பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு: பெற்றோர் குழப்பம்
Updated : ஜூன் 28, 2021 06:44 | Added : ஜூன் 28, 2021 06:41
பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க, தமிழக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள், பல பெற்றோர்களை குழப்பியுள்ளதோடு, சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
பிளஸ் 2 மதிப்பெண்ணை கணிப்பதில், 30: 20: 50 என்ற விகிதம் பின்பற்றப்பட உள்ளது. பிளஸ் 2 வகுப்புக்கு 30, பிளஸ் 1 வகுப்புக்கு 20, பத்தாம் வகுப்புக்கு 50 சதவீதம் முக்கியத்துவம் வழங்கப்படும். இதில், கூடுதல் முக்கியத்துவம், பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணுக்கே. அந்தவகுப்பு வரை, மாணவர்கள் கல்வியிலும் எதிர்காலத்திலும் போதிய ஆர்வம் காட்டாமல் இருப்பர். அதனால், பிளஸ் 2 மதிப்பெண்ணை முடிவு செய்வதில், பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணுக்கு 50 சதவீத முக்கியத்துவம் கொடுப்பது எப்படி நியாயம்?
பத்தாம் வகுப்பில், அதிக மதிப்பெண் பெற்ற, மூன்று பாடங்களின் சராசரியில் 50 சதவீதத்தை கணக்கில் எடுக்க சொல்கிறது அரசின் அறிவிப்பு. இதற்கு மாறாக, மொழிப் பாடங்களை தவிர்த்து, அறிவியல், கணிதம், சமூக அறிவியல் பாடங்களில் பெற்ற மதிப்பெண்களின் சராசரியில் 50 சதவீதத்தை எடுக்கலாம். அதன் வாயிலாக, மாணவர்களுடைய உண்மையான தகுதியை ஓரளவு வகைப்படுத்தி இருக்க முடியும்.தமிழகத்தில் ௧௦ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படித்து விட்டு, பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பதற்கு, தமிழக பாடத்திட்டத்துக்கு மாறும் மாணவர்களும் உண்டு.
சி.பி.எஸ்.இ.,யில், அதிக மதிப்பெண் பெற முடியாது. அதனால் 50 சதவீத சராசரி மதிப்பெண் கணக்கீட்டில், சி.பி.எஸ்.சி., மாணவர்கள் பின்தங்கி விட வாய்ப்புண்டு.பிளஸ் 2வில் மாணவர்களுடைய அறிவுத் திறன் நன்கு வளர்ந்திருக்கும். ஆர்வமும், ஈடுபாடும் பெருகியிருக்கும். எதிர்கால கனவுகள் அரும்பத் துவங்கியிருக்கும். அப்போது, அவர்கள் வாங்கும் மதிப்பெண்களும் முற்றிலும் வேறு மாதிரி இருக்கும்.இதைப் பார்க்கும் போது, பிளஸ் 2 மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றே, பல கல்வியாளர்கள் கருதுகின்றனர். பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு என்ற வரிசையில், மதிப்பெண்ணுக்கான முக்கியத்துவம் அமைந்திருக்கலாம்.
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மதிப்பெண் மதிப்பீட்டில், 40:30:30 என்ற முறை பின்பற்றப்படுகிறது. பிளஸ் 2 தேர்வுகளில், 40 சதவீதம், பிளஸ் 1ல் இருந்து 30 சதவீதம், பத்தாம் வகுப்பில் இருந்து 30 சதவீத மதிப்பெண்கள் எடுத்துக் கொள்ளப்படும்.தமிழக அரசு பள்ளிகளிலேயே படித்து, ஒவ்வொரு வகுப்பிலும் தொடர்ந்து எல்லா பாடங்களிலும் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு மட்டுமே, அரசு அறிவித்துள்ள மதிப்பெண் முறை சாதகம்.பிளஸ் 1, பிளஸ் 2வில் முட்டி மோதி கூடுதல் மதிப்பெண் பெற்று, முந்தி விடலாம் என்று நினைப்பவர்களுக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது என்ற, வருத்தமும் பெற்றோரிடம் இருக்கிறது.
என் மகள் சராசரி மாணவி தான். ௧௦ம் வகுப்பில் 500க்கு 370 வாங்கினாள். பிளஸ் 1ல் 700க்கு 360 வாங்கினாள். இந்த புதிய சிஸ்டத்துல என் மகளுக்கு, 375 அல்லது 380 மார்க் வரும். நேரடி தேர்வு எழுதியிருந்தா 400 மார்க்குக்கு மேல வந்திருக்கும். இன்னும் நல்லா படிக்கற மாணவர்களுக்கு, இன்னும் நிறைய மார்க் வரும்ங்கறது உண்மை தான்.
ராமு, கள்ளக்குறிச்சி,
பெற்றோர்.எப்படி மார்க் போட போறாங்க என்பதே புரியல. 'பேஸ்புக்'குல விதவிதமாக கணக்குபோட்டு காண்பிக்கிறாங்க. பள்ளி கல்வித்துறை என்ன செய்யப் போகுதோ? இது, சரியா படிக்காத பசங்களுக்கு ஓகே. என் மகன்கிட்ட நல்லா படின்னு சொன்னேன். தேர்வு வெச்சிருந்தா, நல்லா மார்க் வாங்கியிருப்பான். இப்போ கடவுள் விட்ட வழி.
வெங்கடேஷ், திருவல்லிக்கேணி, பெற்றோர்.
- நமது நிருபர் -
No comments:
Post a Comment