Thursday, June 7, 2018


தற்கொலை தவிர்ப்போம்!


By இராம. பரணீதரன் | Published on : 07th June 2018 01:34 AM |

மனித உயிரின் மதிப்பு தெரியாத ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். அண்மையில் நடைபெற்ற நீட்' தேர்வில் தோல்வியடைந்ததால் விழுப்புரம் மாவட்டம் பெரவளூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் உயிரிழந்த தகவல் நம் அனைவரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதே காரணத்திற்காக கடந்த ஆண்டு அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு தமிழகத்தையே உலுக்கியது. இதனை நீட் அரசியல்' என்ற அரசியல் பார்வை கடந்து, நாம் நம் மாணவச் சமுதாயத்தை எந்தளவுக்கு ஆக்கபூர்வமான பாதையில் இருந்து மாற்றி, அழிவை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கிறோம் என பார்க்க வேண்டும்.

ஒவ்வொரு முறை பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின்பும், தேர்வில் தோல்வி, மாணவர் தற்கொலை' போன்ற செய்திகளைப் படிக்கும்போது எல்லாம் நம் இதயம் வலிக்கிறது. வாழ வேண்டிய மொட்டுகள் சிறு தோல்விக்காக மனமுடைந்து கருகி விட்டனவே என்று எண்ணத் தோன்றுகிறது.

நம் கல்வி முறையின் மீதுதான் குறை கூறவேண்டியுள்ளது. மாணவர்களுக்கு என்ன மாதிரியான கல்வி முறையை நாம் வழங்குகிறோம்? தோல்வியை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தை வழங்காத, தோல்வியை ஏற்று வெற்றிக்கு போராடும் தன்னம்பிக்கையை அளிக்காத இந்தக் கல்வியினால் என்ன பயன்?

மருத்துவராகி சமூகத்திற்கு சேவை செய்வதே என் லட்சியம்' எனக் கூறி, லட்சியம் ஈடேறாத காரணத்தால் தன் உயிரை மாய்த்துக்கொள்ளத் துணியும் மாணவ மணிகளே! சிறிது சிந்தியுங்கள்...சேவைதான் உங்களின் நோக்கமெனில் அதற்கு மருத்துவம் ஒன்றுதான் வழியென யார் கூறியது? மருத்துவர் ஆக இயலவில்லையெனில் துணை மருத்துவப் படிப்பு பயிலுங்கள். செவிலியர் ஆகலாம், மருந்தாளுநர் ஆகலாம், மருத்துவத் துறையில் ஆய்வக உதவியாளர், அறுவைச் சிகிச்சை உதவியாளர் என நீங்கள் மருத்துவத் துறையிலேயே சேவை செய்ய படிப்புகள் ஏராளம் உள்ளன.
இவை தவிர, ஒரு மனிதனுக்கான அடிப்படை உரிமையை போராடி பெற்றுத் தந்து, அவனை தன்மானத்துடனும், சுய மரியாதையுடனும் வாழச் செய்யும் வழக்குரைஞர் பணியும் சிறந்த சேவையே. இரவு, பகல், வெயில், மழை பாராது ஓய்வின்றி உழைத்து மக்களைக் காக்கும் காவல் துறை பணியும் சேவையே. சில நொடி கூட கவனம் சிதறாமல் தன்னை நம்பி பேருந்தில் பயணம் செய்யும் ஏராளமான பயணிகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பத்திரமாக கொண்டு சேர்க்கும் ஓட்டுநர் பணியும் சேவையே. இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து மின் விநியோகம் துண்டிக்கப்படும் நள்ளிரவு வேளையில் சென்று மின் விநியோகத்தைச் சீரமைக்கும் மின் ஊழியர்களின் பணிகளும் சேவையே. தன்னுயிரை துச்சமென மதித்து, பிற உயிர்களைக் காக்கும் தீயணைப்பு துறை, ராணுவப் பணி போன்றவையும் சேவையே. அவசர வேலையாக குடும்பத்துடன் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது, அது நடுக்காட்டில் பழுதாகி நின்றுவிட்டால், ஓடிவந்து பழுது நீக்கிச் செல்லும் மெக்கானிக்கின் பணிகூட சேவைதான்.

