மதுரை 'எய்ம்ஸ்' அருகே ரயில்வே ஸ்டேஷன்
Added : ஜூன் 25, 2021 02:06
மதுரை:மதுரை தோப்பூரில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமையும் இடம் அருகே திருப்பரங்குன்றத்தில் இருந்து, 4.5 கி.மீ., துாரத்தில் ரயில்வே ஸ்டேஷன் அமைப்பது குறித்து, தெற்கு ரயில்வே பரிசீலித்து வருகிறது.
தென்மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைக்க, 2019 ஜன., 27ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 224 ஏக்கரில் 750 படுக்கைகளுடன் உள் நோயாளிகள், வெளிநோயாளிகள் பிரிவு, 100 எம்.பி.பி.எஸ்., மற்றும் 60 செவிலியர் இடங்களுடன், மருத்துவக் கல்லுாரியுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை இங்கு அமையவுள்ளது.
திருச்சி முதல் கன்னியாகுமரி வரையிலான மத்திய மற்றும் தென் மாவட்டத்தினர் இங்கு சிகிச்சை பெறலாம். செங்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, திருச்சி, ராமேஸ்வரம், கோவை உள்ளிட்ட ரயில் வழித்தடங்களில், பயணியர் சிகிச்சை பெற வரலாம்.
எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, எய்ம்ஸ் மருத்துவமனை அருகே ரயில்வே ஸ்டேஷன் அமைப்பது அவசியமாகிறது. கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ., பிரின்ஸ், இது குறித்து தெற்கு ரயில்வேக்கு கடிதம் அனுப்பிஇருந்தார்.
இதற்கு பதிலளித்து, தெற்கு ரயில்வே போக்குவரத்து பிரிவு மூத்த மேலாளர் பரத்குமார் அனுப்பிய கடிதம்:எய்ம்ஸ் அருகே ரயில்வே ஸ்டேஷன் அமைக்கும் கோரிக்கை பரிசீலிக்கப் படுகிறது. திருமங்கலம், திருப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு மத்தியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது.
திருப்பரங்குன்றத்தில் இருந்து எய்ம்ஸ் அமையுமிடம் 4.5 கி.மீ., துாரத்தில் உள்ளது. தற்போது கூடுதல் கிராசிங் ஸ்டேஷன் வழங்க தேவையில்லை. இருப்பினும் ரயில்கள் நிறுத்தத்திற்கான முன்மொழிவு, தேவைகளின் அடிப்படையில் பரிசீலிக்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment