Saturday, May 29, 2021

2ம் தவணை நிவாரண தொகை வீடுகளில் வழங்க வலியுறுத்தல்


2ம் தவணை நிவாரண தொகை வீடுகளில் வழங்க வலியுறுத்தல்

Added : மே 29, 2021 00:15

சென்னை:கொரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணையான 2,000 ரூபாயை, ரேஷன் கடைகளுக்கு பதில் வீடுகளில் வழங்குமாறு, தமிழக அரசுக்கு கார்டுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு நிவாரணமாக 2.09 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா 4,000 ரூபாய் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதில், முதல் தவணையான 2,000 ரூபாய், இம்மாதம் 15ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை 97 சதவீதம் கார்டுதாரர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. முதல்கட்ட நிவாரண தொகை வழங்கும் பணி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டாவது தவணையான 2,000 ரூபாய் வழங்கும் பணி, விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது.கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த, அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அடுத்த மாதம், ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள் அடங்கிய கொரோனா நிவாரண பொருட்கள் தொகுப்பு, மத்திய அரசின் கூடுதல் அரிசி போன்றவை வழங்கப்பட உள்ளன. அதற்கு முன், கொரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணையை, ரேஷன் கடைகளில் வழங்குவதற்கு பதில் வீடுகளில் நேரடியாக வழங்குமாறு, அரசுக்கு கார்டுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஒரு ரேஷன் கடையில், குறைந்தது 800 முதல் 1,000 அரிசி ரேஷன் கார்டுகள் உள்ளன. அந்த கடை ஊழியர், நிவாரண தொகையாக 20 லட்சம் ரூபாயை கையாள வேண்டியுள்ளது. தினமும் 200 கார்டுக்கு கொடுத்தால், 4 லட்சம் ரூபாயை கையாள வேண்டும்.அவ்வளவு பெரிய தொகையை தினமும் எடுத்து சென்றால், தொலைப்பது, திருட்டு போன்றவை நடக்க வாய்ப்புள்ளது.

அரசியல் கட்சியினர், முதலில் தங்களின் பகுதிக்கு வந்து நிவாரணம் வழங்குமாறு ஊழியர்களை கட்டாயப்படுத்துவர்.இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்கவே, வீடுகளுக்கு பதில் ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது. இருப்பினும், இரண்டாவது தவணை நிவாரண தொகையை வீடுகளில் வழங்குமாறு பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வந்தபடி உள்ளன. இதுகுறித்து, அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024