எஸ்.கிருபாகரன்வடிவேலு நடித்துள்ள காமெடிக் காட்சி அது... மாணவனான அவர், வகுப்பறையில் அரிசி தின்று ஆசிரியர் வெண்ணிற ஆடை மூர்த்தியிடம் மாட்டிக்கொள்வார். அடுத்தக் காட்சியில், அவர் அதே அரிசியை மென்று தின்பார். ஆனால், ஆசிரியர் அதைக் கண்டுவிடாதபடி சாதுர்யமாக உண்பார். குழம்பிப்போய் இறுதியாக வடிவேலுவிடமே சரண்டராகும் வெண்ணிற ஆடை மூர்த்தி, ''எப்படிடா சத்தம் வராம அரசியைத் திங்கறே?'' எனக் காரணம் கேட்பார். அப்போது வடிவேலு, ''இப்படித்தான் சார்...'' என தன் பாக்கெட்டில் அரிசியைக் கொட்டி வகுப்பறை குடத்திலிருந்து தண்ணீர் கொண்டுவந்து தன் பாக்கெட்டில் ஊற்றுவார். ''அரிசி ஊறியபின் சாப்பிட்டா சத்தமே வராது சார்'' என தொழில்நுட்பத்தையும் விவரிப்பார்.
தமிழக அரசியலில், இந்த அரிசியைப்போல்தான் கடந்த காலத்தில் அமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள். வடிவேலுவைப்போல், தன் அமைச்சர்களின் அரைகுறை சத்தம் வெளியே கேட்டுவிடாதபடி ஜெயலலிதா சர்வாதிகாரம் எனும் தண்ணீர் ஊற்றி சத்தமின்றி வைத்திருந்திருக்கிறார் என்பது இப்போது மேடைக்கு மேடை அமைச்சர்கள் பேசிவருவதைப் பார்க்கும்போது புலப்படுகிறது.
அமைச்சர்களின் அரைகுறை பேச்சால் தன் ஆட்சி அதிகாரத்துக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களை அடக்கி ஆண்டு அதன்மூலம் வரலாறு தனக்களித்த சர்வாதிகாரி என்ற பெயரையும் தியாக உள்ளத்தோடு ஏற்றுக்கொண்டிருந்திருக்கிறார் ஜெயலலிதா என்பது இப்போதுதான் புரிய ஆரம்பித்திருக்கிறது மக்களுக்கு.
கேலி செய்யும் அளவுக்கு அ.தி.மு.க அமைச்சர்கள் ஆளுக்கொரு கருத்தை முரண்பாடாகப் பேசிவந்தாலும் அத்தனை அமைச்சர்களுக்கும் டஃப் கொடுக்கும் போட்டியாளர் திண்டுக்கல் சீனிவாசன்தான். மற்றவர்களின் உளறல் அவர்களுக்கு எதிராக மாறுகிறது என்றால், திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு கட்சியையே காவு கொடுப்பதாக உள்ளது.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் முரணான பேச்சுகளை புத்தகமாகவே எழுதலாம். ஆனால், இப்போதைக்கு வாசகர்களுக்கு அவரது சர்ச்சை பேச்சுகளில் ஒரு சிலவற்றை மட்டும் தொகுத்துக் காட்டலாம்...
அ.தி.மு.க-விலிருந்து ஓ.பன்னீர்செல்வம் முரண்பட்டு தனி அணியாக அரசியல் செய்துவந்த சமயத்தில், அ.தி.மு.க சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி (ஜெயலலிதா பிறந்தநாள்) ஒன்று திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நடந்தது. அப்போது பேசிய திண்டுக்கல் சீனிவாசன்,
"அம்மா இறப்புல மர்மம் இருப்பதாகத் தேவையில்லாம சிலர் சர்ச்சையைக் கிளப்புறாங்க. அம்மா மருத்துவமனையில இருந்தப்ப தினமும் என்ன நடந்ததுன்னு வீடியோ எடுத்திருக்கோம். அதையும் உங்களுக்கு காட்றோம்னு உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்திலயெல்லாம் சொல்லியிருக்காங்க. எதுக்கு இதை உங்களுக்குச் சொல்றேன்னா, இங்க நம்ம கணவர் இருக்காங்க, அவருக்கு பலகோடி சொத்து இருக்கும்... அவரைக் கொலைபண்ணிட்டா, அவரோட சொத்து தனக்கு வந்திடும்னு எந்தப் பொண்ணும் நினைக்கமாட்டா.
