Wednesday, November 29, 2017

67 வயதில் பட்டம் பெற்ற செல்லத்தாய்; வக்கீலாக போகிறார் வரலாறு படைத்த மூதாட்டி

Updated : நவ 29, 2017 00:16 | Added : நவ 28, 2017 22:58



  சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை பட்டமளிப்பு விழாவில், 67 வயது மூதாட்டி, எம்.ஏ.,
வரலாறு பட்டம் பெற்றார். கணவனை இழந்த தன்னை, மகள்கள் கைவிட்ட நிலையில்,
சட்டம் படிக்க உள்ளதாக, அவர் சூளுரைத்தார்.

திறந்தநிலை பல்கலையின், 10வது பட்டமளிப்பு விழா, சென்னையில், நேற்று நடந்தது. கவர்னர்,
பன்வாரிலால் புரோஹித், பட்டங்களை வழங்கினார். 16 ஆயிரத்து, 879 பேர், பட்டம் மற்றும்
பட்டயங்கள் பெற்றனர். இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், துணை இயக்குனர் ஜெனரல், கே.அழகுசுந்தரம், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

கவர்னர் பாராட்டு

பல்கலை துணைவேந்தர் பாஸ்கரன், வரவேற்புரை யாற்றினார். உயர் கல்வித் துறை அமைச்சர்,
கே.பி.அன்பழகன், உயர் கல்வித் துறை செயலர், சுனில் பாலிவால் ஆகியோரும் பங்கேற்றனர்.
விழாவில், சென்னை, மடிப்பாக்கம், ராம் நகர், ஏழாவது தெருவைச் சேர்ந்த செல்லத்தாய் என்ற, 67 வயது மூதாட்டி, எம்.ஏ., வரலாறு பாடத்தில் பட்டம் பெற்றார். அவருக்கு, பட்டம் வழங்கிய கவர்னர், கைகுலுக்கி பாராட்டினார்.

விருதுநகர் மாவட்டம், சாத்துாரில் பிறந்த செல்லத்தாய், துாத்துக்குடி மாவட்டம், கடம்பூரை சேர்ந்த பவுன்ராஜ் என்பவரை, திருமணம் செய்துள்ளார். தங்களின், மூன்று பெண் பிள்ளைகளை, முதுநிலை படிப்பு வரை படிக்க வைத்து, திருமணம் செய்து வைத்துள்ளனர்.'சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன்' நிறுவனத்தில், கோபாலபுரம் அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிந்த செல்லத்தாய், 2009ல், ஓய்வு பெற்றார்.

கணவர் எதிர்ப்பு

அப்போது, திறந்தநிலை பல்கலையில், பி.ஏ., ஆங்கிலம் படிப்பில் சேர்ந்தார். இதற்கு, கணவரும்,
மகள்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.சிறு வயதில், 10ம் வகுப்புக்கு மேல் படிக்க, தன் தந்தை எதிர்ப்பு தெரிவித்ததால், அவரால் படிக்க முடியவில்லை. அதனால், இந்த முறை, எப்படியும் பட்டம் பெற வேண்டும் என, முடிவு செய்து, எதிர்ப்புகளை மீறி, குடும்பத்தினர் துாங்கும்போது, நள்ளிரவில் படித்து, பட்டம் பெற்றுள்ளார்.

அவரது கணவர், 2014ல், மரணம் அடைந்த நிலையிலும், படிப்பை தொடர்ந்துள்ளார். அதனால், செல்லத்தாய் மீது, அவரது மகள்களுக்கு கடும் கோபம். அதனால், தினமும் அதிகாலையில் எழுந்து, தன் வீட்டு வேலையை முடித்து, தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கு வந்து, உதவிகள் செய்கிறார்.பின், அங்கிருந்து, சைதாப்பேட்டையில் உள்ள திறந்தநிலை பல்கலைக்கு வருகிறார்; மாலை வரை, அங்கேயே இருந்து படித்துள்ளார். கடும் மழை வெள்ளத்திலும், இவர் பல்கலைக்கு வந்து விடுவார் என்கின்றனர், பல்கலை ஆசிரியர்கள்.

ஐந்து மொழி அறிந்தவர்!

பட்டப்படிப்பு குறித்து, கருத்து தெரிவித்த செல்லத்தாய், ''எப்படியாவது, என் மகள்களின் அன்பை பெற்று, அவர்களுடன் இணைந்து வாழ வேண்டும். எல்.எல்.பி., சட்டப் படிப்பில் சேர்ந்து, என்னை போன்று படிப்புக்காகவும், பிள்ளைகளால் கைவிடப்படுவோருக்கும் உதவி செய்ய வேண்டும்,'' என்றார். இவருக்கு, தமிழ், ஆங்கிலம் எழுதவும்,படிக்கவும் தெரியும்; மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பேசுவும் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Date Of Birth Recorded In HSC Pass Certificate Is To Be Taken As The Date Of Birth For All Purposes: Orissa High Court

Date Of Birth Recorded In HSC Pass Certificate Is To Be Taken As The Date Of Birth For All Purposes: Orissa High Court Udai Yashvir Singh 5 ...