Sunday, May 16, 2021

ரேஷனில் ரூ.2,000 வாங்க மக்கள் ஆர்வம்

ரேஷனில் ரூ.2,000 வாங்க மக்கள் ஆர்வம்

Updated : மே 15, 2021 20:26 | Added : மே 15, 2021 20:13

சென்னை:ரேஷன் கடைகளில், கொரோனா நிவாரணமாக வழங்கப்பட்ட, 2,000 ரூபாயை, அரிசி கார்டுதாரர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

தமிழகத்தில் தொற்று பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், மக்களின் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டது.இதனால், முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின், 2.07 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, நிவாரணமாக தலா, 4,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டார்.அந்த தொகை, கார்டுதாரர்களுக்கு தலா, 2,000 ரூபாய் என, இரு தவணையாக வழங்கப்பட உள்ளது.

முதல் தவணையாக, 2,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை, 10ம் தேதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு, நேற்று முதல் வழங்கப்பட்டது.நிவாரண தொகை வாங்குவதற்காக, 'டோக்கன்' வழங்கப்பட்ட கார்டுதாரர்கள், காலை, 7:00 மணிக்கே ரேஷன் கடைகள் முன் குவிந்தனர். கூட்டம் சேரக்கூடாது என்பதற்காக, சமூக இடைவெளி விட்டு நிற்கும் வகையில், கடைகளுக்கு முன் வட்டங்கள் வரையப்பட்டிருந்தன.

அதன் மேல் கார்டுதாரர்கள் வரிசையாக நின்றனர்.காலை, 8:00 மணிக்கு கடைகள் திறந்ததும், நிவாரண தொகை வழங்கும் பணி துவங்கியது.விரைந்து வழங்குவதற்காக, கார்டு தாரர்களின் கைரேகை பதிவு முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, ரேஷன் கார்டு அல்லது 'ஆதார்' கார்டை, 'ஸ்கேன்' செய்வது உள்ளிட்ட பழைய முறையை பின்பற்றி, நிவாரண தொகை வழங்கப்பட்டது.

பெரும்பாலான கடைகளில், நான்கு, 500 ரூபாய் நோட்டுகள் வீதம், 2,000 ரூபாய் வழங்கப் பட்டது. சில கடைகளில் மட்டும், 2,000 ரூபாய் ஒரு நோட்டு வழங்கப்பட்டது. சென்னை உட்பட பல மாவட்டங்களில், காலையில் இருந்து வெயில் சுட்டெரித்தது. அதையும் பொருட் படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து, கார்டுதாரர்கள் நிவாரண தொகையை வாங்கி சென்றனர்.இம்மாதம் இறுதி வரை, நிவாரண தொகை வழங்கப்பட உள்ளதால், அதை வாங்க, டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதிக்கு சென்று பெற்றுக்கொள்ளலாம்.

இது குறித்து கார்டுதாரர்கள் கூறுகையில், 'ஊரடங்கால் வேலைக்கு செல்ல முடியாமல், வீடுகளில் முடங்கி உள்ளோம். கையில் பணம் இல்லாத சூழலில், நிவாரண தொகையான, 2,000 ரூபாயை வைத்து, குடும்ப செலவுகளை சமாளிக்க முடியும்' என்றனர்.

எதற்கு இந்த கூட்டம் சேர்ப்பு?

கொரோனாவை அடக்குகிறேன் என, ஒரு பக்கம் முழு ஊரடங்கு அறிவிப்பு; மற்றொரு பக்கம், 'ரேஷன் கடை வழியே 2,000 ரூபாய் கொடுக்கிறோம்; ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் செய்கிறோம்; காலை, 10:00 மணி வரை கடை திறக்கிறோம்' எனச் சொல்லி, கொரோனாவுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு!

இந்த தவறை தான், அ.தி.மு.க., அரசும் செய்தது. அப்போது வாய்க்கு வாய் வசை பாடிய, தி.மு.க., இப்போது ஆட்சிக்கு வந்ததும், அதே தவறை, சற்றும் பிசகாமல் செய்கிறது. 'வாழ்வாதாரம் போகிறது' என கூப்பாடு போடுவோருக்கு ஒரு வேண்டுகோள்... முதலில் நமக்கு உயிர் முக்கியம்; அதை பாதுகாக்காமல், வாழ்வாதாரம் தேடுவது வீண்; புரிந்து கொள்ளுங்கள்!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024