முக கவசம், சமூக இடைவெளி, தடுப்பூசி...: எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் விளக்கம்
Added : மே 16, 2021 01:39
''அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டால் மட்டுமே, கொரோனா பரவலை தடுக்க முடியும். முக்கவசம், சமூக இடைவெளி, தடுப்பூசி ஆகியவற்றை அனைவரும் பின்பற்றினால், மூன்றாவது அலை வருவதை தடுக்க முடியும்,'' என, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் கூறினார்.
கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், இறப்புகளும் அதிகரித்து உள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்த நம்மிடம் இருக்கும் ஒரே தீர்வு, தடுப்பூசி மட்டுமே. இந்தியாவில், 'கோவாக்சின்', 'கோவிஷீல்டு' ஆகிய இரு தடுப்பூசிகள் உள்ளன. இத் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள, பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
பொதுமக்களின் சந்தேகம் போக்கும் விதத்தில் விளக்கம் அளித்துள்ளார் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன்.தடுப்பூசிகள் மீது பல்வேறு சந்தேகங்கள் மக்களுக்கு உள்ளன. கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள், இந்தியாவில் உள்ள தட்பவெப்பநிலைக்கு ஏற்றார் போல் தயாரிக்கப்பட்டவை.
குளிர்நாடுகளில் பரிசோதிக்கப்பட்ட மருந்துகள் இங்கு எப்படி ஏற்றுக் கொள்ளப்படும். அந்த மருந்துகளுக்கான சந்தேகங்களுக்கு என்ன பதில்?'கோவிஷீல்டு' என்பது வெக்டார் தடுப்பூசி. கொரோனா வைரஸின் புரதத்தை, மற்றொரு வெக்டாரில் ஏற்றிக் கொடுக்கக் கூடியது. 'கோவாக்சின்' என்பது வைரஸை மொத்தமாக வல்லமை இழக்க செய்வது. சில தடுப்பூசிகள் குறிப்பிட்ட தட்பவெப்ப நிலைகளில், பாதுகாக்கப்பட வேண்டும்.
அங்கு தான் பிரச்னை ஏற்படுகிறது. குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையில் வைக்க முடியாதபோது, அவை வேலை செய்வதில்லை. நம் நாட்டில் தடுப்பூசிகளை, குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையில் வைத்திருப்பது மிகவும் கடினமான விஷயம். தடுப்பூசிகள் அனைத்து, நோய் கிருமிகளின் வலிமை குறைத்தல், செயலிழக்க செய்தல், எம்.ஆர்.என்.ஏ., ஆகிய தொழில்நுட்பங்களிலேயே செயல்படுகின்றன.
நமது மக்கள் தொகைக்கு அதிக தடுப்பூசிகள் தேவைப்படும் என்பதால், பல தடுப்பூசிகளை பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. மருத்துவ வரலாறை எடுத்து பார்க்கும்போது அனைத்து மருந்துகளின் மீதும் ஒரு சந்தேகம் இருந்தது தெரிய வரும். சிறிய அளவிலான கருத்துகளை கொண்டு ஒட்டு மொத்த மருந்தையும் குறை சொல்ல முடியாது.
இது தற்போது நடப்பதற்கு, தகவல் தொடர்பு மட்டுமே காரணம்.தடுப்பூசியால் பக்க விளைவு கள் எதுவும் இல்லை என்றால், நடிகர் விவேக் தடுப்பூசி போட்ட, 24 மணி நேரத்தில் உயிரிழந்தது எப்படி?இதற்கு பதில் சொல்லும் அதிகாரம் எனக்கில்லை.
இருந்தாலும், நான் கேள்விப்பட்ட வரையில் அவருக்கு ஏற்கனவே இருந்த மாரடைப்பு அல்லது ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டதால், மாரடைப்பு ஏற்பட்டதாக அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் தெரிவித்துள்ளார். இதுவரை, தடுப்பூசி போட்ட, 24 மணி நேரத்தில், ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்பட்டதாக பதிவு இல்லை. இவ்விரண்டையும் ஆலோசித்து பார்க்க வேண்டும்.
இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதே?
தடுப்பூசி என்பது பாதிப்பை கட்டுப்படுத்துமே தவிர, பாதிப்பு ஏற்டாமல் தடுக்கும் இரும்பு கவசம் அல்ல. கொரோனா வைரஸ் உடலுக்குள் சென்ற பின், அதை வெளியில் அனுப்புவது அல்லது நோய் பாதிப்பை ஏற்படுத்தாமல் தடுக்கும் பணியை மட்டுமே தடுப்பூசிகள் மேற்கொள்கின்றன. தடுப்பூசி போட்டால், நோய் தடுக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தடுக்கப்படுவதில்லை. பாதிப்பு தான் தடுக்கப்படுகிறது.
'சார்ஸ் கோவிட் 2' என்ற வைரஸ் உடலுக்குள் செல்லும், ஆனால், கொரோனா என்ற நோய் உருவாகாது.தடுப்பூசி போட்ட பின் உடல்வலி, காய்ச்சல், இரு நாட்களுக்கு இயல்பாக இல்லாமை உள்ளிட்ட சிறிய அளவிலான பாதிப்பு ஏற்படுவது எதனால்?
தடுப்பூசி உடலுக்குள் சென்ற பின், நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகிறது. தடுப்பூசி என்பது வைரஸ் வீரியம் இழக்க செய்து உடலுக்குள் செலுத்தப்படுகிறது. வீரியம் இழந்த வைரஸ் உள்ளே செல்லும்போது வீரியம் அதிகமாக உள்ள வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பை விட குறைந்த பாதிப்பையே ஏற்படுகிறது. அந்த பாதிப்பே காய்ச்சல், வலி ஏற்பட காரணம். தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்த துவங்கி விட்டது என்பதற்கு இதுவே உதாரணம்.
தடுப்பூசி போட்டவர்களுக்கு இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் எவ்வளவு நேரத்தில் டாக்டரிடம் பரிசோதிக்க வேண்டும்?
தடுப்பூசி போட்டவர்களுக்கு இரு நாட்கள் காய்ச்சல், உடல்வலி ஆகியவை இருந்தால், கவலைப்படத் தேவையில்லை. தடுப்பூசி மையங்களிலேயே இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, மருந்துகள் வழங்கப்படுகின்றன. ஐந்து நாட்களுக்கு மேல் காய்ச்சல், வலி இருந்தால், அவர்கள் டாக்டரிடம் பரிசோதித்து அவர்கள் தரும் மருந்தை உட்கொள்ளலாம். கொரோனா என பயப்படத் தேவையில்லை.
இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்கள் முகக்கவசம் அணிவதை தவிர்க்கலாமா?
கட்டாயம் கூடாது. வைரஸ் உள்ளே செல்வதை தடுப்பூசி தடுப்பதில்லை. அதனால், மற்றவர்களுக்கு பரப்ப வாய்ப்பு ஏற்படும். என்ன தான் தடுப்பூசி போட்டுக் கொண்டாலும், வைரஸை அதிகப்படுத்தி கொள்ளும்போது தடுப்பூசியால் ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவு வேலை செய்ய வேண்டியிருக்கும். அவ்வாறு வேலை செய்தால், நோய் எதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க முகக்கவசம் அணிவது அவசியம்.
தடுப்பூசி யார் போட்டுக் கொள்ளலாம், யார் தவிர்க்கலாம்?
