் குவித்துள்ள விவரங்கள்; பினாமிகளின் பட்டியல் கிடைத்துள்ளன. அதை வைத்துக்கொண்டு விவேக்கிடம் கடந்த இரண்டு நாள்களாக துருவித்துருவி வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சசிகலாவின் அண்ணன் ஜெயராமன் - இளவரசி தம்பதியின் மகன் விவேக். மன்னார்குடி வகையறாக்களில் சில ஆண்டுகளிலேயே பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபர் என்று இவர் தன் 25 வயதிலேயே உச்சஸ்தானத்துக்குச் சென்றார். 2015-ம் ஆண்டு வேளச்சேரி பீனிக்ஸ் மால் வணிக வளாகத்தில் உள்ள 11 தியேட்டர்களை ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் கையகப்படுத்தியது. அப்போதே இதுபற்றி தி.மு.க தலைவர் கருணாநிதி பல கேள்விகளை எழுப்பி அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், ''இந்தச் சொத்துகளை வாங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டவர்கள், ஏற்கெனவே லஞ்ச ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள நிலையில், இந்தப் புதிய சொத்துக்குவிப்பு குறித்து என்ன பதில் என்று நாடே எதிர்பார்க்கிறது'' எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.



‘அந்தத் தியேட்டர்களை 1,000 கோடி ரூபாய்க்கு விவேக் வாங்கிவிட்டார்' என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால், அந்தத் தியேட்டர்களை விலைகொடுத்து வாங்கவில்லை; ஐந்தாண்டுகளுக்கு குத்தகைக்கு மட்டுமே அவர் எடுத்துள்ளதாக அறிக்கைகள் வெளியாகின. இந்தத் தியேட்டர்கள் மட்டுமல்லாது விவேக்கின் கட்டுப்பாட்டில் மொத்தம் 136 தியேட்டர்கள் உள்ளதாகவும் புகார் எழுந்தது. இதுபற்றியெல்லாம் வருமான வரித்துறைக்குப் புகார்கள் சென்றன. மேலும், ஜாஸ் சினிமா என்ற நிறுவனம் பல முன்னணி நடிகர்களின் படத்தை விநியோகித்துள்ளது. தமிழ் திரைத்துரையில் ஜாஸ் சினிமா முக்கிய நிறுவனமாக உள்ளது. திரைப்பட விநியோகத்தில் நடந்த போலியான பரிவர்த்தனைகள் குறித்தும் வருமான வரித்துறைக்குப் புகார் சென்றிருந்தது.

இப்போது நடக்கும் வருமான வரித்துறை சோதனையில் ஜாஸ் சினிமா, 136 திரையரங்குகள் பற்றி எல்லாம் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். 'ஐந்தாண்டுக்கு பீனிக்ஸ் சிட்டியில் தியேட்டர்களைக் குத்தகைக்கு எடுக்க விவேக்குக்கு பணம் எப்படி வந்தது? அவரின் வியாபாரக் கூட்டாளிகள் யார்' என்று அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு விவேக், 'லக்ஸ் திரையரங்கத்தில் உள்ள புரொஜக்டர், ஃபர்னிச்சர், ஏர் கண்டிஷனர்கள் போன்றவற்றை அடமானம் வைத்து 42.50 கோடி ரூபாய் கடன் வாங்கித்தான், அந்தத் தியேட்டர்களை குத்தகைக்கு வாங்கினேன்' என்று சொல்லியிருக்கிறார். வங்கியில் கடன் வாங்கியது குறித்த ஆவணங்களையும் காட்டியிருக்கிறார். இந்தப் பதிலைக் கேட்டவுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சிரித்துவிட்டார்களாம். வேளச்சேரி பீனிக்ஸ் மால் தியேட்டர்களின் வியாபார மதிப்பு என்ன என்று கணக்குப் போட்டுக்காட்டி இருக்கிறார் வருமான வரித்துறை அதிகாரி ஒருவர்.

வேளச்சேரியில் உள்ள தியேட்டர்கள் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் வெள்ளையாக்கப்பட்டிருப்பது வருமான வரித்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், பினாமிகள் பெயரில் வாங்கிக் குவிக்கப்பட்டுள்ள சொத்துகளின் பட்டியலும் வருமான வரித்துறையின் சோதனையில் சிக்கியிருக்கிறது.



மேலும், விவேக்கின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்திய சோதனையில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் குறித்த விவரங்கள் கிடைத்துள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. '2015-ம் ஆண்டே இந்த ஜாஸ் சினிமாஸ் பிரச்னை எழுந்தது. எதிர்க்கட்சிகள் அப்போதே இப்பிரச்னையை எழுப்பி அறிக்கைகள் வெளியிட்டன. ஆனால், அப்போது மௌனமாக இருந்த வருமான வரித்துறை மற்றும் மத்திய புலனாய்வுத்துறை இப்போது சுறுசுறுப்படைந்திருப்பது ஏன்' என்று விவேக்குக்கு நெருக்கமானவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பல மாதங்களாகக் கண்காணித்து ஆய்வு செய்த பின்னர், தகவல்களைச் சேகரித்துதான் தற்போது கறுப்புப் பண மீட்பு சோதனையில் ஈடுபட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் சொல்கிறார்கள்.

எப்படியோ, வரி ஏய்ப்பு மற்றம் கறுப்புப் பணம் வைத்திருப்போருக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுத்தால் சரி..!

No comments:

Post a Comment

NEWS TODAY 16.09.2024