Thursday, November 30, 2017

4 மாணவியர் தற்கொலை எதிரொலி : 30 ஆசிரியர்கள் மாறுதல் கேட்டு கடிதம்

Added : நவ 30, 2017 01:11

வேலுார்: பனப்பாக்கத்தில், நான்கு மாணவியர் தற்கொலை செய்து கொண்ட பள்ளியில் பணியாற்ற மறுத்து, 30 ஆசிரியர்கள் மாறுதல் கேட்டு, கடிதம் கொடுத்துள்ளனர்.
வேலுார் மாவட்டம், அரக்கோணம் அடுத்த பனப்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி யில், பிளஸ் 1 படித்த நான்கு மாணவியர், 24ம் தேதி, கிணற்றில் குதித்து, தற்கொலை செய்து கொண்டனர்.


பள்ளி தலைமை ஆசிரியை ரமாமணி, வகுப்பு ஆசிரியை மீனாட்சி சுந்தரேஸ்வரி ஆகியோர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். மேலும், பெற்றோர் -- ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கப்பட்ட, 18 தற்காலிக ஆசிரியர்கள், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டனர்.
சம்பவம் குறித்து விசாரிக்க, ராணிப்பேட்டை, ஆர்.டி.ஓ., வேணுசேகரனை விசாரணை அதிகாரியாக, கலெக்டர் ராமன் நியமித்துள்ளார். இவர், நேற்று பள்ளிக்கு சென்று, விசாரணையை துவங்கினார்.


இந்நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், நேற்று பள்ளிக்கு வந்தார். அவரிடம், பள்ளியில் பணியாற்றும் நிரந்தர ஆசிரியர்கள், 30 பேர், தங்களை வேறு பள்ளிக்கு மாற்றும்படி கேட்டு, கடிதம் கொடுத்தனர்.


அதில், 'பள்ளியில் நடந்து வரும் சம்பவங்களால், நாங்கள் மன அழுத்தத்தில் உள்ளோம். இரவில் துாக்கம் வருவதில்லை.'அடிக்கடி, மொபைல் போனில் மிரட்டல்கள் வருகின்றன. இதனால், பள்ளியில் பணியாற்ற முடியவில்லை. எனவே, வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தனர்.


இதனால், கல்வித் துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024