Sunday, November 26, 2017

களமிறங்கிய பெண் அதிகாரி - பொதுமக்கள் பாராட்டு

பாலஜோதி.ரா
ம.அரவிந்த்


 
'சொல் அல்ல செயல்'என்பதை நிரூபிக்கும் விதமாக புறப்பட்டு விட்டார், புதுக்கோட்டை நகராட்சியில் சுகாதார அலுவலராக பணி புரியும் மருத்துவர் யாழினி. இவர் இன்று அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கையில் தீவிரமாக இறங்கினார். நகரின் முக்கிய வீதிகளில் உள்ள கடைகளில் நுழைந்தவர் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களைக் கைப்பற்றிக் கிழித்து எறிந்தார்.

சம்மந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு அபராதமும் விதித்தார். இவரது இந்த திடீர் நடவடிக்கையால், வியாபாரிகளும் கடைகளின் உரிமையாளர்களும் அதிர்ந்து போனார்கள். சில நாட்களுக்கு முன்னர் யாழினி பொது இடங்களில் புகை பிடித்தல் குறித்தத் துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தும் கடைகளில் ஒட்டியும் சென்றார். அப்போது சிலர், யாழினியின் கண்களுக்கு முன்பாகவே அந்தத் துண்டு பிரசுரங்களைக் கிழித்துப் போட்டார்கள்.

ஆனால், இன்று அவர் பிளாஸ்டிக் கவர்களை ஒழிக்கும் நடவடிக்கையில் காட்டிய தீவிரமும் உடனடியாக அபராதம் விதித்ததும் பொது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. "பார்ப்பதற்கு காலேஜ் படிக்கும் பொண்ணு மாதிரி இருக்காங்க. அவங்களை ஆபீஸர்னு சொன்னா, யாருமே நம்பமாட்டாங்க. பிளாஸ்டிக் கவர்களை ஒழிப்பது, பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் காரியங்களில் தீவிரம் காட்டுவது என்று அந்த அம்மா செயல்படுவது எங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு"என்று யாழினியை சிலாகித்து பாராட்டுகிறார்கள், புதுக்கோட்டை நகரவாசிகள்.

நம்மிடம் பேசிய யாழினி, 'பிளாஸ்டிக் உபயோகம் இல்லாத நகரமாக புதுக்கோட்டையை மாற்ற, நகராட்சி சார்பில் எடுக்கும் எங்களது நடவடிக்கைகளால் மட்டுமே சாத்தியபடாது. பொது மக்களின் ஒத்துழைப்பும் வியாபாரிகளின்ஆதரவும் கட்டாயம் தேவை. மாற்றம் நம் ஒவ்வொருவரிடமிருந்தும் தொடங்க வேண்டும். அப்போதுதான் நாம் நினைக்கும் சமூக மாற்றங்களைக் கொண்டு வர முடியும்' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024