அம்மாவைப் பொறுத்தவரை, 30 வருஷமாகத் தன்னுடைய உயிர்த் தோழியாக, சின்னம்மாவை உடன் வைத்திருந்தார். தன்னோட 32 வயசுல அம்மாகிட்ட சேர்ந்தாங்க சின்னம்மா. இன்னிக்கு அவருக்கு 62 வயசாச்சு. இன்னிக்கு அக்கா மகன், அண்ணன் மகன், தங்கச்சி மகள்னு சொல்றாங்க இல்ல... சொத்துக்கு ஆசைப்பட்டு அப்படி சொல்கிற பலபேரை அம்மா நமக்கு காமிச்சதில்லை... சொன்னதில்லை. சரி சின்னபிள்ளைக போகட்டும். ஆனா, அம்மா அவங்க அவங்களுக்கு என்ன செய்யணுமோ அத்தனையும் செஞ்சிட்டாங்க.
அம்மா ஆஸ்பத்திரியில இருந்தபோது நடந்த இடைத்தேர்தல்ல அவங்களால கையெழுத்துப் போடமுடியாத சூழ்நிலையில் ரேகை வெச்சு, எங்களையெல்லாம் கூப்பிட்டு, நல்லபடியா வேலைபார்த்து ஜெயிச்சுட்டு வாங்கன்னு சொல்லி அனுப்பி வெச்சாங்க. அந்த தேர்தல்ல ஜெயிச்சதும், அதை டி.வி-யில பார்த்துட்டு, அம்மா எங்களையெல்லாம் கூப்பிட்டு மூன்று வகையான இனிப்பு கொடுத்துட்டு, நான் அறிக்கைமட்டும்தான் கொடுத்திருந்தேன். நீங்கள்லாம் நல்லா வேலைபார்த்து, வேட்பாளர்களை ஜெயிக்க வெச்சிருக்கீங்க. இது எம்.ஜி.ஆருக்கு கிடைச்ச சாதனைன்னு சொன்னாங்க. அப்பக்கூட எனக்கு கிடைச்ச சாதனைன்னு அம்மா சொல்லல. ஆக மகிழ்ச்சியா இருந்தாங்க.
ஆஸ்பத்திரியில ஒருவாரம், பத்துநாள் இருக்கறவங்களைப் பாத்தா, சேவ் பண்ணாம, தலைக்கு மைப்போடாம ஆளே அடையாளம் தெரியாம மாறிடுவாங்க. இதே பிரச்னைதான் அம்மாவுக்கும். சினிமா கதாநாயகியாக, தலைவராக நாம் பார்த்த அம்மா ஆஸ்பிட்டல்ல ஊசி, மருந்தால் முகங்கள் கருப்பேறிச்சு. அப்பவும்கூட போட்டோ எடுத்துப்போடலாம்னு அப்போலா ஆஸ்பத்திரி சேர்மன் மற்றும் எங்களைப் போன்றவர்கள் எல்லாம், ‘அம்மா, நீங்க நலமா இருக்கீங்கங்கிறதைப் போட்டோ எடுத்து பேப்பர்ல போடலாமா?'னு கேட்டோம். அதுக்கு அவங்க, ‘சீனிவாசன், நீங்கள்லாம் இதுக்கு முன்னாடி என்னை எப்படி பார்த்திருக்கீங்க. இப்ப நான் இருக்கற நிலை என்ன? நான் உடல்நிலை தேறி, குளிச்சி முழுகி, நல்லா டிரஸ் பண்ணிக்கிட்டு, நானே வந்து வெளிய நின்னு எல்லாத்துக்கும் வாழ்த்து சொல்வேன். அதுவரைக்கும் பொறுமையாக இருங்க. பெண்கள், 'அம்மா இப்படி ஆகிட்டாங்களே'னு நினைப்பாங்க. அதுனால உடல் தேறி வரட்டும் பார்த்துக்கலாம். அதுவரைக்கும் புகைப்படம் எடுக்காதீங்க'னு சொல்லிட்டாங்க. அஞ்சி நாளைக்கு ஒருதடவை, பத்து நாளைக்கு ஒருதடவை நாங்கள்லாம் சந்திச்சுப் பேசிக்கிட்டிருந்தோம். திடீர்ன்னு அவங்களுக்கு மாரடைப்பு வந்ததுனால இறந்துட்டாங்க” எனக் கண்ணீர் விட்டார்.
