Thursday, November 30, 2017

தலையங்கம் 

அரசு விழாக்களில் மாணவர்களா?






பெற்றோர்களுக்கும், சாலைவழியே செல்லும் பொதுமக்களுக்கும் பல நேரங்களில் மனதை வருத்தும் சம்பவங்களை காணமுடிகிறது.

நவம்பர் 30 2017, 03:00 AM 


பெற்றோர்களுக்கும், சாலைவழியே செல்லும் பொதுமக்களுக்கும் பல நேரங்களில் மனதை வருத்தும் சம்பவங்களை காணமுடிகிறது. சாலையின் இருமருங்கிலும் சின்னஞ்சிறு குழந்தைகள்கூட கையில் பதாகைகளை வைத்துக்கொண்டு வியர்த்து விறுவிறுத்து மனித சங்கிலியாகவும், பேரணியாகவும் நிற்கிறார்கள். ஹெல்மெட் அணிவோம், டெங்குவை ஒழிப்போம், எய்ட்ஸை ஒழிப்போம் என்பது போன்ற பல வாசகங்கள் அந்த மாணவர்களின் கைககளில் உள்ள பதாகைகளில் எழுதப்பட்டிருக்கிறது. எய்ட்ஸ் பற்றி தெரியாத, தெரியக்கூடாத வகையில் அதுதொடர்பான பதாகைகளை கையில் ஏந்தி நிற்கவைப்பது ஏற்புடையது அல்ல. காலையில் பள்ளிக்கூடத்திற்கு போகவேண்டிய நேரத்தில், சாலையில் சிலமணி நேரம் வரிசையாக நின்றுகொண்டிருக்கும் கட்டாயம் ஏற்படுகிறது. இவ்வளவு நேரம் சாலையில் நின்றுவிட்டு களைப்படைந்துவிடும் அந்த சிறுமலர்களால் எப்படி, அதற்குப்பிறகு பள்ளிக்கூடத்திற்கு சென்று உற்சாகமாக படிக்க முடியும் என்பதுதான் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. மேலும் அரசு விழாக்கள் எது நடந்தாலும் பலமணி நேரங்களுக்கு முன்பே மாணவர்களை அங்குப்போய் உட்கார வைத்து விடுகிறார்கள். எப்படி அரசியல் கூட்டங்களில் கூட்டம் சேர்க்க கட்சிக்காரர்களை பஸ், வேன், லாரிகளில் ஏற்றி அழைத்து வருகிறார்களோ, அதுபோல மாணவர்களையும் அழைத்து வந்து கூட்டம் தொடங்குவதற்கு வெகு நேரத்திற்கு முன்பே உட்கார வைத்து விடுகிறார்கள். கழிப்பறை வசதி, குடிநீர் வசதி இல்லாமல், பல நேரங்களில் பசியோடு அந்த மாணவ–மாணவிகள் வாடிவதங்கி உட்கார்ந்து கொண்டு, எப்போது கூட்டம் முடியும் என்ற அரைத்தூக்கத்தில் இருப்பதையும் காணமுடிகிறது.

தற்போது அரசு விழாவாக நடத்தப்பட்டு வரும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கூட்டங்களில் 10, 11, 12–ம் வகுப்பு மாணவர்கள் இவ்வாறு அழைத்துக் கொண்டு வரப்படுகிறார்கள் என்ற புகாரை எதிர்க்கட்சிகள் கூறின. இதற்கு சிலர், மாணவர்களுக்கு எம்.ஜி.ஆர். பற்றி தெரியவேண்டும். அது அவர்களது பொதுஅறிவை வளர்க்கும். இதுபோல கூட்டங்களில் நேரடியாக கலந்து கொள்வது நல்லது என்று கூட கருத்து தெரிவித்தனர். அரசு நிர்வாகம் எடுக்கவேண்டிய பல நடவடிக்கைகளை அவர்கள் எடுக்காமல், உயர்நீதிமன்றம் தான் எடுக்கவேண்டும் என்ற கட்டாயநிலை தற்போது நிலவிவருவதால், இந்த பிரச்சினைக்கும் நீதிமன்ற தீர்ப்பு ஒரு வழியைகாட்டிவிட்டது. இதுதொடர்பாக அரசு இப்போது சில விதிமுறைகளை வகுத்து உத்தரவாக வெளியிட்டுள்ளது. இதன்படி, அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பள்ளிக்கூடங்கள் அவர்களாகவே மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது. இதுபோன்ற அரசு நிகழ்ச்சிகளில் மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டுமென்றால் அவர்கள் தானாக முன்வந்து அவர்களின் சுயவிருப்பத்தின்படியே கலந்து கொள்ளவேண்டும்.

இதுதொடர்பாக மாவட்ட கலெக்டரிடமும், முதன்மைக்கல்வி அதிகாரியிடமும் முன்கூட்டியே அனுமதி வாங்க வேண்டும். மாணவர்களின் உடல்நிலையை கருத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும். வலிப்பு நோய் போன்ற நோய் உள்ளவர்கள் இதுபோன்ற மனிதசங்கிலியிலோ, பேரணியிலோ கலந்து கொள்ள அனுமதிக்கக்கூடாது. இந்த நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது பள்ளிக்கூட நிர்வாகம், குடிநீர், உணவு போன்றவற்றை வழங்கவேண்டும். பள்ளிக்கூட குழந்தைகள் எங்குபோகிறார்கள் என்பதை அவர்களது பெற்றோர்களுக்கு தெரிவிக்கவேண்டும். பெற்றோர் விருப்பப்பட்டால் அவர்களையும் கூட வர அனுமதிக்க வேண்டும். மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டால் 20 மாணவிக்கு, ஒரு ஆசிரியை வீதம் உடன் செல்ல வேண்டும், உடல் ஊனமுற்ற குழந்தைகளுடன் சிறப்பு ஆசிரியரும் செல்ல வேண்டும். பள்ளிக்கூடத்திற்கு வெளியே நடக்கும் எந்த அரசியல் நிகழ்ச்சிகளுக்கும் மாணவர்களை அழைத்துச் செல்ல அனுமதிக்கக்கூடாது. எந்த நிகழ்ச்சியென்றாலும் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே மாணவர்களை அழைத்துச் செல்லக்கூடாது. விடுமுறை நாட்களிலும் மாணவர்களை அழைத்துச் செல்லக்கூடாது என்பதுபோன்ற பல விதிமுறைகள் கூறப்பட்டுள்ளன. நிச்சயமாக இது வரவேற்கத்தக்கது என்றாலும், பள்ளிக்கூடத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் மட்டுமே மாணவர்கள் கலந்து கொள்ள செய்யலாமே தவிர, இப்படி பள்ளிக்கூடத்தைவிட்டு வெளியே வந்து சாலையில் நிற்க வைப்பதும், வெளிநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள செய்வதும் தேவையில்லாதது. மொத்தத்தில், மாணவர்களின் கல்வி மேம்பாட்டில்தான் அரசும், பள்ளிக்கூடங்களும் அக்கறை காட்ட வேண்டுமே தவிர, இப்படி அவர்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் வெளிநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கக்கூடாது.

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...