இப்படி அனைத்துப் பணிகளுமே ஏதோ ஒரு வகையில் சமுதாயத்துக்கு சேவையளிக்கும் பணியாகத்தான் இருக்கின்றன. எனவே நாம் நம் லட்சிய பணியை அடைய முடியாவிட்டாலும், கிடைத்த பணியை முழு மனதோடு மேற்கொண்டு, அதன் மூலம் மக்களுக்கு சேவையாற்றலாம்.
லட்சியத்தை அடைய முடியவில்லை என்பதற்காக உயிரை மாய்த்துக் கொள்வது கோழைத்தனம். ஒவ்வொரு உயிரும் ஓர் உன்னத நோக்கத்துக்காகத்தான் படைக்கப்பட்டுள்ளது. அதனை அறியாமல் நம் உயிரை நாமே மாய்த்துக் கொள்வது மிகவும் தவறானது.
ஒரு கதவு மூடினால் மற்றொரு கதவு திறக்கப்படும் என்று கூறுவார்கள். நாம் இன்று இழந்த ஒரு வாய்ப்புக்கு பதிலாக, நாளை நமக்கு எதிர்காலத்தில் மற்றொரு மிகப்பெரிய வாய்ப்பு காத்திருக்கும். அந்த வாய்ப்புக்காக நாம் காத்திருக்கவேண்டுமே தவிர அவசரப்பட்டு, தற்கொலை போன்ற கோழைத்தனமான முடிவை எடுத்துவிடக் கூடாது.

விமானியாக வேண்டும் என்று விரும்பிய ஒரு இளைஞனின் லட்சியம் தோற்றதால்தான் விஞ்ஞானியாகி, நாட்டின் உயரிய பொறுப்பாகிய குடியரசுத் தலைவராகவும் பதவி வகித்து, இன்றைய இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். அன்று அவர் தனது லட்சியத்தில் வென்றிருந்தால், விமானியாகி லட்சக்கணக்கான மக்களில் ஒருவராக வாழ்ந்து மறைந்திருப்பார். ஆனால் லட்சியத்தில் தோற்றாலும் மனம் தளராமல் உழைத்ததால்தான், மறைந்து விட்டாலும் இன்றும் இளைஞர்களின் லட்சிய நாயகனாக இருந்து வருகிறார்.
நாட்டை ஆண்டவர்கள், விஞ்ஞானி ஆனவர்கள், சினிமா, விளையாட்டுத் துறையில் நட்சத்திரமாக ஜொலிப்பவர்கள், தொழில் துறையில் கொடிகட்டி பறப்பவர்கள் என பலர் தங்களது பள்ளிக் கல்வியைக்கூட முழுமையாக நிறைவு செய்யாதவர்கள்தான் என்பது வரலாறு காட்டும் உண்மை.
கல்வி என்பது அறியாமை இருளகற்றி, அறிவொளி ஏற்றி, வாழ்க்கையை உயர்த்துவதாக இருக்கவேண்டும். ஆனால் இன்றைய கல்விமுறையோ தேர்வுத் தோல்விக்கே தற்கொலை செய்து கொள்ளும் கோழைகளையே உருவாக்குகிறது. தற்கொலை செய்து கொள்வதற்கு ஒரு நிமிடத் துணிவு போதும். ஆனால் போராடி வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு ஒவ்வொரு நொடியும் துணிவும் நம்பிக்கையும் வேண்டும்.

உலகுக்கே பண்பாடு, கலாசாரம், வீரத்தைப் போதித்து தரணியில் தலை நிமிர்ந்து வாழ்ந்த தமிழினம், இன்று தனது தன்னம்பிக்கை சீர்குலைவால் தனக்குத்தானே அழிவைத் தேடிக் கொள்வது வேதனைக்குரியது. சிறிய சிறிய தோல்விகளெல்லாம் வாழ்க்கைத் தோல்விகளல்ல. தற்கொலைஅவற்றுக்குத் தீர்வுமல்ல என்பதை இன்றைய மாணவர் சமுதாயம் உணர்ந்து தோல்வியில் இருந்து பீனிக்ஸ் பறவை போல உயிர்த்தெழ வேண்டும்.
எத்தகைய தோல்வி, பிரச்னை வந்தாலும் தகர்க்க இயலாத இரும்பைப் போன்ற இதயங்களை உருவாக்கும் நவீன கல்வி முறைதான் நமது இப்போதைய மாணவர் சமுதாயத்தின் பிரச்னைகளை தீர்க்கக்கூடிய அருமருந்து.

