மாலை 5:00 மணி வரை ரேஷன் கடைகள் உண்டு
Added : ஜூன் 08, 2021 00:31
சென்னை : சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் கடைகள், இன்று முதல் மாலை 5:00 மணி வரை செயல்படும்.
தமிழக ரேஷன் கடைகளில், கார்டுதாரர்களுக்கு இலவசமாகவும், மானிய விலையிலும் அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. அவை, காலை முதல் மாலை வரை செயல்பட்டன.கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலையை தடுக்க, மே 10ம் தேதி முதல், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், அன்று முதல் ரேஷன் கடை வேலை நேரம் காலை 8:00 முதல் மதியம் 12:00 மணி வரை எனக் குறைக்கப்பட்டது. முழு ஊரடங்கு வரும் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், நேற்று முதல் சில தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன.
இதையடுத்து இன்று முதல், சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும், காலை 9:00 முதல் பகல் 12:30 மணி வரையும்; பிற்பகல் 2:00 முதல் மாலை 5:00 மணி வரையிலும் ரேஷன் கடைகள் செயல்படும். இந்த வேலை நேரம், மறு உத்தரவு வரை நடைமுறையில் இருக்கும். நிவாரண நிதி இரண்டாம் தவணை, 2,000 ரூபாய் மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பினை வரும், 15ம் தேதி முதல் கார்டுதாரர்கள் பெற்று செல்ல ஏதுவாக, 'டோக்கன்'கள் வினியோகத்தை, 11ம் தேதி முதல், 14ம் தேதி முடிய, கடை ஊழியர்கள், பிற்பகல் நேரங்களில் வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டும்.
வரும், 11ம் தேதி முதல், 14ம் தேதி முடிய, முற்பகல் நேரத்தில், ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வழக்கம் போல் கார்டுதாரர்களுக்கு வினியோகிக்க வேண்டும் என உணவுத்துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment