Sunday, November 26, 2017

யானையின் எந்தக் குணம், அதனை பாகன்களிடம் அடிமையாக்குகிறது தெரியுமா?

எம்.கணேஷ் வீ.சக்தி அருணகிரி


கேரள மாநிலம் திரிசூர் அருகே, ஆண் யானை ஒன்றைக் குளிக்க அழைத்துச்செல்ல பாகன்கள் முற்படும்போது முரண்டுபிடிக்கிறது அந்த யானை. அதை ஏற்றுக்கொள்ள முடியாத பாகன்கள் இரும்புக்கம்பியால் யானையை கடுமையாக தாக்குகிறார்கள். காலில் படுகாயமடையும் யானை நடக்க முடியாமல் ஒரு கட்டத்தில் தரையில் சாய்கிறது. மேலும், அதைத் தாக்குகிறார்கள். இந்தச் சம்பவத்தை வீடியோ எடுக்கும் ஒருவர் அதை மீடியாக்களில் கசியவிட, உடனடியாக சம்பந்தப்பட்ட யானையை பாகன்களிடம் இருந்து மீட்கிறது கேரள வனத்துறை. பாகன்களும் தண்டிக்கப்படுகிறார்கள். இந்த சம்பவம் கேரளாவுக்குப் பழகிப்போன ஒன்று என்றாலும் நமக்கு என்னவோ அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

அங்குசமும் பாகனும் :

யானை எனும் அவ்வளவு பெரிய விலங்கை நான்கு அடி உயரமே உள்ள அங்குசத்தால் ஆட்டிவைக்க பாகனால் எப்படி முடிகிறது என்ற கேள்வி அனைவருக்குள்ளும் இருக்கும். அதற்குப் பதில் யானையிடம்தான் இருக்கிறது. யானையைப் பொறுத்தவரை, தன் உடலின்மீது அதீத அக்கறை கொண்டுள்ள விலங்கு. தன் உடலைப்பற்றி அதிக அக்கறை கொண்டிருப்பதோடு, தனக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்றும் நினைக்கும் விலங்கு. உடலில் சிறிய காயம் ஏற்பட்டாலும் அதை அடிக்கடி தனது துதிக்கையால் தொட்டுப்பார்த்து வருத்தப்படும்.



அவ்வளவு சென்சிட்டிவாக இருக்கும் அதன் குணம்தான் அதனைப் பாகனுக்கு அடிபணிய வைக்கிறது என்பதே உண்மை. பாகன்கள் கையில் இருக்கும் அங்குசம் கூர்மையான முனையைக் கொண்டது. அதன் கூர்மை யானையின் கடினமான தோலையும் துளைத்துவிடும். அது யானைக்கும் தெரியும். (இரண்டு மூன்று முறை அதைக் குத்தி காயப்படுத்தியிருப்பார்கள்.!) எங்கே அங்குசத்தால் குத்தி தன்னை காயப்படுத்திவிடுவார்களோ என்ற பயம் யானைக்கு எப்போதும் இருக்கும். அங்குசத்தின் மீது எப்போதும் ஒரு கண் வைத்துக்கொள்ளும் யானை. சொல்வதையெல்லாம் கேட்கும்.!

தன்னிலை உணராத யானைகள்:

பாகன் என்பவன் இயல்பில் அமைதியான குணம் படைத்தவனாக இருந்தாலும். ஒரு யானையைப் பழக்க வேண்டும் என்றால் முரட்டுகுணம் படைத்தவனாக யானையிடம் நடித்துதான் ஆக வேண்டும். தன் எடையும், உடலும் பெரியது; தான்தான் காட்டின் ராஜா என்றெல்லாம் நாட்டில் இருக்கும் யானைகளுக்கு எங்கே தெரியப்போகிறது? அதன் பலவீனங்களில் ஒன்றுதான், யார் என்பதை யானைகள் அறியாததும், அதைப் பாகன்கள் அறிந்துவைத்திருப்பதும். அதைப் பயன்படுத்தி, பாகன்கள் தான் முரட்டு ஆள் போல யானையிடம் நடந்துகொள்வார்கள். அதுவும் சத்தமாக கத்துவார்கள்.



