கரோனா பணியில் உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் ஊக்கத்தொகை: டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்
incentives-for-all-physicians-involved-in-corona-work-doctors-association-insistence
கரோனா வார்டு உள்ளே மூன்று மாதங்கள் வேலை பார்த்தவர்களுக்கு மட்டும்தான் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இது அதிர்ச்சி அளிக்கும் செயல், சரியல்ல. கரோனா வார்டுக்கு வெளியே பணியாற்றியவர்களுக்கும் வழங்க வேண்டும் என சமூக சமத்துத்திற்கான டாக்டர்கள் சங்கம் அரசிடம் வேண்டுகோள் வைத்துள்ளது.
இதுகுறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் இன்று விடுத்துள்ள அறிக்கை:
* கரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு, பயிற்சி மருத்துவர்களுக்கு, பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு, செவிலியர்களுக்கு மற்றும் இதர ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் அறிவித்ததை மனமார உடனடியாக வரவேற்றோம்.
* கடந்த அதிமுக ஆட்சியில் செய்யாததை , தமிழக முதல்வர் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டதால் மிகவும் மகிழ்ந்தோம்.
* ஆனால், தற்பொழுது கரோனா பணியில் ஈடுபட்டுவரும் அனைவருக்கும் அதாவது அனைத்து மருத்துவப் பணியாளர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. மாறாக, தொடர்ச்சியாக கரோனா வார்டு உள்ளே மூன்று மாதங்கள் வேலை பார்த்தவர்களுக்கு மட்டும்தான் இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இது சரியல்ல. மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
* மருத்துவமனை உள்ளேயும், வெளியேயும் பல்வேறு துறைகளில் பணியாற்றிய மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவப் பணியாளர்களும் கூட கரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். சிலர் இறந்திருக்கிறார்கள்.
* கரோனா வார்டுக்கு வெளியே பணியாற்றுபவர்களுக்கு, உள்ளே பணியாற்றுபவர்களை விட கரோனா தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில், வெளியே பணியாற்றுபவர்களுக்கு பாதுகாப்புக் கவசம் போன்றவை வழங்கப்படுவதில்லை. எனவே, அவர்கள் அதிகம் தொற்றுக்கு உள்ளாகிறார்கள். அவர்களும் கடுமையாக உழைக்கிறார்கள்.
* மருத்துவ சேவை என்பது ஒரு மிகப்பெரிய கூட்டு நடவடிக்கை. கூட்டுச் செயல்பாடு. கரோனா வார்டுக்கு உள்ளே பணியாற்றுபவர்கள், வெளியே பணியாற்றுபவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் பணியாற்ற முடியாது.
மருத்துவமனையில் பணியாற்றும் லிஃப்ட் மேன், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், ஸ்ட்ரெட்ச்சர், வீல்சேர் தள்ளுபவர்கள், தூய்மைப் பணியாளர்கள் உட்பட அனைவரும் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். அவர்களும் உயிரைத் துச்சமென நினைத்துதான் பணிபுரிந்து வருகின்றனர்.
அவ்வாறு இருக்கும்பொழுது, கரோனா வார்டு உள்ளே பணியாற்றியவர்களுக்கு மட்டும்தான் ஊக்கத்தொகை என்பது பலத்த ஏமாற்றத்தை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மத்தியில் உருவாக்கியிருக்கிறது. அரசு நம்மை ஏமாற்றிவிட்டதோ என்ற உணர்வு அவர்களிடம் மேலோங்கியுள்ளது.
* மேலும் தொடர்ந்து கரோனா வார்டில் பணியாற்றியவர்களுக்கு மட்டுமே ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் சரியல்ல.
* பொதுவாகத் தொடர்ந்து சில மாதங்கள் கரோனா வார்டில் ஒருவரைப் பணியாற்ற வைத்தால் அவருக்குத் தொற்றும், மனச் சோர்வும் ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம். எனவே, பெரும்பாலான மருத்துவப் பணியாளர்களுக்கு கரோனா வார்டு பணி, பிறகு கரோனா அல்லாத வார்டு பணி என மாற்றி மாற்றித்தான் பணி நிர்வாகத்தால் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையிலேயே அனைத்துவிதமான மருத்துவ சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
* தொடர்ந்து கரோனா வார்டில் பணியாற்றுபவர்களுக்கே ஊக்கத்தொகை என்ற அறிவிப்பால் கரோனா வார்டில் பணியாற்றும் பெரும்பாலானோர் ஊக்கத்தொகை கிடைக்கும் வாய்ப்பை இழந்துள்ளனர்.
* எனவே, இப்பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு அனைவருக்கும் ஊக்கத்தொகை கிடைத்திட உத்தரவிட வேண்டும் எனத் தமிழக முதல்வரை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.
* மதுரை அருகே அமைய உள்ள, எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவில் தொடங்கி, முடித்திட வேண்டும் எனத் தமிழக முதல்வர், பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளதை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வரவேற்கிறது”.
இவ்வாறு டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.