Sunday, November 26, 2017

இறந்த பிறகு கைரேகை மாறுமா... தடயவியல் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்!

 ஜி.லட்சுமணன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நீண்ட நாள்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில்தான் திருப்பரங்குன்றத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் ஏ.கே.போஸை அ.தி.மு.க வேட்பாளராக நிறுத்த முடிவுசெய்யப்பட்டது. அதற்கான வேட்புமனுவில் ஜெயலலிதாவிடமிருந்து கைரேகை பெறப்பட்டது. இது அந்தச் சந்தர்ப்பத்திலேயே பல்வேறு சந்தேகங்களையும் விவாதங்களையும் கிளப்பியது. எழுதப் படிக்கத் தெரியாதவர்களிடம்தான் ஆவணங்கள், கடிதங்கள், ரசீதுகளில் கைரேகை வாங்கும் நடைமுறையிருக்கிறது. ஆனால், உடல்நலக்குறைவை காரணம் காட்டி ஜெயலலிதாவிடம் கையெழுத்துப் பெறாமல், கைரேகை வாங்கப்பட்டது. அவர் வைத்த கைரேகை உயிருடன் இருக்கும்போது அவர் வைத்ததுதானா என்ற சந்தேகத்தையும் பொதுவெளியில் கிளப்பியது.

இந்த நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, தமிழக அரசு சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அதில், நீதிபதி ஆறுமுகசாமியிடம் தி.மு.க மருத்துவரணி, மாநிலத் துணைத் தலைவர் சரவணன் ஆஜராகி விளக்கமளித்தார். அந்த விசாரணையின்போது, முக்கியமாக அவர் வைத்த ஆதாரம், ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பானது. அதாவது, ‘உயிருடன் உள்ளவர்களிடம் கைரேகை எடுத்தால் மட்டுமே வரி வரியான கோடுகள் தெரியும். ஜெயலலிதாவின் கைரேகையில் அதுபோன்ற கோடுகளே இல்லை. எனவே, அவர் அக்டோபர் 27-ம் தேதிக்கு முன்னதாகவே இறந்திருக்கலாம்’ என்று அந்த விசாரணையில் குறிப்பிட்டிருந்ததாக செய்தியாளர்களிடம் சரவணன் கூறியிருந்தார்.

உண்மையில், ஒருவர் இறந்த பிறகு அவருடைய கைரேகையைப் பயன்படுத்த முடியுமா...  இறந்தவுடனே அவருடைய ரேகைகளும் மறைந்துபோகுமா. இந்தச் சந்தேகத்தை தடயவியல் நிபுணர் எஸ்.ரகு ராகவேந்திராவிடம் கேட்டோம்.

“தாயின் கர்ப்பப்பையில் கருவாக இருக்கும்போதே நம் விரல்களின் ரேகை உருவாகிவிடும். கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தைக்கு 17-வது வாரத்தில் கைரேகைகள் தோன்றும். இந்த ரேகை அமைப்பு தோலின் புறத் தோல் (Epidermis), அடித் தோல் (Dermis) ஆகிய தோலின் இரு அடுக்குகளிலும் பதிந்திருக்கிறது. இதை பிளாஸ்டிக் சர்ஜரி மூலமாகக்கூட மாற்ற முடியாது. அதேபோல, ஒருவருடைய விரல் ரேகை அமைப்பு, மற்றொருவருடைய விரல் ரேகை அமைப்புடன் ஒத்திருக்காது. ஒரே கருவில் உருவான இரட்டைக் குழந்தைகளுக்குக்கூட ரேகைகள் ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொரு கைரேகையும் தனித்தன்மை கொண்டது. ஒருவரின் வாழ்நாள் முழுக்க அவருடைய ரேகையில் பெரிதாக மாற்றம் இருக்காது. வயது, கைகளைப் பயன்படுவதற்கேற்ப கைரேகையில் தேய்மானம் ஏற்படலாம்; ஆனால், மாற்றம் ஏற்படாது.

இறந்தவரின் உடலில் ரத்த ஓட்டம் நின்றுபோன பிறகு, அவரின்  உடல் சிதைவடையத் தொடங்கிவிடும். வியர்வைச் சுரப்பிகளும் வேலையை நிறுத்திவிடும். இந்த நேரத்தில் அவருடைய கைரேகையை எடுத்தால் அவை கண்டிப்பாகத் துல்லியமாக விழாது. அதாவது, இறந்த பிறகு நேரமாக, நேரமாக இறந்தவரின் கை ரேகையின் துல்லியத்தன்மை குறைந்துகொண்டே வரும். குறிப்பாக, குறுக்கும் நெடுக்குமாக உள்ள ரேகைக் கோடுகள் துல்லியமாக விழாது. சிலருக்கு இயல்பாகவே, உடலில் அதிக வியர்வை வெளியேறும் தன்மையான உடல்வாகு இருக்கும். இப்படிப்பட்டவர்களின் ரேகையை எடுக்கும்போதுகூட கோடுகள் சரியாக விழாமல் போகலாம். ஆனால், நவீன மருத்துவத் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி, இறந்தவர்களிடமிருந்தும், மிகத் துல்லியமான கைரேகையைப் பெற முடியும். இதை ஒரு தடயவியல் நிபுணரால் மட்டுமே அடையாளம் காண முடியும்

ஒருவேளை, 'வியர்வை அதிகம் வெளியேரும் உடல்வாகு' காரணத்தால்தான் ரேகை விழவில்லை என்று சந்தேகம் வந்தால், இறந்தவரின் உடல்வாகு எப்படிப்பட்டது என்பதையும் தடயவியல் நிபுணரால் கண்டறிய முடியும். அதாவது, அதுபோன்ற உடல்வாகு உள்ளவர்களிடம் ரேகை பெறும்போது,  அவர் உயிருடன் இருந்திருந்தால், ரேகையின் தடத்துக்கு அருகே வியர்வையின் தடம் பதிந்திருக்கும். இதை மைக்ரோஸ்கோப் கருவி மூலமாக ஒரு தடயவியல் நிபுணரால் மட்டுமே அடையாளம் காண முடியும்.’’ என்கிறார் ரகு ராகவேந்திரா.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024