Tuesday, November 28, 2017

தலையங்கம் 

பிளஸ்–1 மாணவர்களுக்கும் ‘நீட்’ பயிற்சி




தமிழ்நாட்டில் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகள், 10 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், 10 நிகர்நிலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு 6 ஆயிரம் மாணவர்கள் நீட்தேர்வு அடிப்படையில் எம்.பி.பி.எஸ். படிப்புக்காக சேர்க்கப்பட்டனர்.

நவம்பர் 28 2017, 03:00 AM
தமிழ்நாட்டில் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகள், 10 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், 10 நிகர்நிலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு 6 ஆயிரம் மாணவர்கள் நீட்தேர்வு அடிப்படையில் எம்.பி.பி.எஸ். படிப்புக்காக சேர்க்கப்பட்டனர். இதில், 3,377 மாணவர்கள் அரசாங்க கோட்டாவில் சேர்க்கப்பட்டனர். நீட்தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குபெற தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்தது. ஆனால், முடியவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் தமிழக சட்டசபையில் நீட் தேர்வுக்கு, பட்டபடிப்பிலும், பட்டமேற்படிப்பிலும் விலக்கு அளிக்க வகைசெய்யும் வகையில் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன. ஆனால், ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைப்பதற்காக மத்திய அரசாங்கத்தின் துறைகள் அதற்கு பரிந்துரை செய்யாததால், கட்டாயமாக நீட் தேர்வு எழுத வேண்டியநிலை ஏற்பட்டது.

எனவே, இந்த ஆண்டு நீட்தேர்வின் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடந்தது. நீட்தேர்வு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படும் கேள்விகளை கொண்டதாகும். மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களால் நிச்சயமாக நீட்தேர்வை எதிர் கொள்ளமுடியாது. இந்த ஆண்டு கூட 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் 2,503 எம்.பி.பி.எஸ். இடங்களில், அரசு பள்ளிக்கூடங்களில் படித்த 2 மாணவர்கள் மட்டுமே சேரமுடிந்தது. மேலும், 3 மாணவர்கள் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் அரசாங்க கோட்டாவில் சேர்ந்தனர். ஆக, அரசு பள்ளிக்கூடங்களில் படித்த 5 மாணவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் சேரமுடிந்தது. வருகிற ஆண்டிலும் நீட்தேர்வு மூலம்தான் மருத்துவக்கல்லூரிகளிலும், பல் மருத்துவக்கல்லூரிகளிலும் சேர முடியும் என்ற நிலைமையை புரிந்து கொண்டு, தமிழக அரசு அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மாணவர்களுக்கு நீட் தேர்வுப்பற்றி பயிற்சி அளிப்பதற்காக பயிற்சி வகுப்புகளை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து, அதற்கான நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

இந்தத்திட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவர்கள் பயிற்சிகளை பெறமுடியும். இந்த பயிற்சிக்காக 73 ஆயிரம் மாணவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். ஒரு பஞ்சாயத்து யூனியனுக்கு ஒரு மையம் என்ற விகிதத்தில், 412 மையங்கள் இந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டு, முதல் கட்டமாக 100 மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தத்திட்டத்தின்கீழ் பிளஸ்–2 வகுப்பு மாணவர்கள் மட்டுமே இந்த ஆண்டு மையங்களில் சேர்ந்து இலவச பயிற்சியை பெற முடியும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரையிலும், பொதுத்தேர்வு முடிந்தபிறகு தினந்தோறும் இதேநேரத்தில் நடத்தப்படுகிறது. மாணவர்களிடம் இருந்து எந்தவித கட்டணமும் பெறாமல், பிளஸ்–2–க்கு பிறகு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேரவிரும்பும் மாணவர்களுக்கு முற்றிலும் இலவச பயிற்சி அளிக்க அரசு தொடங்கியுள்ள முயற்சி பாராட்டுக்குரியது. இந்த மையங்களில் வீடியோ கான்பரன்சிங் முறைகளில் இந்த பயற்சி அளிக்கப்படுகிறது. இப்போது 100 மையங்களில் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது போதாது. இப்போது நவம்பர் முடியப்போகிறது. மார்ச் மாதம் பிளஸ்–2 தேர்வு நடக்கும் நிலையிலும், மே மாதம் நீட்தேர்வுகள் நடக்கும் நிலையிலும், மீதமுள்ள 312 மையங்களை உடனடியாக தொடங்க வேண்டும். வீடியோ கான்பரன்சிங் சிலநேரங்களில் தெளிவாக இல்லை. எல்லோருக்கும் சந்தேகம் கேட்கமுடியவில்லை என்று ஒரு குறைபாடு உள்ளது. இந்த குறைகளையெல்லாம் நீக்குவதற்கு கல்வித்துறை உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். மேலும், நீட்தேர்வில் பிளஸ்–1 பாடங்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படுவதால், அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்தே பிளஸ்–1, பிளஸ்–2 வகுப்பு மாணவர்களுக்கு இந்த பயிற்சி மையத்தை தொடங்கவேண்டும். ஒரு பஞ்சாயத்து யூனியனுக்கு ஒரு மையம் என்றால் தூரத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு குறிப்பாக, ஏழை மாணவர்கள் பயிற்சியில் கலந்துகொள்வது சற்று சிரமமான காரியமாகும். எனவே, அடுத்த ஆண்டு முதல் மையங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP Amarjeet.Singh@timesofindia.com 10.04.2025 Bhopal : Twice ‘outsourced’, the ...