Thursday, November 30, 2017

வரதட்சணை வழக்கில் கைது : சுப்ரீம் கோர்ட் விளக்கம்

Added : நவ 30, 2017 02:11

'வரதட்சணை வழக்கில், கணவன் மற்றும் அவரது குடும்பத்தாரை கைது செய்வது தொடர்பான சட்டப் பிரிவில் நீதிமன்றங்கள் எந்த வழிமுறைகளையும் உருவாக்க முடியாது' என, உச்ச நீதிமன்றம் கூறிஉள்ளது. வரதட்சணை வழக்கில், பெண்கள் அளிக்கும் புகாரின் அடிப்படையில், கணவன் மற்றும் அவரது குடும்பத்தாரை கைது செய்யும் வகையில், இந்திய தண்டனைச் சட்டம், 498ஏ பிரிவு அமல்படுத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்தாண்டு ஜூலையில், சில வழிமுறைகளைக் கூறியது.'ஒவ்வொரு மாவட்டத்திலும் குடும்ப நலக் குழுக்களை அமைக்க வேண்டும். 'வரதட்சணை தொடர்பான புகார்களை அந்தக் குழு விசாரித்து, தன் பரிந்துரையை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அளிக்கும். அதுவரை, கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது' என, உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.அதை எதிர்த்து, நியாயதார் என்ற பெண்கள் நல அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில், 'பாதிக்கப்படும் பெண், தன் கடைசி வாய்ப்பாகவே, போலீசில் புகார் கொடுக்கிறார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால், கைது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி மறுக்கப்படுகிறது' என, கூறப்பட்டிருந்தது.இந்த வழக்கு, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது; அமர்வு கூறியதாவது:


விசாரணையை எப்படி நடத்த வேண்டும் என, நீதிமன்றம் வழிமுறைகளை வகுக்கலாம். கைது நடவடிக்கைகளில் அவ்வாறு எந்த வழிமுறையையும் வகுக்க முடியாது. ஏற்கனவே உள்ள சட்டத்தின்படிதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மனு மீதான விசாரணை, ஜன., மூன்றாவது வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது.இவ்வாறு அமர்வு கூறியது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024