Thursday, June 7, 2018


தற்கொலை தவிர்ப்போம்!


By இராம. பரணீதரன் | Published on : 07th June 2018 01:34 AM |

மனித உயிரின் மதிப்பு தெரியாத ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். அண்மையில் நடைபெற்ற நீட்' தேர்வில் தோல்வியடைந்ததால் விழுப்புரம் மாவட்டம் பெரவளூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் உயிரிழந்த தகவல் நம் அனைவரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதே காரணத்திற்காக கடந்த ஆண்டு அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு தமிழகத்தையே உலுக்கியது. இதனை நீட் அரசியல்' என்ற அரசியல் பார்வை கடந்து, நாம் நம் மாணவச் சமுதாயத்தை எந்தளவுக்கு ஆக்கபூர்வமான பாதையில் இருந்து மாற்றி, அழிவை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கிறோம் என பார்க்க வேண்டும்.

ஒவ்வொரு முறை பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின்பும், தேர்வில் தோல்வி, மாணவர் தற்கொலை' போன்ற செய்திகளைப் படிக்கும்போது எல்லாம் நம் இதயம் வலிக்கிறது. வாழ வேண்டிய மொட்டுகள் சிறு தோல்விக்காக மனமுடைந்து கருகி விட்டனவே என்று எண்ணத் தோன்றுகிறது.

நம் கல்வி முறையின் மீதுதான் குறை கூறவேண்டியுள்ளது. மாணவர்களுக்கு என்ன மாதிரியான கல்வி முறையை நாம் வழங்குகிறோம்? தோல்வியை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தை வழங்காத, தோல்வியை ஏற்று வெற்றிக்கு போராடும் தன்னம்பிக்கையை அளிக்காத இந்தக் கல்வியினால் என்ன பயன்?

மருத்துவராகி சமூகத்திற்கு சேவை செய்வதே என் லட்சியம்' எனக் கூறி, லட்சியம் ஈடேறாத காரணத்தால் தன் உயிரை மாய்த்துக்கொள்ளத் துணியும் மாணவ மணிகளே! சிறிது சிந்தியுங்கள்...சேவைதான் உங்களின் நோக்கமெனில் அதற்கு மருத்துவம் ஒன்றுதான் வழியென யார் கூறியது? மருத்துவர் ஆக இயலவில்லையெனில் துணை மருத்துவப் படிப்பு பயிலுங்கள். செவிலியர் ஆகலாம், மருந்தாளுநர் ஆகலாம், மருத்துவத் துறையில் ஆய்வக உதவியாளர், அறுவைச் சிகிச்சை உதவியாளர் என நீங்கள் மருத்துவத் துறையிலேயே சேவை செய்ய படிப்புகள் ஏராளம் உள்ளன.
இவை தவிர, ஒரு மனிதனுக்கான அடிப்படை உரிமையை போராடி பெற்றுத் தந்து, அவனை தன்மானத்துடனும், சுய மரியாதையுடனும் வாழச் செய்யும் வழக்குரைஞர் பணியும் சிறந்த சேவையே. இரவு, பகல், வெயில், மழை பாராது ஓய்வின்றி உழைத்து மக்களைக் காக்கும் காவல் துறை பணியும் சேவையே. சில நொடி கூட கவனம் சிதறாமல் தன்னை நம்பி பேருந்தில் பயணம் செய்யும் ஏராளமான பயணிகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பத்திரமாக கொண்டு சேர்க்கும் ஓட்டுநர் பணியும் சேவையே. இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து மின் விநியோகம் துண்டிக்கப்படும் நள்ளிரவு வேளையில் சென்று மின் விநியோகத்தைச் சீரமைக்கும் மின் ஊழியர்களின் பணிகளும் சேவையே. தன்னுயிரை துச்சமென மதித்து, பிற உயிர்களைக் காக்கும் தீயணைப்பு துறை, ராணுவப் பணி போன்றவையும் சேவையே. அவசர வேலையாக குடும்பத்துடன் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது, அது நடுக்காட்டில் பழுதாகி நின்றுவிட்டால், ஓடிவந்து பழுது நீக்கிச் செல்லும் மெக்கானிக்கின் பணிகூட சேவைதான்.

