Wednesday, November 29, 2017

அச்சுறுத்தும் ஆன்டிபயாடிக்ஸ்!

By ஆர்.எஸ். நாராயணன்  |   Published on : 28th November 2017 01:36 AM  |  

எவ்வளவுதான் நாம் சொல்லாமை பேசினாலும் உயிரைக் கொல்லாமல் நாம் வாழ முடியாது. தப்பாகப் புரிந்து கொள்ள வேண்டாம். பயங்கரவாதிகளின் துப்பாக்கிக் கலாசாரம் என்பதுகூடக் கிருமிதான். அந்தக் கிருமிகளைக் கொல்லும் இந்திய ராணுவம் கிருமிநாசினிகள் என்றாலும் கிருமிகளை அழிக்க முடியவில்லை. 

அதுபோலவே மனிதநல வாழ்வில் உயிர்களைக் கொல்லும் பாக்டீரியக் கிருமிகள் வலுத்துவிட்டன. கிருமிநாசினிகளாயுள்ள ஆன்டிபயாடிக் மருந்துகள் வலுவிழந்துவிட்டன.
மனிதனை மனிதன் கொல்வதற்கு மூளையைச் செலவிட்டு அவன் கண்டுபிடித்த ஆயுதங்களைப் பார்த்தால் பிரமிப்பூட்டும். கேட்டால் தற்காப்பு என்பார்கள். யார் மீது எந்த குண்டு, எப்போது பாயுமோ? யாருக்குத் தெரியும்? 


மனிதனே மிருகமாகும்போது மிருகங்கள் என்ன செய்யும்? பாம்புக்குப் பல்லில் விஷம், தேளுக்குக் கொடுக்கில் விஷம், புலிக்கு நகம், யானைக்கு தும்பிக்கை, மாட்டுக்குக் கொம்பு. எல்லாம் பாதுகாப்புக்குத்தான். தாக்குவதற்கு அல்ல.


ஏ.கே.47 இயந்திரத் துப்பாக்கி கொண்டு மனிதனால் டெங்குக் கொசுவைக் கொல்ல முடியுமா? சிக்குன் குனியா, புற்றுநோய், செல் எலும்புருக்கி, மஞ்சள்காமாலை இவ்வாறெல்லாம் நோய்களை ஏற்படுத்தும் கிருமிகள் பலவற்றை எப்படிக் கொல்வது? அதற்கும் மருந்து கண்டுபிடித்தார்கள். அந்த மருந்துக்கு ஆன்டிபயாடிக் என்று பெயர் கொடுத்தார்கள். நாம் கிருமிநாசினி என்கிறோம்.


திடீரென்று காய்ச்சல் வருகிறது. கை, கால் குடைச்சல்; வாய் கசக்கிறது; ஆகாரம் செல்ல மறுக்கிறது; இன்னும் பற்பல கோளாறுகள். டாக்டரிடம் செல்கிறோம். கிருமிநாசினிகளுடன் பல வண்ணங்களில் மாத்திரைகளை வழங்கி, இடைவெளி தவறாமல் தொடர்ந்து சாப்பிடச் சொல்வார்கள் மருத்துவர்கள். 


வாந்தி வரும், வயிற்றுப்போக்கு ஏற்படும். சரி சரி அதை நிறுத்திவிடுங்கள். வேறு மருந்து தருகிறேன் என்பார். மாற்றி மாற்றி என்னென்னவோ தருவார்கள். கூகுளுக்குள் சென்று மருந்துகள் குறித்து குறிப்புகளைப் படித்தால் ஆடிப்போய்விடுவோம். பக்க விளைவுகள் அதிர்ச்சியில் ஆழ்த்தும்.


சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு டெட்ராசைக்ளின் என்கிற ஆன்டிபயாடிக் 250 மி.கி. அளவு எழுதப்பட்டது. இப்போது அது பயனற்றுப் போய் கோழிகளுக்கும், தேனீக்களுக்கும் வழங்கப்படுகிறது. கூட்டப்பட்ட எடை அளவில், பின்னர் ஆம்பிசிலின். அதுவும் 250 மி.கி. பரிந்துரைக்கப்பட்டது. இப்போது அமாக்ளீன் 500 மி.கி. என்கிற கலவை பரிந்துரைக்கப்படுகிறது.
இவ்வளவு அதிசக்தியுள்ள மருந்து தேவைதானா என்று கூகுளைப் பார்த்து பயந்துபோன நோயாளி ஒருவர் மருந்துக் கடைக்காரரிடம் கேட்டால், அவர் சிரிப்பார். '250 மி.கி. கிருமிநாசினி கேக்காது சார்' என்று பதில் வரும்.


