Monday, November 27, 2017


சபரிமலையில் தமிழக பக்தர்கள் தங்குவதற்கு தனி இடம் 



இது கார்த்திகை மாதம் என்பதால், எங்கு பார்த்தாலும் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் கருப்பு, நீலம், காவி உடை அணிந்து, கழுத்தில் சந்தனம் அல்லது துளசி மாலைகளோடு, நெற்றியில் சந்தனம், குங்குமம் தரித்து, பக்தி பரவசத்தோடு இருப்பதை பார்க்கமுடிகிறது.

நவம்பர் 27 2017, 03:00 AM 


இது கார்த்திகை மாதம் என்பதால், எங்கு பார்த்தாலும் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் கருப்பு, நீலம், காவி உடை அணிந்து, கழுத்தில் சந்தனம் அல்லது துளசி மாலைகளோடு, நெற்றியில் சந்தனம், குங்குமம் தரித்து, பக்தி பரவசத்தோடு இருப்பதை பார்க்கமுடிகிறது. கேரளா மாநிலம் பத்னம் திட்டா மாவட்டத்தில் மேற்கு மலைத்தொடர்ச்சியில் இருப்பது சபரிமலை அய்யப்பன் கோவில். அசுரபலம் கொண்ட மகிஷி என்ற அரக்கியை, சுவாமி அய்யப்பன் வதம் செய்த இடம்தான் சபரிமலை. இந்த கோவிலின் தனிசிறப்பு என்னவென்றால், நினைத்தவுடன் இந்த கோவிலுக்கு யாரும் சென்றுவிடமுடியாது. விரதம் இருந்துதான் செல்லமுடியும். ஆண்டுதோறும் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த கோவிலை, திருவிதாங்கூர் தேவசம் வாரியம் நிர்வகிக்கிறது.

தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு செல்வதால், அவர்கள் நலனுக்காக தமிழர் ஒருவரை தேவசம் வாரிய உறுப்பினராக நியமிக்கவேண்டும் என்று சமீபத்தில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். சபரிமலைக்கு ஆண்டுக்கு 4½ கோடி பக்தர்கள் வருகிறார்கள். இதில், 1 கோடிக்கும் மேல் தமிழ்நாட்டில் இருந்து பக்தர்கள் செல்வதால் அவர்களுக்காக நீலக்கல்லில் 5 ஏக்கர் இடம்வேண்டும் என்றும் கேட்டுள்ளார். இதுபோல தமிழ்நாட்டில் பழனி முருகன் கோவிலுக்கு வரும் ஏராளமான கேரள பக்தர்கள் தங்குவதற்கு 5 ஏக்கர் நிலம் தருவதற்கு தமிழக அரசு தயாராக இருக்கிறது என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். கேரள முதல்–மந்திரியும் உறுதி அளித்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது ஒரு பரஸ்பர அன்பை வளர்க்கும். இருமாநில அரசுகளும் இதை உடனடியாக நிறைவேற்றி நல்லுறவை வளர்க்கவேண்டும்.

இந்த ஆண்டு இதுவரை இல்லாத கூட்டம் வரத்தொடங்கியுள்ளதால், சபரிமலையில் வி.ஐ.பி. தரிசனம் கிடையாது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது நிச்சயமாக வரவேற்புக்குரியது. இதுபோல, பக்தர்கள் தரிசனம் முடிந்து திரும்பும்போது, தங்களுடைய உடைகளை பம்பா ஆற்றில் வீசி எறிவதும், கழுத்தில் அணிந்துள்ள மாலைகளை வீசுவதும், இங்கு கடைபிடிக்கப்படும் மரபுக்கு உரித்தானது அல்ல என்று மேல்சாந்தி அறிவித்துள்ளார். இதுமட்டுமல்லாமல், பக்தர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களையோ, பைகளையோ கொண்டுவரவேண்டாம். இது சுற்றுசூழலை பெரிதும் பாதிக்கிறது. இருமுடி கட்டிவரும்போதும் அதில் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டுவரவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார். நிச்சயமாக இது பக்தர்கள் கடைபிடிக்கவேண்டிய ஒன்றாகும்.

சபரிமலை பக்தர்கள் அனைவருடைய வாயிலும் எப்போதும் ஒலிக்கும் பாடல்,

ஹரிவராசனம் விஸ்வமோகனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அரிவிமர்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா என்ற பாடல் ஆகும்.

பிரபல பாடகர் ஜேசுதாஸ் 1975–ம் ஆண்டு பாடிய பாடல் இன்றும் சபரிமலையில் ஒவ்வொரு நாள் இரவும் கடைசிபூஜை முடிந்தவுடன், சுவாமி அய்யப்பனை தூங்கவைப்பதற்காக பாடப்படும் உறக்கு பாட்டு என்று கூறப்படும் தாலாட்டு பாட்டு என்று அழைக்கப்படுகிறது. 1920–ம் ஆண்டு எழுதப்பட்ட இந்தப்பாடலில் ஒவ்வொரு வரிக்குப்பிறகும் சுவாமி என்ற வரி உண்டு. அது இந்த பாடலில் இல்லை. அதுபோல அரிவிமர்தனம் என்று இரண்டு வார்த்தைகள் தனித்தனியாக உச்சரிக்கப்படுவதற்கு பதிலாக, ஒரேவார்த்தையாக உச்சரிக்கப்படுகிறது. அரி என்றால் விரோதி என்றும், விமர்தனம் என்றால் அழிப்பது என்றும் பொருள். எனவே, இந்த பாடலை மீண்டும் ஜேசுதாசை வைத்தே திருத்தங்களோடு ரிக்கார்டு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் இதுபோன்ற திருத்தங்களை வரவேற்கிறார்கள். பக்தர்களின் வசதிக்காக இந்த ஆண்டு அய்யப்பன் கோவில் நிர்வாகம் எடுத்துள்ள முடிவுகள் அனைத்தும் வரவேற்புக்குரியது. தமிழக அரசின் கோரிக்கைகளையும் நிறைவேற்றவேண்டும்.



No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024