மக்களின் பிரதிநிதியான ஓர் அமைச்சரின் இந்தப்பேச்சு மக்களிடம் போய்ச்சேர்ந்த 6 மாதங்களில், அ.தி.மு.க-வின் இரு அணிகளும் இணைந்துவிட்டன. அப்போது அதே திண்டுக்கல்லில் நடந்த 'அண்ணா பிறந்தநாள் விழா' பொதுக்கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், ''ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நாங்கள் யாரும் நேரில் சென்று பார்க்கவில்லை. சசிகலா குடும்பம் எங்களைப் பார்க்கவிடவில்லை. ஜெயலலிதாவைப் பார்த்ததாகவும், 'அவர்
இட்லி சாப்பிட்டார் சட்னி சாப்பிட்டார்' என்று நாங்கள் சொன்னதெல்லாம் பொய். ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை விவரம் குறித்து சசிகலா குடும்பம் கூறச்சொன்னதைத்தான் வெளியில் சொன்னோம். மூத்த அமைச்சர் என்ற முறையில் உண்மையைக் கூற வேண்டிய கட்டாயம் இப்போது எனக்கு உள்ளது” என நல்லபிள்ளையாக மன்னிப்புக் கேட்டார்.
ஜெயலலிதாவின் மரணம் மர்மமானதாகப் பேசப்பட்டுவந்த நிலையில் அமைச்சர் பொறுப்பில் உள்ள ஒருவர் சர்வசாதாரணமாக 'நாங்கள் பொய்சொன்னோம்' எனக் கூறுகிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி அவர் ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கு மாறானது இது என்பதைப்பற்றிக்கூட அவர் கவலைப்படவில்லை. எதிர் முகாமை சங்கடப்படுத்த தன் அமைச்சர் பொறுப்பின் கண்ணியத்தைக் காற்றில் பறக்கவிட்டார் அவர்.
சீனிவாசனின் இந்தப் பேச்சுக்குப் பதிலடியாக சசிகலா தரப்பில் பதிலளித்த தினகரன், ''பதவிக்காகத்தான் அவர் இப்படிப் பேசுகிறார்'' என சாதாரணமாகச் சொல்லி விஷயத்தை முடித்துக்கொண்டது இன்னொரு அதிர்ச்சி.
அ.தி.மு.க-வின் நிறுவனரான எம்.ஜி.ஆர். மறைந்து 30 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும்கூட உலகளவில், தமிழர்களிடையே இன்றளவும் கொண்டாடப்படும் தலைவராக இருக்கிறார் அவர். இன்றும் பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாக்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
அவரது நூற்றாண்டு விழாவை அரசு சார்பில், கொண்டாட முடிவெடுத்த தமிழக அரசு, ஜூன் 30-ம் தேதி தொடங்கி 2018-ம் ஆண்டு ஜனவரி வரைக் கொண்டாட அறிவிப்பு செய்தது. மதுரையில், இதன் அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்துகொண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம், ''எம்.ஜி.ஆர் நுாற்றாண்டு விழாவுக்கு வெளிமாநிலத் தலைவர்களை அழைக்கும் திட்டம் உள்ளதா'' எனப் பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு, ''
எம்.ஜி.ஆரைத் தமிழகத்தைத் தவிர்த்து யாருக்குத் தெரியும்? அதனால் அழைக்கும் திட்டம் இல்லை'' என கூலாகப் பதிலளித்தார் சீனிவாசன். திண்டுக்கல் சீனிவாசனின் இந்தப் பதில் அ.தி.மு.க தொண்டர்களையும் எம்.ஜி.ஆரின் ரசிகர்களையும் கொந்தளிக்க வைத்தது.
