Tuesday, November 28, 2017

2,000 நர்ஸ்கள் உள்ளிருப்பு போராட்டம் : கழிப்பறையை பூட்டி முறியடிக்க போலீஸ் முயற்சி

Added : நவ 27, 2017 22:24



சென்னை: ஊதிய உயர்வு கேட்டு, அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நர்ஸ்கள், சென்னை, டி.எம்.எஸ்., வளாகத்தில், நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

மருத்துவ பணியாளர் தேர்வாணயம் வழியாக தேர்ந்தெடுக்கப்பட்ட, 9,990 நர்ஸ்கள், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு, மாத ஊதியமாக, 7,700 ரூபாய் வழங்கப்படுகிறது. ஊதிய உயர்வும் ஆண்டுக்கு, 500 ரூபாய் தான் அதிகரிக்கப்படுகிறது.
இதனால், சம்பள உயர்வு மற்றும் காலமுறை ஊதியம் வழங்கக் கோரி, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நர்ஸ்கள், சென்னை, டி.எம்.எஸ்., வளாகத்திற்கு, போராட்டம் நடத்த வந்தனர். அவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தியதை தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை, போலீசார் கைது செய்ய சென்றபோது, அதிகளவில் நர்ஸ்கள் குவிந்தனர்.
அதனால், அவர்கள் அனைவரையும், டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ளே வைத்து, கேட்டை பூட்டினர். இதையடுத்து, வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில், நர்ஸ்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவிலும் போராட்டம் தொடர்ந்தது. ஒரே நேரத்தில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நர்ஸ்கள் குவிந்ததால், மருத்துவ பணிகள் பாதிக்கப்பட்டன. மருத்துவமனைகளிலும், நோயாளிகள் அவதிப்பட்டனர்.

இது குறித்து, நர்ஸ்கள் கூறியதாவது: நாங்கள் ஒவ்வொருவரும், மற்ற மாவட்டங்களில் தான் பணியமர்த்தப்பட்டுள்ளோம். எங்களுக்கு போதிய சம்பளமும், காலமுறை ஊதியமும் வழங்கப்படவில்லை. 7,700 ரூபாய் மட்டும் வைத்து, எங்களது குடும்பத்தை, நாங்கள் எப்படி நடத்துவது என, தெரியவில்லை. எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, ஒரு மாதத்திற்கு முன்பே, அரசுக்கு கோரிக்கை வைத்தோம். போராட்டம் நடத்த போவதாக அறிவிப்பும் வெளியிட்டோம்; ஆனால், அரசு கண்டுகொள்ளவில்லை. அதை தொடர்ந்தே, போராட்டம் நடத்துகிறோம்.
மருத்துவ பணிகள் இயக்குனர், மருத்துவ கல்வி இயக்குனர் மற்றும் ஆரம்ப சுகாதாரத் துறை இயக்குனர் என, மூன்று தரப்பிலும் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. எனவே, கோரிக்கைகள் ஏற்கும் வரை, போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

மருத்துவ கல்வி இயக்குனர், எட்வின் ஜோ கூறியதாவது: மருத்துவ பணியாளர் தேர்வாணயத்தின் வழியாக, இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தில், நர்ஸ்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒப்பந்தத்திற்கு பின், இவர்களை, அரசு நர்ஸ்களாக பணியில் அமர்த்துவோம். அப்போது, தேவையை விட அதிகமாக இருப்பின், சிலர் காத்திருப்பு பட்டிலில் இருப்பர். இவர்களின் அடிப்படை ஊதியத்தை உயர்த்தவும், அரசு பரிசீலித்து வருகிறது; விரைவில் முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கழிப்பறைகளுக்கு பூட்டு! : நர்ஸ்கள் போராட்டத்தை முடக்க, போலீசார் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அவர்களுக்கு, வெளியில் இருந்து உணவு, குடிநீர் வருவதை தடுத்து நிறுத்தினர். உள்ளே இருந்து வெளியேறவும், வெளியில் இருந்து உள்ளே வரவும், யாரையும் அனுதிக்கவில்லை. இதனால், உணவு இல்லாமல் போராட்டத்தை, நர்ஸ்கள் தொடர்ந்தனர். மேலும், வளாகத்தில் இருந்த கழிப்பறைகளும் மூடப்பட்டன. சில பெண் நர்ஸ்கள், டி.எம்.எஸ்., அலுவலக ஊழியர்களின் உதவியுடன், அலுவலக கழிப்பறையை பயன்படுத்தினர்.

'மீடியா'க்களுக்கு தடை! : போராட்டத்தை செய்தி சேகரிக்க வந்த பத்திரிக்கையாளர்களை, போலீசார் அனுமதிக்கவில்லை. 'மீடியாக்களை, உள்ளே அனுமதிக்க வேண்டும்' என, நர்ஸ்கள் கோஷமிட்டும், போலீசார் கண்டுகொள்ளவில்லை. பத்திரிக்கையாளர்களிடம் பேச விடாமல், அவர்களையும் தடுத்து விட்டனர்.

'200 பேரின் பணி 1 மாதத்தில் நிரந்தரம்'

''ஒப்பந்த அடிப்படையிலான நர்சுகள், படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்படுவர். ஏற்கனவே நிலுவையில் உள்ள, 200 நர்சுகள், ஒரு மாதத்தில் பணி நிரந்தரம் செய்யப்படுவர்,'' என, அமைச்சர், விஜயபாஸ்கர் கூறினார். டில்லியில் நடைபெற்ற, 'உடல் உறுப்பு தான நாள்' நிகழ்ச்சியில் பங்கேற்ற, தமிழக அமைச்சர், விஜயபாஸ்கர், நிருபர்களிடம் கூறியதாவது: தேர்வாணையம் மூலம், நர்ஸ் பணிக்காக, 9,999 பேர் தகுதித் தேர்வு எழுதி, உரிய முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள், தங்கள் சொந்த மாவட்டங்களில் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர். அரசாணையின்படி, அவர்கள் குறிப்பிட்ட காலம் வரை, தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றிய பின், பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். அந்த வகையில், இன்னும் கடைசி குழுவில், 200 நர்சுகள் உள்ளனர். அவர்களை, ஒரு மாதத்தில் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பின், தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களும், படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்படுவர். அரசின் பல்வேறு நடவடிக்கைகள் மூலம், ஒவ்வொரு ஆண்டும், புதிய புதிய காலியிடங்கள் உருவாகின்றன. அவற்றில் ஏற்படும் காலியிடங்களை கணக்கில் வைத்து, இவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். நர்சுகள், மருத்துவ துறையின் ஓர் அங்கம். சேவை துறையில் பணியாற்றும் இவர்கள், நோயாளிகளின் நலன் கருதி, தங்கள் போராட்டத்தை கைவிட்டு, மீண்டும் பணிக்கு திரும்பும்படி, அரசு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது டில்லி நிருபர் -

No comments:

Post a Comment

HC refuses to hear PIL against NRI quota in med colleges

HC refuses to hear PIL against NRI quota in med colleges TIMES NEWS NETWORK  25.11.2024  Bhopal/Jabalpur : A division bench of MP high court...