மனதை அழகாக்குவோம்
Added : ஏப் 26, 2021 23:59
'நல்லா இருக்கீங்களா' என்பது தான் நீண்ட இடைவெளிக்குப் பின் நாம் சந்திக்கும் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கேட்கின்ற முதல் கேள்வி. சமயங்களில் கேட்க இருக்கிற ஒரே கேள்வியாகவும் அது மட்டும் இருக்கும். சரி அந்தக் கேள்வியாவது ஒருவருக்கு ஒருவர் கேட்டுக் கொள்ள இருக்கிறதே என எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
வயதாக ஆக நம் உடல் நலம் குறித்த அக்கறை அதிகரிக்கிறது.சுவர் இருந்தால் தான் சித்திரம் என்பதை உணர்ந்து நடை பயிற்சி, உடற்பயிற்சி, சிறுதானிய உணவு, உணவுக் கட்டுப்பாடு என்றெல்லாம் நம்மில் பலரும் கவனமாகப் பின்பற்றுகிறோம். அதே மாதிரி உடலின் தன்மைக்கு ஏற்ப சர்க்கரை, உப்பு அளவுகளைக் குறைத்தும் உண்கிறோம். அவ்வப்போது மருத்துவரிடம் உடல்நிலையை பரிசோதனை செய்து அதற்கேற்ப மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறோம். மாத பட்ஜெட்டில் தனியிடம் மருந்துகளுக்கு செல்ல ஆரம்பிக்கிறது. பொடி எழுத்துகளை வாசிக்க தனியாக கண்ணாடி வாங்குகிறோம். தலையில் அதிகரிக்கும் வெள்ளை முடிகளைப் பார்த்து சற்று அதிர்ந்து நாள்பட சமாதானமாகிறோம். வயது நாற்பதைத் தொட்டு நகர்பவர்களின் வாழ்க்கை இப்படித்தான் மாறத்துவங்குகிறது.
உடம்பு என்னும் வீடு
நம் உயிர் இருக்கிற உடம்பு என்னும் வீட்டை பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறோம். மாத்திரை மருந்துகளை எடுத்துக் கொண்டே ஓடுகிற ஓட்டம் உடலை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவே. அதே அளவு கவனம் மனத்திற்கும் நிச்சயம் தேவை.மனம் தெளிந்த வானம் போல இருக்க ஆசைப்படாதவர்கள் இருக்கிறோமா என்ன? சட்டென உடைந்து போகாமல், சுளுவாய் சோர்ந்து போகாமல், நிதானமாய் மனம் இருத்தல் என்பது பெரிய விஷயம். ஆனால் எளிதில் கலங்கிப் போய்விடுமளவு பலவீனமாய் பல நேரங்களில் இருக்கிறோம். கோபம் வெடிக்கையில் எது நம் சமநிலையைக் குலைக்கிறது என ஆராய வேண்டும். யாரோ ஒருவர் அவர் இயல்பை மாற்றி நம்மிடம் நடந்திருக்கக் கூடும். எதுவோ ஒன்று நாம் திட்டமிட்டதற்கு நேர்மாறாய் வந்திருக்கலாம். ஏமாற்றம் தந்த ஒன்றை புன்னகையோடு எதிர்கொள்ள நாம் புத்தர்அல்ல.
பொங்கும் கோபம்
கோபம் பொங்கிய நொடியில் எதிரில் கேட்பவர் மனம் பொசுங்கும் படியான சொற்களை நம் நாக்கு வெளியேற்றும். நம்மை விட எளியவர் என்று நினைக்கும் போது மட்டுமே இது நடக்கும். வயதிலும் குறைந்தவராக, குறிப்பாக நம் குழந்தைகளாக இருந்தால் கை நீளும். நாம் உயர்ந்தவர் என உயர்த்தி வைத்திருப்பவரிடம் அதே சூழல் வரும் போது நாக்கும், கையும் மவுனமாக இருக்கும். வாய்ப்பேச்சோ, கைகலப்போ, வாய்க்கால் தகராறோ பொதுவாக சண்டை நடக்கும் இடங்களை சற்று கூர்ந்து கவனித்தால் சம்பந்தப்பட்ட இரு தரப்புமே உனக்கு நான் சளைத்தவனில்லை என்கிற எண்ணம் கொண்டவையாக இருக்கும். இருவரில் யார் கை ஓங்கி வெற்றிக் கொடி நாட்டப்படுகிறது என்பதில் பெரிய ஆர்வம், ஆவேசம் பொங்கும். ஆனால் இவனிடம் பேசி ஜெயிக்க முடியாது என உறுதியாகத் தெரிந்தால், எதிர்ப்பைத் தெரிவிக்க மாட்டோம். அதுவும் அவர்களால் காரியம் ஆகவேண்டி இருந்தால் உள்ளே என்ன குமுறினாலும் முகம் புன்னகைப் பூக்கும். அந்த சூழலைக் கடந்தால் போதும் என்பது மட்டும் உள்ளே ஓடும்.