சமூக வலைதளங்கள் மற்றும் பல திசைகளிலிருந்தும் அமைச்சர் சீனிவாசனுக்கு கண்டனக் கணைகள் வந்தன. ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.ஹெச் பாண்டியன், ''எம்.ஜி.ஆரின் புகழுக்குக் களங்கம் விளைவித்த திண்டுக்கல் சீனிவாசனை அமைச்சர் பதவியிலிருந்து விலக்கவேண்டும்'' என கொதித்துப் பேட்டியளித்தார். மேலும் டி.டி.வி தினகரன் மற்றும் சில மூத்த அமைச்சர்கள் ''ஏற்கெனவே கட்சிக்குள் பிரச்னை உருவாகி உள்ள நிலையில், இது தேவையா'' என அவரைக் கண்டித்ததாகத் தெரிகிறது.
தன்பேச்சுக்கு எழுந்த எதிர்வினையைக் கண்டு பயந்துபோனவர், “ ‘எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு, அவரோடு இருந்தவர்களையும், அவரைப் பற்றி முழுமையாக அறிந்தவர்களையும் அழைப்போம். அவரைப் பற்றி அறியாதவர்களை, அழைக்க வேண்டுமா' என்ற அர்த்தத்தில் நான் கருத்து தெரிவித்தேன். அதை, ஊடகங்கள், தவறாக வெளியிட்டுள்ளன. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா என இரண்டு தலைவர்களையும், உயிருக்கும் மேலாக நேசித்து வருகிறேன். எனவே, எம்.ஜி.ஆர் குறித்து நான் சொன்னதாக வந்த செய்தி தவறானது'' எனப் பல்டி அடித்தார் திண்டுக்கல் சீனிவாசன்.
தினகரன் அணி எம்.எல்.ஏ-க்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் கவர்னர் வீட்டுக்கும் தினகரன் வீட்டுக்குமாக ஆட்சியைக் கலைக்கச்சொல்லி மனுக்களுடன் அலைந்துகொண்டிருந்தபோது அதுபற்றி திண்டுக்கல் சீனிவாசனிடம் கருத்துக் கேட்கப்பட்டது. “எங்களுக்கு போதிய எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருக்கு. அப்படியே கடைசி நேரத்துல ஒண்ணு ரெண்டு குறைஞ்சாலும் அதை எப்படி சரிகட்டணும்னு எங்களுக்கு தெரியும்...அதான் பெரியவங்க சொல்லியிருக்காங்களே... பாதாளம் வரைக்கும் பாயும்னு” எனச் சர்வசாதாரணமாகப் பத்திரிகையாளர்களிடம் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ஆனால், அமைச்சரோ அதுபற்றி அலட்டிக்கொள்ளாமல் அடுத்த கேள்விக்கு போய்விட்டார்.
இதுமட்டும்தானா... கடந்த அக்டோபர் மாதம் 3-ம் தேதி வனத்துறை சார்பில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், 6 மாதங்களுக்கு முன் ஜெயலலிதா சென்னையில் டெங்கு போன்ற காய்ச்சல்
தீர நிலவேம்புக் கஷாயம்குடிக்க வேண்டும் எனக் கூறியதாகவும் அதைச் சாப்பிட்டதன் மூலம் மக்கள் தொற்றுநோயிலிருந்து தங்களைக் காத்துக்கொண்டதாகக் கூறி பகீர் கிளப்பினார். நேற்றுவரை அம்மா அம்மா என உருகியவர், இப்போது அம்மாவை 'ஆவி'யாக்கிவிட்டதை எண்ணி தொண்டர்கள் வேதனைப்படுவதைத் தவிர எண்ண செய்துவிட முடியும்.
கடந்த மாதம் கொளப்பாக்கத்தில் நடந்த அரசு விழாவொன்றில் கலந்துகொண்ட அவர், "காய்கறிகள், கீரைகளில்தான் சத்துகள் அதிகம். சிக்கன், மட்டன் எல்லாம் வேஸ்ட். மட்டன், சிக்கன் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். சைவ உணவுகள் சாப்பிட்டால்தான் உடல் இளைக்கும்'' எனப் பேசினார். 'மருத்துவ ரீதியாக இது பல வாதப்பிரதிவாதங்களை கொண்டுள்ள நிலையில், ஒரு மாநில அமைச்சர் போகிற போக்கில், இப்படி அடித்துவிடுவது நியாயமா?' என மருத்துவ உலகில் சர்ச்சை எழுந்தது.
அமைச்சரின் 'பொறுப்புஉணர்வு' அத்துடன் முடிந்ததா என்றால் இல்லை... டெங்கு காய்ச்சலால் தமிழகம் கடந்த இரு மாதங்களாக அதகளப்பட்டுக்கொண்டிருக்க, கடந்த 15-ம் தேதி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்த அமைச்சர், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வையிட்டார். பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “திண்டுக்கல்லில் 4 பேர் வைரஸ் காய்ச்சலில்தான் இறந்தனர். டெங்குவால் யாரும் இறக்கவில்லை” எனச் சொல்லிவைத்தார். டெங்குவால் 36 பேரை இழந்த திண்டுக்கல் மக்கள் இந்தப் பதிலால் எரிச்சலடைந்தனர். ஆனால், 5 தினங்கள் கழிந்த பின்னர், ''அது என்ன ஜுரமோ எனக்குத் தெரியாது” எனப் பல்டி அடித்தார்.
இறுதியாக (?) கடந்த சில தினங்களுக்கு முன் திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் டெங்குவுக்கு எதிராக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசியவர், ''துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து டெங்கு தொடர்பாக ஆய்வுசெய்ய எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்தார்'' எனச் சொல்லி மேடையில் இருந்தவர்களை ஜெர்க் அடையவைத்தார். 'ஒரு மாநிலத்தின் அமைச்சருக்கு நாட்டின் பிரதமர் யார் என்றுகூடவாத் தெரியாது?' எனக் கூட்டத்தில் முணுமுணுப்பு எழுந்தாலும் தான் தவறாகப் பிரதமர் பெயரை உச்சரித்துவிட்டதைக்கூட உணராமல் பேச்சைத் தொடர்ந்தார் அமைச்சர். அமைச்சரின் இந்தப் பேச்சு வீடியோ வடிவில் வெளியாகி சமூக வலைதளங்களில் இன்றளவும் துவைத்து எடுக்கப்படுகிறது.
அ.தி.மு.க-வின் சீனியர் என்பதைத்தாண்டி இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி பதவியேற்றுக்கொண்ட ஒருவரின் இத்தகைய முரண்பாடான பேச்சுகள் பொறுப்பற்றத்தனமானது. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான பேச்சுகளில் அவர் எல்லை தாண்டி பேசியிருப்பது, தண்டனைக்குரிய குற்றமும்கூட. உலகம் முழுக்க பரபரப்பாகப் பேசப்பட்ட ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த விவகாரத்தில், ஒட்டுமொத்த மக்களின் நம்பிக்கையைத் திசைமாற்றுகிற வகையிலிருந்த அவரது பேச்சுகள் நேற்றுவரை பொறுப்பற்றத்தனம். இன்று ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணைத் தொடங்கியுள்ள நிலையில், அது ஜெயலலிதாவின் மர்ம மரணத்தில் உள்ள சந்தேகங்களை அவிழ்க்கும் சாட்சியம்.
தன் பொறுப்பற்றப் பேச்சாலும் நடவடிக்கைகளாலும் விசாரணை கமிஷன் முன்பு நிச்சயம் அவர் பதில் சொல்ல வேண்டியதிருக்கும். அதுவரை அவரது பொறுப்பற்றத்தனத்துக்கு வாக்காளர்களாக நாமும் கொஞ்சம் கொஞ்சம் வருந்தத்தான் வேண்டியிருக்கிறது!
திண்டுக்கல் சீனிவாசன் வாய்க்கு அவர் சொந்த ஊரில் புகழ்பெற்ற பூட்டைப் போட்டால்தான் கட்சி பிழைக்கும் என்கிறார்கள் சொந்தக்கட்சியினரே!