Tuesday, November 28, 2017

வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு: விரைவில் ரூ.100ஐ தொடும் அபாயம்

2017-11-27@ 00:50:45

மும்பை: வெங்காயம் விலை கடந்த சில நாட்களில் கடுமையாக அதிகரித்துள்ளது. சில்லறை சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ.65 ஆக அதிகரித்துள்ளது. விரைவில் இந்த விலை ரூ.100 ஆக அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. வெங்காயம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் வாஷியில் உள்ள ஏ.பி.எம்.சி. மொத்தச்சந்தைக்கு தினமும் 150 லாரிகளில் பெரிய வெங்காயம் வரும். ஆனால் இப்போது வெறும் 90 லாரிகளில் மட்டுமே வெங்காயம் வருகிறது. வெங்காயத்தின் வரத்து குறைவு காரணமாக விலையும் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை பருவ மழை நீடித்ததால் வெங்காய பயிர்கள் மோசமாக பாதிக்கப்பட்டது. புதிய வெங்காயத்தின் வரத்து தொடங்கி விட்டபோதிலும் அது மும்பையின் தேவைக்கு போதுமானதாக இல்லை. இன்னும் 20 நாட்கள் கழித்துதான் முழு அளவில் காரிப் பருவ வெங்காயத்தின் வரத்து இருக்கும் என்று கருதப்படுகிறது.

வாஷி மொத்த சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 48 ரூபாய் அளவுக்கு விற்பனையாகிறது. சில்லரைச் சந்தையில் 65 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஏ.பி.எம்.சி. மொத்தச்சந்தையின் முன்னாள் இயக்குனர் அசோக் இதுகுறித்து கூறுகையில், ‘‘இரண்டு வாரமாக வெங்காயத்தின் விலை ஒரே சீராகத்தான் இருந்தது. ஆனால் திடீரென ஒரே நாளில் 25 சதவீதம் அதிகரித்துள்ளது. விவசாயிகளின் முதல்கட்ட பெரிய வெங்காய பயிர்கள் நீடித்த பருவமழை காரணமாக சேதம் அடைந்தது. இதனால் அக்டோபர் மத்தியில் வழக்கமாக வரக்கூடிய வெங்காயம் வரவில்லை. இரண்டாம் கட்ட வெங்காயம் சந்தைக்கு டிசம்பர் மத்தியில்தான் வரும். அதுவரை அடுத்த சில நாட்களுக்கு தொடர்ந்து விலை உயர்வு இருந்துகொண்டுதான் இருக்கும். சில்லறை விலையில் ரூ.100 வரை உயரக்கூடும்’’ என்றார்.

புதிய வெங்காயம் ஒரு கிலோ 42 ரூபாய் வரையும், பழைய வெங்காயம் 48 ரூபாய் வரையும் இரண்டு நாட்களுக்கு முன்பு விற்பனையானது. புதிய வெங்காயத்தில் அதிக அளவு சேதம் அடைந்த வெங்காயம் இருக்கிறது. மொத்த சந்தையில் கடந்த வாரம் 20 முதல் 30 ரூபாய் வரை விற்பனையானது. ஆனால் இப்போது 45 முதல் 50 ரூபாய் வரை விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக காலம் தவறிய மழை காரணமாக வெங்காய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முட்டை விலை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் வெங்காயம் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களை கடுமையாக பாதித்துள்ளது. வெங்காயம் அதிகம் விளையும், மகாராஷ்டிராவிலும், கர்நாடகாவிலும் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், அது நாடு முழுவதும் விலை உயர்வை ஏற்படுத்தும் சூழ்நிலை உள்ளது.

No comments:

Post a Comment

HC refuses to hear PIL against NRI quota in med colleges

HC refuses to hear PIL against NRI quota in med colleges TIMES NEWS NETWORK  25.11.2024  Bhopal/Jabalpur : A division bench of MP high court...