சொல்லாத சொல்
நன்றாக யோசித்தால் கோபத்தை சற்று ஆறப்போட்டால், யாரும் எதுவும் சொல்லாமலே சமாதானமாகி இருப்போம். ஆத்திரத்தில் கட்டுப்பாட்டை இழந்த வாய் நிதானம் இல்லாமல் சொல்லும் சொற்களை, ஆற அமர உட்கார்ந்து யோசிக்கையில் தவிர்த்து இருக்க வேண்டிய சொற்களின் பட்டியல் பெரிதாக மிரட்டும். அதன் பின் சுய பச்சாதாபத்தில் தவிப்போம். சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை என்கிற பாடல் வரி நினைவுக்கு வருகிறது.இன்னொன்றும் இருக்கிறது, கோபத்தில் வெளிப்படுத்த வேண்டிய சொற்களை அந்த இடத்தில் சொல்லாமல், மூன்றாவது ஒரு நபரிடம் பகிர்தலும் நிகழும். அந்த நபருக்கு சம்பந்தப்பட்டவர் வேண்டியவர் என்றால் ஒரு மாதிரியும் வேண்டாதவர் என்றால் இன்னொரு மாதிரியும் திரித்து சொல்வார். முடிந்த அளவு சம்பந்தமில்லாத நபரிடம் பகிரலாம். அல்லது நமக்குள்ளேயே அலசி ஆராயலாம். இந்த சொல் சொன்னவரின் நோக்கம் என்ன, அதனால் கிடைக்கக் கூடிய பலன் எது என யோசிக்கலாம். அதே மாதிரி தன் பக்கம் உள்ள தவறு என்ன என்பதையும் கட்டாயம் பார்க்க வேண்டும். இரண்டு பக்கங்களையும் அலசி ஆராய்ந்தால் மட்டுமே நாம் காயம் பட்ட சம்பவத்தின் முழு வடிவமும் கிடைக்கும்.
கோபத்தை ஆள்வோம்
விரும்பத் தகாத சூழலை சரி செய்து, இயல்பாக்குவது நம் நோக்கமாக இருந்தால், முதலில் 'ஈகோ' வை விட்டு ஒழிக்க வேண்டும். நாம் சாதாரண எளிய அன்பான மனிதர்கள் என்பது எப்போதும் நினைவில் இருக்கட்டும். போனது போகட்டும் என பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் முதிர்ச்சி மனதை அழகாக்கும். இரு பக்கமும் நிம்மதி சூழ உதவும்.நியாயமான கோபத்தை அவசியமான இடங்களில் காட்டலாம். அந்த நேரங்களிலும் சரியான வார்த்தைகளைக் கோர்த்து எதிரில் இருப்பவர் புரிந்து கொள்ளும்படி நிதானமாக பேச வேண்டும்.
நல்ல விளைவு மட்டுமே ஏற்படும் என்கிற உறுதி இருந்தால் கோபம் நல்லது தான். ஆனால் அனாவசியம் என தெரிந்தால் கோபத்தைக் கட்டுப்படுத்துவதே சிறந்தது. நிமிடங்களில் வந்து போகிற கோபம் என்கிற ஒற்றை உணர்வுக்கு, நீண்ட காலம் பிரியத்துடன் இருந்தவர்களைப் பகைக்க வேண்டியதில்லை.கட்டுப்படுத்த முடியாமல் கத்தி இருக்கிறோம் என்றால் கோபம் தான் நம்மை ஆள்கிறது. அதற்கு நாம் அடிமை. கோபத்தைக் கட்டுப்படுத்தும் திறனை வசப்படுத்தினால் நாம் கோபத்தை ஆள்வோம். அதன் வழியே நம் சுற்றத்தையும் ஆள்வோம்.
மனநலம் பேணுவோம்
உடல் நலத்தைப் பேணுவதைப் போல மன நலத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்காக, மாணவர்களுக்காக, இளைஞர்களுக்காக, முதியவர்களுக்காக என அக்கறையான பார்வைகள், உரைகளை அடிக்கடிக் கேட்கிறோம்; பார்க்கிறோம். ஆனால், மத்திம வயதில் இருப்பவர்களுக்கு கிடைப்பது என்னவோ பிள்ளைகளைப் பார்த்துக்கோ, பெத்தவங்களைப் பார்த்துக்கோ, நல்லா சம்பாதி போன்ற கடமைகளை நினைவூட்டுதல் மட்டும் தான். ஆனால், நிஜத்தில் உடல் ரீதியாக உள்ளும், புறமும் நிகழும் பெரிய மாற்றங்களை போராட்டங்களோடு எதிர் கொண்டு அவர்களின் நாட்கள் நகர்கின்றன.
அக்கறையும் அன்பும் அதிகம் தேவைப்படுபவர்களாக இருக்கின்றனர். ஆனால் அவர்களிடம் நீ அப்படி இரு, இப்படி இருக்காதே என தொடர்ந்து சொல்வதால் எரிச்சல் சிடுசிடுப்பு எளிதில் வந்து ஒட்டிக்கொள்கிறது.யாரும் யாருக்கும் அறிவுரை சொல்லத் தேவை இல்லை. தேவைப்படுமெனில் ஆலோசனை போதும். ஏற்பதும் ஏற்காததும் அவர்களின் பிரியம். நாம் பக்குவத்துடன் நடந்து கொண்டு நம்மிடம் பழகுபவர்களும் முதிர்ச்சியுடன் நடந்து கொண்டால் மனம் இறகாகும். நம் உடல் நலத்தைப் போலவே மன நலத்தையும் பார்த்துக் கொள்வது அவசியம்.-தீபா நாகராணிஎழுத்தாளர், மதுரை nraniji@gmail.com