Monday, November 27, 2017

அசிங்கமாக திட்டும் ஆசிரியைகள் : போலீஸ் விசாரணையில், 'திடுக்'

Added : நவ 27, 2017 01:13

வேலுார்: அரக்கோணம் அருகே, நான்கு மாணவியர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், மேலும் பல மாணவியர் இந்த முடிவுக்கு வந்ததால், அவர்களை, பெற்றோர் பள்ளிக்கு அனுப்பாமல், நிறுத்தி விட்ட தகவல் கிடைத்துள்ளது.

வேலுார் மாவட்டம், அரக்கோணம் அருகே, பனப்பாக்கத்தில், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. பிளஸ் 1 மாணவியர் சங்கரி, மனிஷா, தீபா, ரேவதி ஆகியோர், மாதாந்திர தேர்வில், கணிதத்தில் தேர்ச்சி பெறாததால், வகுப்பு ஆசிரியர் மீனாட்சி சுந்தரேஸ்வரி, தலைமை ஆசிரியை ரமாமணி திட்டியுள்ளனர். இதனால், நான்கு பேரும், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.வேலுார், எஸ்.பி., பகலவன் தலைமையில், நான்கு தனிப்படையினர், இரண்டாவது நாளாக நேற்று, 22 மாணவியர் மற்றும் அவர்களின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.

அவர்களிடம் பெற்றோர் கூறியதாவது: தற்கொலை செய்து கொண்ட, நான்கு மாணவியரையும், டியூஷனில் சேரும்படி ஆசிரியர்கள் கூறினர்; அவர்கள் மறுத்து விட்டனர். கடந்த வாரம், பள்ளி நேரத்தில், அவர்கள் யாரிடமோ மொபைல் போனில் பேசியுள்ளனர். இதை பார்த்த ஆசிரியைகள், ஜாதி பெயரை குறிப்பிட்டு, அனைவர் முன்னிலையிலும் திட்டியுள்ளனர். இதுதான், அவர்கள் தற்கொலைக்கு முக்கிய காரணம்.ஆசிரியைகள் பலர், மாணவியரை அசிங்கமாக திட்டுகின்றனர். இதனால், பல மாணவியர் தற்கொலை முடிவில் இருந்து உள்ளனர்.
இதையறிந்த பல பெற்றோர், அவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தி விட்டனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிர்ச்சியடைந்த போலீசார், பள்ளிக்கு சரியாக வராத, 85 மாணவியரிடம், 'இனி இப்படி இருக்கக் கூடாது' என, அறிவுரை வழங்கினர். பின், அசிங்கமாக திட்டும்,ஆசிரியர்களின் விபரங்களை சேகரித்துள்ளனர். பனப்பாக்கம் பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களையும், வேறு பள்ளிக்கு மாற்ற, கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையர் ராமலிங்கம் தலைமையிலான குழுவினர், இரண்டாது நாளாக, பனப்பாக்கம் அரசு மகளிர் பள்ளியில், நேற்று விசாரணை நடத்தினர். பின்,

நிருபர்களிடம், ஆணையர் ராமலிங்கம் கூறியதாவது:இதுபோன்ற சம்பவம், இனி எந்த பள்ளியிலும் நடக்க கூடாது.குழந்தைகளுக்கு எந்த பிரச்னை ஏற்பட்டாலும், 044 2642 1359, வேலுார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை, 0416 222 2310 என்ற தொலைபேசியில் அழைத்து தெரிவிக்கலாம்.மாணவியர் தற்கொலை குறித்து, நீதி விசாரணை நடத்தப்படும். தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும், குழந்தைகள் வழிகாட்டி மையம் அமைக்கப்படும். இதில், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தொலைபேசி எண்கள் வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.பனப்பாக்கம் பள்ளியில், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல்இருக்க, பெற்றோர், பொதுமக்கள், சமூக ஆர்வலர், ஆசிரியர், பத்திரிகையாளர்கள் அடங்கிய, 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024