இப்படி அனைத்துப் பணிகளுமே ஏதோ ஒரு வகையில் சமுதாயத்துக்கு சேவையளிக்கும் பணியாகத்தான் இருக்கின்றன. எனவே நாம் நம் லட்சிய பணியை அடைய முடியாவிட்டாலும், கிடைத்த பணியை முழு மனதோடு மேற்கொண்டு, அதன் மூலம் மக்களுக்கு சேவையாற்றலாம்.
லட்சியத்தை அடைய முடியவில்லை என்பதற்காக உயிரை மாய்த்துக் கொள்வது கோழைத்தனம். ஒவ்வொரு உயிரும் ஓர் உன்னத நோக்கத்துக்காகத்தான் படைக்கப்பட்டுள்ளது. அதனை அறியாமல் நம் உயிரை நாமே மாய்த்துக் கொள்வது மிகவும் தவறானது.
ஒரு கதவு மூடினால் மற்றொரு கதவு திறக்கப்படும் என்று கூறுவார்கள். நாம் இன்று இழந்த ஒரு வாய்ப்புக்கு பதிலாக, நாளை நமக்கு எதிர்காலத்தில் மற்றொரு மிகப்பெரிய வாய்ப்பு காத்திருக்கும். அந்த வாய்ப்புக்காக நாம் காத்திருக்கவேண்டுமே தவிர அவசரப்பட்டு, தற்கொலை போன்ற கோழைத்தனமான முடிவை எடுத்துவிடக் கூடாது.

விமானியாக வேண்டும் என்று விரும்பிய ஒரு இளைஞனின் லட்சியம் தோற்றதால்தான் விஞ்ஞானியாகி, நாட்டின் உயரிய பொறுப்பாகிய குடியரசுத் தலைவராகவும் பதவி வகித்து, இன்றைய இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். அன்று அவர் தனது லட்சியத்தில் வென்றிருந்தால், விமானியாகி லட்சக்கணக்கான மக்களில் ஒருவராக வாழ்ந்து மறைந்திருப்பார். ஆனால் லட்சியத்தில் தோற்றாலும் மனம் தளராமல் உழைத்ததால்தான், மறைந்து விட்டாலும் இன்றும் இளைஞர்களின் லட்சிய நாயகனாக இருந்து வருகிறார்.
நாட்டை ஆண்டவர்கள், விஞ்ஞானி ஆனவர்கள், சினிமா, விளையாட்டுத் துறையில் நட்சத்திரமாக ஜொலிப்பவர்கள், தொழில் துறையில் கொடிகட்டி பறப்பவர்கள் என பலர் தங்களது பள்ளிக் கல்வியைக்கூட முழுமையாக நிறைவு செய்யாதவர்கள்தான் என்பது வரலாறு காட்டும் உண்மை.
கல்வி என்பது அறியாமை இருளகற்றி, அறிவொளி ஏற்றி, வாழ்க்கையை உயர்த்துவதாக இருக்கவேண்டும். ஆனால் இன்றைய கல்விமுறையோ தேர்வுத் தோல்விக்கே தற்கொலை செய்து கொள்ளும் கோழைகளையே உருவாக்குகிறது. தற்கொலை செய்து கொள்வதற்கு ஒரு நிமிடத் துணிவு போதும். ஆனால் போராடி வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு ஒவ்வொரு நொடியும் துணிவும் நம்பிக்கையும் வேண்டும்.

உலகுக்கே பண்பாடு, கலாசாரம், வீரத்தைப் போதித்து தரணியில் தலை நிமிர்ந்து வாழ்ந்த தமிழினம், இன்று தனது தன்னம்பிக்கை சீர்குலைவால் தனக்குத்தானே அழிவைத் தேடிக் கொள்வது வேதனைக்குரியது. சிறிய சிறிய தோல்விகளெல்லாம் வாழ்க்கைத் தோல்விகளல்ல. தற்கொலைஅவற்றுக்குத் தீர்வுமல்ல என்பதை இன்றைய மாணவர் சமுதாயம் உணர்ந்து தோல்வியில் இருந்து பீனிக்ஸ் பறவை போல உயிர்த்தெழ வேண்டும்.
எத்தகைய தோல்வி, பிரச்னை வந்தாலும் தகர்க்க இயலாத இரும்பைப் போன்ற இதயங்களை உருவாக்கும் நவீன கல்வி முறைதான் நமது இப்போதைய மாணவர் சமுதாயத்தின் பிரச்னைகளை தீர்க்கக்கூடிய அருமருந்து.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024