Tuesday, November 28, 2017

கழிப்பறையை கையால் சுத்தம் செய்த மாணவியர் : திருவள்ளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அட்டூழியம்

Updated : நவ 27, 2017 23:36 | Added : நவ 27, 2017 22:26 |



திருவள்ளூர்: திருவள்ளூரில், தலைமை ஆசிரியரின் அடாவடி உத்தரவால், எவ்வித பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல், அரசு மேல்நிலைப் பள்ளி கழிப்பறையை, மாணவியர் சுத்தம் செய்தனர். இது, பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே, கடும் கொந்தளிப்பை
ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர், ஜே.என்.சாலை அருகில், கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில் அமைந்துள்ளது, ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி. இங்கு, ஆறாம் வகுப்பில் இருந்து, பிளஸ் 2 வரை, 1,000 மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளி மாணவியர் மற்றும் ஆசிரியர் - ஆசிரியைகள் பயன்படுத்த, 10 கழிப்பறைகள் உள்ளன. தனியார் சுகாதார பணியாளர் மூலமாக, இந்த கழிப்பறைகளை சுத்தம் செய்ய, மாதம், 2,500 ரூபாய், அரசு வழங்குகிறது. கடந்த மாதம் வரை, இப்பள்ளியில், தனியார் மூலம், கழிப்பறை சுத்தம் செய்யும் பணி நடந்து வந்தது.
இந்நிலையில், கடந்த, 24ம் தேதி, வகுப்பு தலைவர் மற்றும் துணை தலைவர் பொறுப்பில் இருந்த மாணவியரை அழைத்த, தலைமை ஆசிரியர், பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும், கழிப்பறையை சுத்தம் செய்யாவிட்டால், பள்ளியில் தொடர்ந்து படிக்க முடியாது என, எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதனால், அச்சத்தில் ஆழ்ந்த மாணவியர், அழுதபடியே, எவ்வித பாதுகாப்பு உபகரணமும் இன்றி, கைகளால் கழிப்பறையை சுத்தம் செய்தனர். இதனால், இரண்டு நாட்களாக யாருடனும் பேசாமல் இருந்த மாணவியர், நேற்று முன்தினம், தங்கள் பெற்றோரிடம், கழிப்பறையை சுத்தம் செய்தது குறித்து தெரிவித்துஉள்ளனர்.இதையடுத்து, நேற்று காலை, பள்ளிக்கு சென்ற பெற்றோர், தலைமை ஆசிரியரிடம் முறையிட்டனர். ஆனால் அவர்களை, தலைமை ஆசிரியர் திட்டியதோடு, வெளியேற்றியதாக கூறப்படுகிறது. 'மாணவியரை, கழிப்பறையை சுத்தம் செய்ய உத்தரவிட்ட தலைமை ஆசிரியர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024