நமது உடலைத் தாக்கும் கிருமிகள் அதாவது தீய பாக்டீரியா போன்ற நோய்க்கிருமிகள், கிருமி நாசினிகளை வென்று பழகிவிட்டன. ஆகவே, கூடுதல் வீரியமுள்ள கிருமி நாசினிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.


அண்மையில் பிரிட்டனில் நிகழ்ந்த கிருமிநாசினி எதிர்ப்புச் சக்தி குறித்த கருத்தரங்கின் ஒரு பதிவை 'பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல்' வெளியிட்டுள்ளது. 'நோயுற்றவர்களுக்குத் தொடக்கத்திலேயே கிருமிநாசினி மருந்துகள் வழங்குவதால் நோய் எதிர்ப்புச் சக்தி ஏற்படும் என்று கருதிவிடலாகாது. 



தேவைக்கு மேல் நீண்ட நாள்கள் தொடருமானால், நோய் எதிர்ப்பு சக்தி மழுங்கிவிடும். கிருமிகள் வென்றுவிடும்...' என்கிறது அந்தப் பதிவு.


கிருமிநாசினிகளின் வீரிய இழப்பு ANTI MICROBIAL RESISTANCE) அச்சம் தருவதாயுள்ளது. பிரிட்டிஷ் மருத்துவ ஆய்வு அறிக்கையின்படி, ஆன்டிபயாடிக் வீரிய இழப்பால் 2050-ஐ நாம் நெருங்கும்போது ஐரோப்பாவில் 3,90,000 பேரும், அமெரிக்காவில் 3,17,000 பேரும், ஆப்பிரிக்க - ஆசியா கண்டங்களில் 40,00,000 பேரும் ஆன்டிபயாடிக் மருந்துகளின் வீரிய இழப்பு காரணமாக நோய்க்கிருமிகளால் இறப்பார்கள் என்கிறது இன்னோர் ஆய்வு.
பலதரப்பட்ட அறுவைச் சிகிச்சைகள், மாற்று இதயம், சிறுநீரகம், கல்லீரல் பொருத்தல், கர்ப்பப்பைக் கட்டிகள், சுவாச கோசம், எலும்புருக்கி நோய்கள் எல்லாம் காலப்போக்கில் பிரச்னைகளாகும் என்று மருத்துவ உலகமே மரண பயத்தில் ஆழ்ந்துள்ளது.
ஏனெனில், கடந்த டிசம்பர் மாதம், 'சூப்பர் பக்' எனப்படும் பன்னோய்க் கிருமிகளை அழிக்கும் தன்மை உடையது என்று கருதப்பட்ட கோலிஸ்டின் (COLISTIN) என்ற ஆன்டிபயாடிக் கிருமிநாசினி வேலை செய்யாமல், அதனால் ஒரு நோயாளி இறக்க நேர்ந்ததுதான் இந்த அச்சத்திற்குக் காரணம்.


அதிக அளவில் கிருமிநாசினிகளை உட்கொள்வதில் இந்தியா உயர்ந்த நாடு மட்டுமல்ல, முதலிடத்தைப் பெற்றுள்ளது. உலக அளவில் அண்மையில் 'லான்ஸெட்' (LANCET) என்ற மருத்துவ இதழ் வழங்கியுள்ள புள்ளிவிவரப்படி, அதிக அளவில் ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக் கொள்வதில் முதலிடம் பெற்றுள்ள இந்தியா ஆண்டொன்றுக்கு பயன்படுத்துவது 13 பில்லியன் யூனிட். 


இரண்டாவது இடத்தில் இருக்கும் சீனா 10 பில்லியன் யூனிட்டும், மூன்றாவது இடத்தில் உள்ள அமெரிக்கா 7 பில்லியன் யூனிட்டும் ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பயன்படுத்துகின்றன.
இந்தியாவுக்கு முதலிடம் என்றால் இந்தியாவுக்குள் முதலிடம் தமிழ்நாடு என்பதை சொல்லியா தெரியவேண்டும்?


இந்த விஷயம் மனிதனோடு நின்றபாடில்லை. மாடு, ஆடு, கோழி, பன்றி என்று மனிதன் உண்ணும் ஜீவன்களும் கிருமிகளால் தாக்கப்பட்டால் கிருமிநாசினிகளை ஊசிகளால் ஏற்றுகிறார்கள். இந்த விஷயத்தில் அமெரிக்காவும் சீனாவுமே முன்வரிசையில் நிற்கின்றன.
அமெரிக்காவில் மட்டும் பன்றி, மாடு போன்ற கால்நடைகளைக் கொழுக்க வைப்பதற்கென்றே உற்பத்தியாகும் ஆன்டிபயாடிக் கிருமிநாசினிகளில் 90 சதவீதம் செலவாகின்றன. அமெரிக்கப் பன்றிகளைக் காட்டிலும் சீனப் பன்றிகள் அதிக மோசம். 