அதற்கு கட்டளைகளைப் பிறப்பித்துக்கொண்டே இருப்பார்கள். நட, எழுத்திரு, இங்கே வா, நில்… என்று கத்தி கத்தி சொல்லிக்கொண்டே இருக்கும்போது, ’தன்னைவிட பெரிய ஆள்போல இந்த பாகன்…’ என்று நினைத்துக்கொண்டு அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்கும். தன் பலம் என்ன என்பதை, அந்த யானையை ஒரு விநாடி கூட யோசிக்க விடமாட்டார்கள் பாகன்கள்.

எல்லோரும் பாகன்கள் ஆகமுடியாது:

வீடுதோறும், கோயில்தோறும் யானைகளை வளர்த்துவரும் கேரளாவில், ஊருக்கு பத்துப் பாகன்கள் இருப்பார்கள். சிறுவயது முதல் யானைகளுடன் பழகும் அவர்களுக்கு யானைகள் பற்றிய அனுபவ அறிவு அதிகம். சமீபகாலமாக தந்தத்துக்காக யானைகள் வேட்டையாடப்படுவதும், காடுகள் அழிக்கப்படுவதும் என யானைகளின் எண்ணிக்கை குறைந்தது. யானைகளைப் பாதுகாக்க பல கட்ட நடவடிக்கைகளில் கேரள அரசும் வனத்துறையும் இறங்கியது. அதன் ஒருபகுதியாக யானைகளைக் கையாளும் பாகன்கள் யார் என்பதையும், அவர்களுக்கான தகுதிகள் என்ன என்பதையும் நிர்ணயித்தது. அனுபவம் முதலில் பார்க்கப்படும். அதன்பின்னர் கேரள வனத்துறை சார்பாக நடைபெறும் இரண்டு நாள் பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டும். அதைத் தொடர்து நடக்கும் தேர்வில் வெற்றிபெற்றால்தான் பாகன் ஆக முடியும். வெற்றி பெற்றவர்களுக்கு கேரள வனத்துறை சார்பாக புகைப்படம் கொண்ட ஒரு சான்றிதழ் கொடுக்கப்படும். பாகன்கள் தேர்வு செய்யும் இப்பணிகளை வனத்துறையின் ‘சமூக காடுகள் பிரிவு’ கவனித்துவருகிறது. இச்சான்றிதழ் பெற்றால், கேரளாவில் எங்கு வேண்டுமானாலும் பாகனாக பணியாற்றலாம். இந்த பாகன்கள் தேர்வும் குறிப்பிட்ட சில வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படுகிறது. அவர்களுக்கான குறைந்தபட்ச சம்பளமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



இவ்வளவு விதிகளையும், கட்டுப்பாடுகளையும் பாகன்கள்மீது வனத்துறை கொண்டுவரக் காரணம் யானைகள் மீதான அக்கறைதான். சரியான நபர்கள் மட்டுமே பாகன்கள் ஆக முடியும் என்ற நம்பகத் தன்மையை இன்றுவரை காத்துவரும் கேரள வனத்துறைக்கு, நேற்று திரிசூரில் நடந்த சம்பவம் அவமானத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.! சம்பந்தப்பட்ட பாகன்கள் தண்டிக்கப்படுவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்களும் பறிக்கப்படும்.

சமூகக் கட்டமைப்பில் வாழும் யானைகளைக் காட்டில் இருந்தும், அதன் கூட்டத்தில் இருந்தும் பிரித்து தன் சுயதேவைகளுக்காக பயன்படுத்தும் மனிதர்களின் குணம் கொடூரமானது. பிடிபடும் யானையை பழக்க, முரட்டு குணத்தோடு, அடிபணியவைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பாகன்கள் நடந்துகொள்வதால்தான், இன்றுவரை அவை சொல்வதையெல்லாம் அமைதியாக கேட்டுக்கொண்டிருக்கின்றன. யானைகள் தன்னிலை உணர்ந்தால் என்ன நடக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

!

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024