Wednesday, November 29, 2017

புதுச்சேரி மருத்துவ சீட் முறைகேடு; சுகாதாரத்துறை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் நீதிமன்றத்தில் சரண் 
 
ஜெ.முருகன்

சென்டாக் முதுநிலை மருத்துவ சீட் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ தொடர்ந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 அரசு அதிகாரிகளும், புதுச்சேரி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.



புதுச்சேரியில், மொத்தம் உள்ள 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 318 முதுநிலை மருத்துவ இடங்கள் இருக்கின்றன. அதில், 156 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் 162 இடங்கள் அரசுக்கும் ஒதுக்கப்பட்டன. அரசு ஒதுக்கீட்டு இடங்கள், சென்டாக் கலந்தாய்வுமூலம் நிரப்பப்பட்டது. அப்படி நிரப்பும்போது, அதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக மாணவர்கள்-பெற்றோர் சங்கங்கள் குற்றம் சுமத்தின. அதையடுத்து, சென்டாக் அலுவலகத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி, முறைகேடுகள் தொடர்பான ஆதாரங்களை சி.பி.ஐ-க்கு அனுப்பிவைத்ததோடு, ‘முறைகேடுகள் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்படும் முன், சி.பி.ஐ அதிரடி ஆய்வை நடத்த வேண்டும்’ என்று அழைப்பு விடுத்தார்.

உடனே சென்டாக் அலுவலகத்தில் ஆய்வுசெய்த சி.பி.ஐ, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான சென்டாக் சேர்மன் நரேந்திரகுமார், அப்போது சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பி.ஆர்.பாபு ஆகியோர் மீதும் சுகாதாரத்துறை இயக்குநர் ராமன், சென்டாக் கன்வீனர் கோவிந்தராஜ், இணை கன்வீனர் பழனிராஜா, ஒருங்கிணைப்பாளர் ஜோநாதன் டேனியல் மற்றும் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் என 13 பேர்மீது வழக்குப்பதிவு செய்தது.

இதற்கிடையே, தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி, சுகாதாரத் துறை இயக்குநர் ராமன், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாபு, சென்டாக் அமைப்பாளர் கோவிந்தராஜ், இணை அமைப்பாளர் பழனிராஜா, ஒருங்கிணைப்பாளர் ஜோனாதன் டேனியல் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில் அந்த 5 பேருக்கும் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், புதுச்சேரி அமர்வு நீதிமன்றத்தில் சரணடையுமாறு உத்தரவிட்டிருந்தது. அதன்படி புதுச்சேரி தலைமை நீதிபதி தனபால் முன்னிலையில் 5 பேரும் சரண் அடைந்தனர். உயர் நீதிமன்ற உத்தரவின்படி 5 பேரும் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல்செய்ததையடுத்து விடுவிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024