அதாவது சீனாவில் உள்ள பன்றிப் பண்ணைகளில் மிக அதிக அளவில் கோலிஸ்டின் வழங்கப்பட்டும்கூட, பன்றிகளின் மரணங்களைத் தவிர்க்க முடியவில்லை. கிருமிநாசினிகளைக் கிருமிகள் வென்று விடுவதால் கிருமிகளின் தாக்கம் பன்மடங்கு பெருகிவிடுகிறது.
நாம் உண்ணும் உணவுகளில் கிருமிநாசினிகள் உள்ளன. முட்டை, கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, தேன், பால் ஆகியவற்றில் கிருமிநாசினிகள் கலந்திருக்கின்றன. மிருக வைத்தியத்தில் சகல ஆன்டிபயாடிக் ஊசிகளும் போடப்படுகின்றன. கேப்ஸ்யூல் மாத்திரை வடிவிலும் வழங்கப்படுகின்றன. 


உண்ணும் உணவில் இப்படி ரசாயனக் கிருமிநாசினிகள் கலக்கப்படுவதால், அந்த விலங்கினங்களின் தசைகளில் அவை கலந்து விடுகின்றன. அவற்றை உட்கொள்ளும்போது மனித ரத்தத்திலும் அவை கலந்து, அந்த ஆன்டிபயாடிக்குகளுக்கான எதிர்ப்பு சக்தியைக் கிருமிகள் பெற்று விடுகின்றன. மனிதன் நோயால் தாக்கப்படும்போது, ஆன்டிபயாடிக் கிருமிநாசினி மருந்துகள் அந்த நபருக்குப் பயனளிப்பதில்லை.


19, 20-ஆம் நூற்றாண்டுகளை நினைவில் கொண்டு பார்த்தால் முதலாவதாக லூயிபாஸ்டர். கண்ணுக்குப் புலப்படாத பாக்டீரியக் கிருமிகளை ஆராய்ந்து நாய்க்கடிக்கு மருந்து கண்டுபிடித்தார். கறந்த பாலை கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் உத்தி இவர் பெயரால் பாஸ்ச்சுரேஷன் எனப்படுகிறது. பாலை உச்ச நிலையில் கொதிக்க வைத்து பின் உச்சநிலையில் குளிரூட்டுதல்.


அடுத்து அலெக்சாண்டர் ஃபிளமிங், பெனிசிலின் மருந்து கண்டுபிடித்தார். பின்னர் ஆல்பர்ட் ஷாட்ஸ், ஸ்ட்ரப்டோ மைசின் கண்டுபிடித்தார். அது எலும்புருக்கி (டி.பி.) மருந்து. பென்சிலினும், ஸ்ட்ரப்டோமைசினும் கோடிக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றின.
அதன்பின்னர் டெர்ரா மைசின், டெட்ராசைக்ளின், ஆம்பிசிலின், அமாக்ளின், சிப்ரோ ஃப்ளாக்ஸசின்... வரிசையில் 'சின்' என்றும் 'க்ளின்' என்றும் முடியும் கிருமிநாசினி மருந்துகள் பல நூற்றுக்கணக்கில் இருக்கலாம். 


ஆனால், நோய்க்கிருமிகளோ இலியத் என்ற கிரேக்கக் கதையில் வரும் ட்ரோஜன் குதிரைபோல் ரகசியமாக மனித உடலில் புகுந்து வெற்றிக்களிப்பில் ஆட்டம் போடுகின்றன.
டார்வின் கணிப்புப்படி கிருமிகளுக்கும் கிருமிநாசினிகளுக்கும் நடக்கும் போரில் வல்லவர் வெல்வர். வல்லவர் யார் கிருமியா? கிருமிநாசினியா? உடலில் கிருமிநாசினிகளைச் செலுத்திக் கிருமிகளை சக்தியுள்ளவைகளாக மாற்றி வருகிறோம். 


சுற்றுச்சூழல் பாதிப்பால் புவி மேன் மேலும் வெப்பமாகி, மாசு மிகுந்து உலகம் அழியுமா? இல்லை, கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகளால் அழியுமா என்பதுதான் இனி வரும் தலைமுறையினருக்கு முன்பு இருக்கும் சவால்.


கட்டுரையாளர்:
இயற்கை விஞ்ஞானி.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024