மூன்று பிரிவினருக்கு, இது தேவையில்லை என, நம் நாட்டில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தேசிய அளவிலான தடுப்பூசிகளுக்கான சிறப்புக்குழு யாருக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும் என்பதை வரையறை செய்துள்ளது. அதன்படி, கர்ப்பிணிகள், 18 வயதுக்கு குறைவானர்கள், நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்க கூடிய மருந்துகளை உட்கொள்பவர்கள், தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்த முழுமையான ஆராய்ச்சி மேற்கொள்ளப்படவில்லை. சர்க்கரை, இருதய பாதிப்பு உள்ளிட்ட இணை நோய் உள்ளவர்களும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.வைரஸின் செயல்முறையே அழற்சியை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. அழற்சியை ஏற்படுத்தும்போது, 'அசிடோசிஸ்' என்ற நிலையை ஏற்படுத்தும். இந்த, 'அசிடோஸில்' சர்க்கரை நோயை அதிக்கப்படுத்தும். அதனால், சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட மருந்துகள் உட்கொண்டால் டாக்டரின் பரிந்துரைக்கு பின் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். உட்கொள்ளும் மருந்துக்கான பட்டியலை தடுப்பூசி முகாம்களில் உள்ள டாக்டர்களிடம் காட்டுவது சிறந்தது.
மூன்றாவது அலை வராது என கூற முடியுமா?
அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டால் மட்டுமே பரவலை தடுக்க முடியும். முக்கவசம், சமூக இடைவெளி, தடுப்பூசி ஆகியவற்றை அனைவரும் பின்பற்றினால், மூன்றாவது அலை வருவதை தடுக்க முடியும். தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் விழிப்புடன் இருந்தால் மட்டுமே பரவல் தடுக்கப்படும். நம்மிடம் இருக்கும் ஒரு மிகப்பெரிய ஆயுதம் முகக்கவசம்.
அனைவரும் இணைந்து போராடினால், மே மாதம் முடிந்த பின் பரவல் குறையத் துவங்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இரண்டாவது அலை முற்றிலும் குறையும். அறிகுறி குறைவாக உள்ளவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதை விடுத்து வெளியில் சென்று நோயை பரப்ப வேண்டாம்.
கொரோனா குறித்த விழிப்புணர்வு மற்றும் செய்யக் கூடியது, செய்யக்கூடாதது குறித்த முறையான பயிற்சி டாக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா?
மத்திய அரசு கொரோனா குறித்த வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. நோயாளிகளை எப்படி அணுக வேண்டும். எந்த அறிகுறி இருந்தால் எவ்வாறு செயல்பட வேண்டும் என, தெரிவிக்கப் பட்டு உள்ளது. மருத்துவ கல்வி இயக்குனரகத்தின் மூலம் டாக்டர்களுக்கு தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நோய்கள், நோயாளிகளின் தகவல் பரிமாறப்பட்டு அதன் அடிப்படையில், டாக்டர்களின் சந்தேகங்கள் விளக்கப்படுகின்றன.
அனைத்து டாக்டர்களுக்கும் தேவையான பயிற்சி வழங்கப்படுகிறது. உள்ளூர் அளவில் மட்டுமின்றி, சர்வதேச அளவில் டாக்டர்களுக்கு தேவையான சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்படுகின்றன.
ரெம்டெசிவிர் என்பது என்ன?
அது ஒரு வைரஸ் கிருமியை எதிர்க்கக் கூடிய மருந்து. வேறு பல நோய்களுக்கு இது அதிகளவு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், கொரோனாவை பொறுத்தவரை அதன் செயல்பாடு குறைவே. தீவிரமான கொரோனா பாதிப்பில் உள்ளவருக்கும், நோயாளி மருத்துவமனையில் இருக்கும் காலத்தின் அளவை குறைப்பதற்கு இது பயன்படுகிறது. நோயை விரட்டுவது இல்லை. குறைந்த நோய் தாக்கம் உள்ளவர்களுக்கு இது பயன்படாதது.
அனைவருக்கும் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப் படும் நோயாளிகளுக்கு மட்டுமே இது தேவை.தடுப்பூசி போட்ட பின் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது?தடுப்பூசி போட்ட அன்று ஓய்வு எடுத்துக் கொள்வது அவசியம். அதிக வேலை செய்ய வேண்டாம். கை வலி இருக்கலாம். அதனால் தான், இடது கையில் தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி போட்டதில் இருந்து, ஐந்து நாட்கள் வரை மது அருந்தக்கூடாது, போதை மருந்துகள் உட்கொள்ளக்கூடாது. வலி இருந்தால், 'பாராசிட்டமால்' உட்கொள்ளலாம்.