Tuesday, November 28, 2017

டி.என்.பி.எஸ்.சி.,யை கண்டித்து போராட அரசு ஊழியர்கள் முடிவு

Added : நவ 27, 2017 22:25

மதுரை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின், 'குரூப் - 4 பதவிகளுக்கு வெளிமாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம்' என்ற அறிவிப்பை திரும்ப பெற கோரி, போராட்டத்தில் ஈடுபடுவது என, அரசு ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது.

துரோகம் : மதுரையில், சங்க மாநிலத் தலைவர், சுப்பிரமணியன் கூறியதாவது:
காவிரி, ஜல்லிக்கட்டு, மீனவர் பிரச்னைகளில், தமிழக மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைக்கப்படுகிறது. பாலிடெக்னிக் கல்லுாரிகளில், விரிவுரையாளர் தேர்வுக்கு தமிழே தெரியாத பிற மாநிலத்தவர் சேர ஏதுவாக, விதிகளில் ஏற்கனவே மாற்றம் செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து, 'டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வில், வெளி மாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழக இளைஞர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் எனவும், இடஒதுக்கீடுக்கு இது தடையாக இருக்காது எனவும், தமிழக அரசு சப்பைக்கட்டு கட்டுகிறது. தமிழகத்தில், லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவிக்கின்றனர். அரசியல் ஸ்திரமற்ற நிலையால், பெரு நிறுவனங்கள், தமிழகத்தில் தொழில் துவங்க முன்வரவில்லை. பத்தாம் வகுப்பு படித்திருந்தால், குரூப் - 4 தேர்வு எழுதி, அரசு துறையில் சேர்ந்து விடலாம் என்ற தமிழக இளைஞர்கள் எண்ணத்தில் மண் விழுந்திருக்கிறது. இதை, எம்.எல்.ஏ.,க்களும் எதிர்க்காதது வியப்பு அளிக்கிறது.

சட்டதிருத்தம் : முதல்வர், பழனிசாமி உடனடியாக தலையிட்டு, அரசு பணியாளர்கள் - பணி நிபந்தனைகள் சட்டம், 2016ல், தமிழக மாணவர்கள் நலன்கள் பாதிக்காத வகையில், உரிய திருத்தம் கொண்டு வர வேண்டும். குரூப் - 4 பதவிகளுக்கான அறிவிப்பை திரும்ப பெற்று, உரிய சட்ட திருத்தம் செய்த பின், தமிழக இளைஞர்கள், 100 சதவீதம் வேலைவாய்ப்பு பெறுவதை உறுதி செய்யும் வகையில், அறிவிப்பு வெளியிட வேண்டும். இல்லை எனில், அரசு ஊழியர் சங்கம் போராட்டத்தில் ஈடுபட நேரிடும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024