நன்றிக்கு நேரத்தை வீணடிக்காதீர் துரைமுருகன் வேண்டுகோள்

Added : ஜூன் 07, 2018 02:21

சென்னை:''முதல்வருக்கு நன்றி கூறுகிறோம் என்ற பெயரில், நேரத்தை வீணடிக்க வேண்டாம்,'' என, எதிர்க்கட்சி துணைத் தலைவர், துரைமுருகன், வேண்டுகோள் விடுத்தார்.

சட்டசபையில் நேற்று, முதல்வர் பழனிசாமி, 110 விதியின் கீழ், மூன்று துறைகளில், முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதற்கு, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் நன்றி தெரிவித்து பேசினர். பின் நடந்த விவாதம்:
துரைமுருகன்: விதி, 110ன் கீழ், முதல்வர் சில அறிவிப்புகளை வெளியிடுகிறார். அதை, துறை அமைச்சர்களே வெளியிடலாம்; ஆனால் முதல்வர் வெளியிடுகிறார்; அவருக்கு அதிகாரம் உள்ளது.ஆனால், அவர் அறிவித்ததையே, ஒவ்வொரு அமைச்சராக எழுந்து, மீண்டும் எடுத்துரைத்து, நன்றி கூறுகின்றனர். இதனால், நேரம் வீணாகிறது.
சபாநாயகர், தனபால்: முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகளுக்கு, துறை அமைச்சர்கள் நன்றி கூறுகின்றனர்.

துரைமுருகன்: நன்றி கூற வேண்டாம் என்று கூறவில்லை. துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வருக்கு நன்றி என, கூறுவதற்கு பதில், முதல்வர் படித்ததையே மீண்டும் படிப்பது ஏன் என்றுதான் கேட்கிறேன்.இவ்வாறு விவாதம் நடந்தது.
இன்ஜி., கவுன்சிலிங் சான்றிதழ் சரிபார்ப்பு நாளை துவக்கம்

Added : ஜூன் 07, 2018 00:45

சென்னை:இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு, 42 உதவி மையங்களில், நாளை முதல், ஒரு வாரம் நடக்க உள்ளது.

அண்ணா பல்கலையின், 509 இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங், ஜூலை முதல், ஒரு வாரம் நடக்க உள்ளது. கடந்த, 2017 வரை, ஒற்றை சாளர கவுன்சிலிங் நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் இருந்து, ஆன்லைன் கவுன்சிலிங்காக மாற்றப்பட்டுள்ளது.

இந்த கவுன்சிலிங்குக்கு, மே, 3 முதல், ஏப்., 2 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம், 1.59 லட்சம் பேர்  ண்ணப்பித்துள்ளனர்.இவர்களுக்கு, மதிப்பெண் அடிப்படையில், தரவரிசை பட்டியல் தயார் செய்வதற்கான, 'ரேண்டம்' எண், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.ரேண்டம் எண், அனைத்து மாணவர்களின் மொபைல் போன் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., ஆகவும், இ - மெயிலிலும் அனுப்பப்பட்டன.

இந்நிலையில், நாளை முதல் அனைத்து மாணவர்களுக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு துவங்குகிறது.அண்ணா பல்கலை அமைத்துள்ள, 42 உதவி மையங்களுக்கு, மாணவர்கள் அல்லது பெற்றோர் சென்று, அசல் விண்ணப்பங்களை காட்ட வேண்டும். நாளை முதல், 14ம் தேதி வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்.ஒவ்வொரு மாணவரும், எப்போது சான்றிதழ் சரிபார்ப்பு மையத்துக்கு வர வேண்டும் என்ற, தேதி, நேரம், உதவி மையம் ஆகிய விபரங்கள், மாணவர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., மற்றும் இ - மெயிலில் அனுப்பப்படுகிறது.

