Tuesday, June 8, 2021

கிறுக்குத்தனமாக பதில் அளிப்பேன்! வெறுப்பேற்றிய வேளாண் அமைச்சர்


கிறுக்குத்தனமாக பதில் அளிப்பேன்! வெறுப்பேற்றிய வேளாண் அமைச்சர்

Added : ஜூன் 08, 2021 01:31

தஞ்சாவூர் : ''கிறுக்குத்தனமாக கேள்வி கேட்டால், கிறுக்குத்தனமாகத் தான் பதில் அளிப்பேன்,'' என, வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.

அமைச்சரின் பேச்சுக்கு விவசாய சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறுவை சாகுபடி தொடர்பாக, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட வேளாண் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம், தஞ்சையில் நேற்று நடந்தது. இதில், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.கூட்டத்துக்கு பின், அமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள், 'நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், மூட்டைக்கு, 40 ரூபாய் விவசாயிகளிடம் பிடித்தம் செய்யப்படுகிறதே' என கேள்வி எழுப்பினர்.

உடனே அமைச்சர், ''இப்படி கிறுக்குத்தனமாக கேள்வி கேட்டால், கிறுக்குத்தனமாகத் தான் நானும் பதில் அளிப்பேன்,'' என்றார். கேள்விக்கு உரிய பதில் அளிக்காமல், பத்திரிகையாளர் களை அவமதிக்கும் வகையில், அமைச்சர் பேசியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சரின் பொறுப்பற்ற பதிலுக்கு, விவசாய சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலர் சுந்தர விமல்நாதன் கூறியதாவது: விவசாயிகளின் வேதனைகளை வெளிப்படுத்தும் விதமாக, நிருபர்கள் கேள்வி கேட்கின்றனர்.

அதற்குப் பொறுப்பாக பதில் அளிக்க வேண்டிய அமைச்சர், பொறுப்பற்ற முறையில் பேசிஉள்ளார்.இதுபோன்று, அமைச்சர் பொது இடத்தில் பதில் அளிக்கும் பட்சத்தில், ஆட்சி மாறியும், காட்சி மாறவில்லை என்பது போலத் தான் உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. விவசாய துறைக்கு இவர் பொருத்தமானவரா என்பதை முதல்வர் தான் முடிவு செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.அதிகாரிகள் குழு பயணம்தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், குறுவை பருவம் துவங்கியுள்ளது. இப்பருவத்தில், 3.50 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய, வேளாண் துறை இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதுவரை, 1 லட்சம் ஏக்கரில் மட்டுமே சாகுபடி பணிகள் துவங்கியுள்ளன.

மேட்டூர் அணையில் இருந்து, ஜூன், 12ல் தண்ணீர் திறக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.காவிரி நீர், கடைமடைக்கு சென்று சேர்வதற்காக மேற்கொள்ளப்பட்ட கால்வாய்கள், வாய்க்கால்கள் துார்வாரும் பணிகள், 67 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகின்றன. சாகுபடி பணிகள் குறித்து ஆய்வு செய்ய, வேளாண் துறையினருக்கு, தலைமை செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து, வேளாண்துறை செயலர் சமயமூர்த்தி, இயக்குனர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர், டெல்டா மாவட்டங்களுக்கு சென்றுள்ளனர்.மாவட்ட வேளாண் அதிகாரிகளுடன் சாகுபடி நிலவரம், விதை நெல், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் கையிருப்பு குறித்து ஆய்வு செய்கின்றனர். சாகுபடியில் ஆர்வமில்லாத விவசாயிகளை ஊக்கப்படுத்தவும், தேவையான உதவிகளை வழங்கவும் அறிவுறுத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024