Saturday, June 26, 2021

சென்னை: தமிழகத்தில், பல்வேறு தளர்வுகளுடன், ஜூலை, 5 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, முதல்வர் ஸ்டாலின், நேற்று வெளியிட்டார்.


தாராள தளர்வுகளுடன் ஜூலை 5 வரை ஊரடங்கு நீட்டிப்பு

Updated : ஜூன் 26, 2021 00:29 | Added : ஜூன் 25, 2021 23:49 |

சென்னை: தமிழகத்தில், பல்வேறு தளர்வுகளுடன், ஜூலை, 5 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, முதல்வர் ஸ்டாலின், நேற்று வெளியிட்டார்.

முதல் பிரிவில் எதற்கெல்லாம் அனுமதி?

நோய் பரவல் அதிகம் உள்ள முதல் பிரிவில், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை என, 11 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த மாவட்டங்களில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள கடைகளுடன், மேலும் அனுமதி தரப்பட்டுள்ள கடைகள்:

* மின் பொருட்கள், ஹார்டுவேர், கல்வி புத்தகங்கள், எழுதுபொருட்கள், காலணிகள், பாத்திரம், பேன்சி, அழகு சாதனப் பொருட்கள், போட்டோ, வீடியோ, சலவை, தையல், அச்சகங்கள், ஜெராக்ஸ் கடைகள்

* மிக்சி, கிரைண்டர், 'டிவி' போன்ற வீட்டு உபயோக மின்பொருட்கள் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள்

* வாகன விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் மையங்கள்; வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடைகள்; மொபைல் மற்றும் அதை சார்ந்த பொருட்கள் விற்பனை
* கணினி மென்பொருட்கள், வன்பொருட்கள், உதிரிபாகங்கள் விற்பனை. கட்டுமான பொருட்கள் விற்பனை கடைகள்

* சாலையோர ஓட்டல்கள், டீக்கடைகளில் காலை, 6:00 மணி முதல், இரவு, 7:00 மணி வரை, 'பார்சல்' சேவை

* அரசின் அனைத்து அத்தியாவசிய துறைகள், சார் பதிவாளர் அலுவலகங்கள், 100 சதவீதம், மற்ற அலுவலகங்கள், 50 சதவீதப் பணியாளர்களுடன் செயல்படும். தனியார் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள், 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்

* வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்

* தகவல் தொழில்நுட்பம் நிறுவனங்கள், 20 சதவீத பணியாளர்களுடன், வீட்டுவசதி நிறுவனம், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்கள், கட்டுமான் பணிகள் நிறுவனங்கள், 33 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்

* அனைத்து வகையான கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படும்

சலுான் திறப்பு

அழகு நிலையங்கள், சலுான்கள், 'ஏசி' வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில், 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டும் அனுமதித்து, காலை, 6:00 முதல், இரவு, 7:00 வரை செயல்படலாம்

* காலை, 6:00 முதல், இரவு, 9:00 வரை, விளையாட்டு பயிற்சி குழுமங்கள் இயங்கவும், பார்வையாளர்கள் இல்லாமல், திறந்தவெளியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்படும்

* பள்ளி, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள் மற்றும் பயிற்சி நிலையங்களில், மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகள் அனுமதிக்கப்படும்

* அரசு பூங்காக்கள், விளையாட்டு திடல்கள், காலை, 6:00 முதல் 9:00 மணி வரை, நடைப்பயிற்சிக்காக மட்டும் திறக்கப்படும்

* இனிப்பு மற்றும் காரவகை விற்பனை கடைகளில், காலை, 6:00 முதல் இரவு, 9:00 வரை, பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்

* இ - சேவை மையங்கள் வழக்கம் போல இயங்கும்

* மின் வணிகம் வழியே, உணவு வினியோகம் செய்யும் நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில், பார்சல் சேவை மட்டும், காலை, 6:00 முதல் இரவு, 9:00 வரை அனுமதிக்கப்படும்

* இதர மின் வணிக சேவை நிறுவனங்கள், காலை, 6:00 முதல், இரவு, 9:00 மணி வரை இயங்கலாம்

* திரைப்பட தயாரிப்புக்கு பின்னர் உள்ள பணிகள் அனுமதிக்கப்படும்
* திறந்தவெளி படப்படிப்புகளில், 100 பேர், கொரோனா பரிசோதனை செய்த பின் பங்கேற்கலாம்

* திரையரங்குகளில் தாசில்தார் அனுமதி பெற்று, வாரத்தில் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

இரண்டாவது பிரிவில் என்னென்ன அனுமதி?

இரண்டாவது பிரிவில், அரியலுார், கடலுார், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலுார், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்துார், திருவண்ணாமலை, துாத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலுார், விருதுநகர் என, 23 மாவட்டங்கள் உள்ளன.

இவற்றில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட கடைகள், இரவு, 7:00 வரை செயல்படலாம். புதிதாக அனுமதிக்கப்படும் கடைகள்:

* பாத்திர கடைகள், பேன்சி, அழகு சாதனைப் பொருட்கள், போட்டோ, வீடியோ, சலவை, தையல், அச்சகங்கள், ஜெராக்ஸ் கடைகள். மொபைல் மற்றும் அதை சார்ந்த பொருட்கள் விற்பனை; கணினி வன்பொருட்கள், மென்பொருட்கள், உதிரிபாகங்கள் விற்பனை கடைகள்

* சாலையோர உவணகங்களில் பார்சல் சேவை அனுமதி

* அனைத்து தனியார் நிறுவனங்கள், 50 சதவீதப் பணியாளர்களுடன் செயல்படலாம். கட்டுமான நிறுவன அலுவலகங்கள், 50 சதவீதப் பணியாளர்களுடன் செயல்படலாம்

* மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையில், பஸ் போக்குவரத்து, 'ஏசி' வசதி இல்லாமல், 50 சதவீத இருக்கைகளில் மட்டும் அனுமதிக்கப்படும்




தளர்வுகள் தாராளம்!



மூன்றாம் பிரிவில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நான்கு மாவட்டங்களிலும், அனைத்து தனியார் நிறுவனங்கள், 100 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்
* அனைத்து துணிக்கடைகள், நகை கடைகள், வணிக வளாகங்கள், 'ஏசி' வசதி இல்லாமல், 50 சதவீத வாடிக்கையாளர்களுடன், காலை, 9:00 முதல் இரவு, 7:00 வரை செயல்படலாம்.

* வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் மற்றும் விளையாட்டு கூடங்களுக்கு அனுமதி இல்லை. இங்குள்ள உணவகங்களில், பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்

கோவில்கள் திறப்பு


* அனைத்து மத வழிபாட்டு தலங்களும், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்க அனுமதிக்கப்படும். திருவிழாக்கள் மற்றும் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி இல்லை

* காலை, 6:00 முதல் இரவு, 9:00 வரை, விளையாட்டு பயிற்சி குழுமங்கள் இயங்கவும், பார்வையாளர்கள் இல்லாமல், திறந்தவெளி விளையாட்டு போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்படும்

கூடுதல் அனுமதி!


பிரிவு இரண்டு மற்றும் மூன்றில் உள்ள மாவட்டங்களில், தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள், அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில், வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள், 'இ - பதிவு' இல்லாமல் செயல்பட அனுமதிக்கப்படும்

* மின் பணியாளர், தச்சர் போன்ற சுய தொழில் செய்வோர், காலை, 6:00 முதல் இரவு, 7:00 வரை, 'இ - பதிவு' இல்லாமல், வீடுகளுக்கு சென்று சேவை செய்யலாம்

* அனைத்து அரசு அலுவலகங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், 100 சதவீதப் பணியாளர்களுடன் செயல்படும்.

* தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வீட்டுவசதி நிறுவனம், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், 50 சதவீதப் பணியாளர்களுடன் செயல்படலாம்.

* உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள், 'ஏசி' வசதி இல்லாமல், 50 சதவீதப் பணியாளர்களுடன் செயல்படலாம்

* அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ் வைப்பகங்கள், காலை, 10:00 முதல், மாலை, 5:00 வரை செயல்படலாம்.


'பீச் வாக்கிங்'

* அனைத்து கடற்கரைகளிலும், காலை, 5:00 முதல், காலை, 9:00 மணி வரை, நடைப்பயிற்சி அனுமதிக்கப்படும்

* தீப்பெட்டி தொழிற்சாலைகள், 100 சதவீதப் பணியாளர்களுடன் செயல்படலாம்.

திருமணங்களுக்கான பயண அனுமதி உண்டு

* பிரிவு இரண்டு மற்றும் மூன்றில் உள்ள மாவட்டங்களுக்கு இடையே, திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு, 'இ - பதிவு' இல்லாமல் பயணிக்கலாம்

* பிரிவு ஒன்றில் உள்ள மாவட்டங்களுக்கு இடையே; மற்ற பிரிவு மாவட்டங்களில் இருந்து, பிரிவு ஒன்றில் உள்ள மாவட்டங்களுக்கு, திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு, 'இ - பாஸ்' அவசியம்
இதற்கான, 'இ-பாஸ்', திருமணம் நடக்க உள்ள மாவட்டத்தின் கலெக்டரிடம் இருந்து, eregister.tnega.org என்ற இணையதளம் வழியே, மணமகன் அல்லது மணமகள் பெற்றோர் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

முதல் பிரிவில் உள்ள மாவட்டங்களில் இருந்து, மற்ற பிரிவுகளில் உள்ள மாவட்டங்களுக்கு, திருமணத்திற்காக பயணிக்க, 'இ - பாஸ்' பெற வேண்டும்

* திருமண நிகழ்வுகளில், 50 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர்

* நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு, அவசர காரணங்களுக்காக பயணிக்க, தொடர்புடைய மாவட்ட கலெக்டர்களிடம் இருந்து, 'இ - பாஸ்' பெற்று பயணிக்கலாம்இவ்வாறு, முதல்வர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024