மாணவர்கள், தமிழ்நாடு மாணவர் சேர்க்கை இணையதளத்தில், தங்கள் பயன்பாட்டாளர் குறியீட்டை பயன்படுத்தியும், சான்றிதழ் சரிபார்ப்பு விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.அண்ணா பல்கலை குறிப்பிட்ட நாட்களில், அந்த மையங்களுக்கு செல்ல முடியாதவர்கள், சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள உதவி மையத்திற்கு வந்து, 17ம் தேதிக்குள், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை முடிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்ய வேண்டியது என்ன?

* சான்றிதழ் சரிபார்ப்புக்கு செல்லும் மாணவர்கள், தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, ஆன்லைனில் இருந்து பிரதி எடுத்து, அதில் கையெழுத்திட்டு, உதவி மையத்திற்கு எடுத்து செல்ல வேண்டும்* 10ம் வகுப்பு சான்றிதழ், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், பிளஸ் 2 ஹால் டிக்கெட், மாற்று சான்றிதழான, டி.சி., - நிரந்தர ஜாதி சான்றிதழ் ஆகியவற்றை எடுத்து செல்ல வேண்டும்* தேவைப்படுவோர், இருப்பிட சான்றிதழ், இலங்கை அகதிகளுக்கான சான்றிதழ், முன்னாள் ராணுவ வீரர் வாரிசு சான்றிதழ், மாற்று திறனாளர் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான அசல் சான்றிதழ் மற்றும் நகல் எடுத்து செல்ல வேண்டும்.
பெண் அலுவலர் தற்கொலை முயற்சி

Added : ஜூன் 07, 2018 05:04

ஸ்ரீவில்லிபுத்துார்:இட மாற்ற உத்தரவை ஏற்க மறுத்து ராஜபாளையம் நில அளவைத்துறை பெண் அலுவலர் தனலட்சுமி, 40, பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

ஸ்ரீவில்லிபுத்துார் மம்சாபுரம் மந்தை தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி, 40. கணவர் இல்லை. ராஜபாளையம் நிலஅளவைத்துறையில் முதுநிலை வரைவாளராக பணியாற்றுகிறார். ஜூன் 1ல் வெம்பகோட்டைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதற்கான உத்தரவு வழங்கப்படவில்லை.
தனக்கு ஸ்ரீவில்லிபுத்துார் அல்லது சிவகாசிக்கு பணியிடமாற்றம் தருமாறு, மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஜூன் 4ல் முறையிட்டுள்ளார்.ஆனால் நேற்று மதியம் 3:00 மணிக்கு, தனலட்சுமியின் வீட்டிற்கு வந்து வெம்பகோட்டைக்கான பணியிடமாற்றல் உத்தரவை வழங்கி உள்ளனர். இதையடுத்து தனலட்சுமி, வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இவரது சித்தப்பா முத்தையா கூறுகையில், ''ராஜபாளையம் தாலுகா அலுவலகத்தில் கூடுதல் பணி கொடுத்து டார்ச்சர் செய்துள்ளனர், '' என்றார்.

தலைமை சர்வேயர் சரவணன் கூறுகையில், ''பணியாளர்கள் பற்றாக்குறையால் பணிச்சுமை அதிகமே தவிர யாரும் டார்ச்சர் செய்யவில்லை,''என்றார்.

'ஐ லவ் யூ' அப்பா நெஞ்சை உருக்கிய பிரதிபாவின் கடைசி கடிதம்

Added : ஜூன் 07, 2018 03:47




செஞ்சி:'நீட்' தேர்வு தோல்வி யால் தற்கொலை செய்து கொண்ட மாணவி பிரதிபா, தன் தந்தைக்கும், குடும்பத்தினருக்கும் உருக்கமான கடிதம் எழுதிஉள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள பெருவளூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி பிரதிபா 18; நீட் தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால், தற்கொலை செய்து கொண்டார். அவர் தன் தந்தைக்கும், குடும்பத்தினருக்கும் எழுதிய கடிதத்தை நேற்று கண்டெடுத்தனர்.

அந்த கடிதத்தில் பிரதிபா எழுதியிருப்பதாவது;

அப்பாவிற்கு, உங்க அம்மு, உங்ககிட்ட சொல்ல விரும்புவது இதுவே கடைசி அப்பா. சாரிப்பா என்னால ஜெயிக்க முடியல. நீ என்மேல வச்சிருந்த நம்பிக்கையை காப்பாத்த முடியல; என்னால திரும்பவும், ஒரு தோல்விய தாங்குற சக்தி இல்லை.எத்தனை முறைப்பா நான் தோல்விய தாங்குவேன். தோல்வியடைந்ததால், என் ஸ்கூலுக்கு போக முடியல. என்டீச்சர்சை பார்த்து பேசுற தைரியம் இல்லை.

என்னால தானே மத்தவங்க முன்னாடி, இரண்டு வருஷமா தலைகுனிஞ்சி வாழ்ந்தாய். என் ஆசை, நீ மத்தவங்க முன்னாடி தலைநிமிர்ந்து வாழணும். ஆனால், என்னால் அதை செய்ய முடியல.எனக்கு தோல்விய தாங்குற சக்தி இல்லை. இந்த, இரண்டு வருஷமா எனக்கு அந்த சக்தியை கொடுத்தது நீதான்பா. இதுக்கு மேலேயும் நான் உனக்கு பாரமா இருக்க விரும்பவில்லை.

இந்த முடிவை நான், இரண்டு வருஷம் முன்னாடி எடுத்தப்பவே, நீ என்னை தடுக்காம இருந்திருக்கலாம். அப்படி நான் செய்திருந்தால், இரண்டு வருஷத்துல என்ைன கொஞ்ச கொஞ்சமா மறந்திருப்பீங்க. அதனால, நான் இப்ப செய்ய போறேன். ஏன்னா நான் உங்க எல்லாருடைய நம்பிக்கையும் இழந்துட்டேன். நான் சாகப்போறேன். ஐ ஆம் சாரிப்பா, ஐ லவ் யூபா.

இந்த முடிவு மற்றவர்களுக்கு கோழைத்தனமா தெரியும். ஆனால், அடுத்தவங்க நம்ம மேல வச்சிருக்கிற நம்பிக்கையை நாம அழிச்சிட்டு வாழற வாழ்க்கையை விட, இந்த முடிவே சரி. எனக்கு ஒரே ஒரு வருத்தம்பா, என்னால உங்களுக்கு எந்த சந்தோஷத்தையும் தர முடியல. அது மட்டும் இல்லாம, என்னால இருந்த எல்லா சந்தோஷத்தையும் இழந்துட்டீங்க.

உங்க எல்லாரையும் விட்டுட்டு போகணும்னு நினைக்கும் போது ரொம்ப வலிக்குது. ஆனால், அதை விட அதிகமான வலியை, இந்த தோல்வி தந்து விட்டது.என்னால மற்றவர்களை மாதிரி கிடைச்சதை வச்சி வாழமுடியல. 'ஐ லவ் மை பேமிலி, பட் மை பெயிலியர் கோயிங் டு மை டெட்லைன்' சாரி... என, கடைசி வரிகளை ஆங்கிலத்தில் முடித்து விட்டு, உங்க அம்மு என எழுதி உள்ளார்.
கையோடு வந்த, 'கியர் ராடு' அரசு பஸ்சில் திகில் பயணம்

Added : ஜூன் 07, 2018 03:19

திருப்பூர்:திருப்பூர் அருகே நடுவழியில், அரசு பஸ்சில், 'கியர் ராடு' உடைந்தது. இருப்பினும், டிரைவரின் சமார்த்தியத்தால், பயணியர் பத்திரமாக சென்றனர்.
திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து பொங்கலுார் செல்லும், 28ம் எண் அரசு பஸ், நேற்று காலை, 10:30 மணிக்கு, 45 பயணியருடன் புறப்பட்டது. சில மீட்டர் சென்றவுடன், டிரைவர் ராஜா, கியர் மாற்ற முயன்றபோது, 'கியர் ராடு' தனியே கையோடு வந்து விட்டது. உடனே, பஸ் அதே இடத்தில் நின்று விட்டது.

இதையறிந்து, அவ்வழியே வந்த அரசு டிரைவர்கள், உடைந்த ஒரு பகுதியின், 'ராடை' நகர்த்தி, மூன்றாவது, 'கியர்' இயங்குமாறு செய்தனர். அதன்பின், அதே, 'கியரில்' எங்கும் நிற்காமல், பஸ் மதியம், 12:00 மணிக்கு பல்லடம் சென்றது.பயணியர் இறங்கிய பின், டெப்போவுக்கு, பஸ் சென்றது.
தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'பொங்கலுார் செல்ல வேண்டிய பஸ், 'கியர்' ராடு உடைந்ததால், பல்லடத்துக்கு இயக்கப்பட்டது. பிரேக், டயர், டியூப், ஹாரன், இன்ஜின், கியர் உட்பட முக்கிய பாகங்கள் பழுது குறித்து, புகார் தெரிவித்தால் கூட, உரிய அதிகாரிகள் யாரும் கண்டுகொள்வதில்லை. ஏராளமான பஸ்களின் நிலை இப்படித்தான் உள்ளது' என்றனர்.

ரஷ்ய பல்கலைகளில் சேர்வது எப்படி? 3 நகரங்களில் கல்வி கண்காட்சி


Added : ஜூன் 07, 2018 01:06

சென்னை:தமிழக மாணவர்கள் ரஷ்ய கல்வி நிறுவனங்களில், மருத்துவம், இன்ஜினியரிங் படிப்புகளில் சேர உதவும் வகையில், ரஷ்ய துாதரகம் சார்பில், சென்னை, சேலம், திருச்சியில் கண்காட்சி நடத்தப்படுகிறது.
ரஷ்ய கூட்டமைப்பின், தென்னிந்திய துாதரக கலாசார பிரிவு துணை துாதர், மிகைல் கார்ப்டோவ், துணை துாதர், யூரி பிலோவ், நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:ரஷ்ய உயர்கல்வி கண்காட்சி, தமிழகத்தில், 20ம் ஆண்டாக நடத்தப்படுகிறது. சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள, ரஷ்ய கலாசார மையத்தில், வரும், 9, 10ம் தேதிகளில் கண்காட்சி நடத்தப்படும்.
சேலம், ஜி.ஆர்.டி., கிராண்ட் ஸ்டான்சியா ஓட்டலில், ஜூன், 11; திருச்சி, ரம்யாஸ் ஓட்டலில், ஜூன், 12ல் கல்வி கண்காட்சி நடத்தப்படும்.ரஷ்யாவின் பிரபலமான, 10க்கும் மேற்பட்ட பல்கலைகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். ரஷ்ய பல்கலைகளில் படிக்க விரும்புவோருக்கு, சி.இ.டி., மற்றும், ஐ.இ.எல்.டி.எஸ்., போன்ற முன்தகுதி தேர்வுகள் தேவையில்லை. மருத்துவ படிப்பு படிக்க, இந்தியாவில் நடத்தப்படும், 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.நான்கு ஆண்டு கால, இன்ஜினியரிங் படிப்பு மற்றும் ஆறு ஆண்டு கால மருத்துவ படிப்புக்கு முன், ரஷ்ய மொழி முன் தயாரிப்பு படிப்பை, ஓராண்டு படித்திருக்க வேண்டும்.

இந்திய மாணவர்களுக்கு, ரஷ்ய அரசு, கல்வி கட்டண சலுகை வழங்கு கிறது. இதற்கான விபரங்களை, கண்காட்சியில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

'Uncle-Aunty quota' for NRI admissions in Kerala too!; MBBS and nursing admissions getting rigged

 'Uncle-Aunty quota' for NRI admissions in Kerala too!; MBBS and nursing admissions getting rigged   Wednesday 25 September, 2024 | ...