வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கான ஓராண்டு பயிற்சி; ரூ.6 லட்சம் கட்டணம் செலுத்த முடியாமல் மருத்துவ மாணவர்கள் தவிப்பு: அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு பயிற்சி மாற்றப்பட்டதால் சிக்கல்
https://www.hindutamil.in/news/tamilnadu/676527-foreign-medical-students-2.html
வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கான ஓராண்டு பயிற்சி மருத்துவர் பணி அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டதால், ரூ.6 லட்சம் கட்டணம் செலுத்த முடியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்.
ரஷ்யா, பிலிப்பைன்ஸ், சீனா உள்ளிட்ட நாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு இந்தியா வருபவர்கள் இந்திய மருத்துவக் கவுன்சில் நடத்தும் எஃப்எம்ஜிஇ (FMGE) என்ற தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். பின்னர், அங்கீகரிக்கப்பட்ட அரசுஅல்லது தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக ஓராண்டு பணியாற்ற வேண்டும்.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட விகிதத்தில்தான் வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கு ஓராண்டு பயிற்சிமருத்துவராக பணியாற்ற வாய்ப்புவழங்கப்படுகிறது. நடப்பாண்டில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்புஅதிகமாக இருப்பதால் வழக்கத்தைவிட கூடுதலானவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
80 பேருக்கு அனுமதி
அதன்படி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை (டிஎம்எஸ்) மூலம் காஞ்சிபுரம், கடலூர், ஈரோடு ஆகிய மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் ஓராண்டு பயிற்சி மருத்துவராக பணியாற்ற 80 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
தற்போது அந்த உத்தரவை ரத்து செய்து 80 பேரும் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் (டிஎம்இ) கீழ் செயல்படும் சென்னை மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தடையில்லாச் சான்றை பெற்று சமர்ப்பிக்கவேண்டும் என கடந்த 25-ம் தேதிஅரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஓராண்டு பயிற்சி மருத்துவராக பணியாற்ற மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் ரூ.2 முதல் 3 லட்சம் வரையும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.6 லட்சத்துக்கு அதிகமாகவும் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. அதனால், பெரும்பாலானோர்மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் பணியாற்ற விண்ணப்பிக்கின்றனர். தற்போது மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டிருந்த 80 பேர், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதால் ரூ.6 லட்சம் பணம் கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.
வரும் ஜூன் 1-ம் தேதிக்குள் பயிற்சியில் சேருகிறீர்களா, இல்லையா என்பதை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தெரிவிக்க வேண்டும். அப்படி பயிற்சியில் சேர விருப்பமில்லை என்றால், அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் பணத்துக்கு என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.
இதுதொடர்பாக வெளிநாடுகளில் மருத்துவம் படித்து பயிற்சி மருத்துவராக பணியாற்ற காத்திருப்பவர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று அதிகமாக இருப்பதால், இந்த ஆண்டு வழக்கத்தைவிட கூடுதலானவர்களுக்கு ஓராண்டு பயிற்சி மருத்துவராக பணியாற்றி வாய்ப்பு வழங்கிய தமிழக அரசுக்குநன்றி. 80 பேருக்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்த காஞ்சிபுரம், கடலூர், ஈரோடு ஆகிய மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு மாற்றினால், இந்த பெருந்தொற்று காலத்தில் திடீரென்று ரூ.6 லட்சம் பணத்துக்கு எங்கே செல்ல முடியும்?
சென்னையில் உள்ள 4 அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டும் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டிருப்பதால், வெளியூரைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.6 லட்சம் கட்டணத்துடன் தங்குமிடம், உணவுக்கு கூடுதலாக ரூ.2 லட்சம் வரை செலவாகும்.அதனால், 80 பேருக்கும் மாவட்டதலைமை மருத்துவமனைகளில் பணியாற்ற அனுமதி வழங்க வேண்டும். இல்லையென்றால், மாவட்ட தலைமை மருத்துவமனைகளின் கட்டணத்திலேயே மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணி செய்ய அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.
கல்வியாளர்களிடம் கேட்டபோது, “தமிழகத்தில் வெளிநாடுகளில் மருத்துவம் படித்த 1,000-க்கும் மேற்பட்டோர் ஓராண்டு பயிற்சிக்காக காத்திருக்கின்றனர். அவர்கள் இந்த பயிற்சியை முடித்தால் தான் மருத்துவராக பணியாற்ற முடியும். பெருந்தொற்று காலத்தில் மருத்துவர்களின் தேவைஅதிகமாக இருப்பதால், அவர்கள்அனைவரையும் கரோனா சிகிச்சைக்கு தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு பயிற்சிக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்” என்றனர்.
No comments:
Post a Comment