Thursday, June 28, 2018

பெற்றோர்கள் பிள்ளைகளிடம் மன்னிப்புக் கேட்கலாமா? உளவியல் நிபுணர் சொல்வதைக் கேளுங்கள்!


ஆ.சாந்தி கணேஷ்  vikatan 25.06.2018

பிள்ளைகள் பெற்றோராகிய உங்களைப் பார்த்துத்தான் வளர்கிறார்கள். நல்ல நல்ல விஷயங்களில் மட்டுமல்ல, மன்னிப்புக் கேட்கிற விஷயத்திலும் நீங்கள்தான் அவர்களின் முன்னுதாரணம்



அன்பான பெற்றோர்களே, எப்போதாவது நீங்கள் செய்த தவறுகளுக்காக உங்கள் பிள்ளைகளிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறீர்களா?

`மன்னிப்பா, நாங்களா..? ஒருவேளை நாங்க தெரியாம தப்பு செஞ்சிருந்தாலும் அதை ஒத்துக்கிட்டு பிள்ளைங்ககிட்ட மன்னிப்புக் கேட்டா, அப்புறம் பிள்ளைங்க எப்படி எங்களை மதிப்பாங்க? தவிர, நம்மளை மாதிரியே அம்மா அப்பாகூடத் தப்பு பண்ணுவாங்க போலிருக்கேன்னு நினைச்சுட்டா அவங்க தப்பு பண்ணும்போது நாங்க எப்படி அதைக் கண்டிக்க முடியும்?' என்று எதிர்க்கேள்வி எழுப்புகிற பல பெற்றோர்களின் குரல்கள் காதுகளில் விழவே செய்கின்றன. ஆனால், தங்கள் தவறுகளுக்காக ஈகோ இல்லாமல் மன்னிப்புக் கேட்கிறப் பெற்றோர்களின் பிள்ளைகள் `இந்தச் சமூகத்துக்குக் கிடைத்த வரம்' என்கிறார் உளவியல் நிபுணர் சரஸ் பாஸ்கர்.



`மற்றவர்களை மரியாதையாக நடத்துவதும், நம்மையறியாமல் மற்றவர்களுக்குத் தீங்கிழைக்கும்பட்சத்தில் மன்னிப்புக் கேட்பதும்தான் மனிதத்தன்மை. இதில் பெற்றோர், பிள்ளைகள் என்கிற பாகுபாடெல்லாம் கிடையவே கிடையாது. இந்த அடிப்படையைப் புரிந்துகொண்டாலே `பெத்தப் பிள்ளைங்ககிட்ட மன்னிப்புக் கேட்பதா' என்கிற ஈகோ காணாமல் போய்விடும். இப்படி ஈகோ இல்லாத பெற்றோர்களிடம் வளரும் பிள்ளைகள் தாங்களும் அப்படியே வளர்வார்கள். இந்த இயல்பில் வகுப்பறையில் ஐந்து குழந்தைகள் இருந்தாலும்கூட போதும், மற்றக் குழந்தைகளும் இந்தக் குணத்துக்கு மாற. அதனால்தான் இப்படிப்பட்ட பிள்ளைகளைச் சமூகத்துக்குக் கிடைத்த வரம் என்று கூறினேன்'' என்றவர் பேச்சினைத் தொடர்ந்தார்.

  ``தாங்கள் தவறு செய்கிறபட்சத்தில் பெற்றோர்கள், பிள்ளைகளிடம் மன்னிப்புக் கேட்பதில் பெரிய நன்மை ஒன்றும் இருக்கிறது. ஒரு தவறு செய்துவிட்டால் அதற்குத் தீர்வே இல்லை என்று பிள்ளைகள் நினைத்து நினைத்து மருக மாட்டார்கள். அதை வெளிப்படையாகச் சொல்லி மன்னிப்புக் கேட்டுவிட்டு குற்றவுணர்ச்சி இல்லாமல் அடுத்தடுத்த விஷயங்களுக்குப் பயணம் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். பிள்ளைகளின் வளர்ச்சிக்கு அதுதானே அடிப்படையாக வேண்டும்.

அடுத்தது, ஒரு தடவை மன்னிப்புக் கேட்டபிறகு, அந்தத் தவற்றைத் திரும்பவும் செய்யக் கூடாது என்பதிலும் பெற்றோர்களாகிய நாம்தாம் பிள்ளைகளுக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டும்.



`அம்மாவும் அப்பாவும் தப்புப் பண்ணிட்டா தயங்காம மன்னிப்புக் கேட்கிறாங்க' என்கிற எண்ணம் உங்கள் குழந்தைகளின் மனதில் பதிய பதிய காலப்போக்கில் அந்த உணர்வானது அன்பாகி, மரியாதையாகி, பக்தியாக மாறும். பெற்றவர்கள்மீது பக்தி செய்கிற பிள்ளைகள், வளர்ந்தபிறகு பெற்றோர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்ப மாட்டார்கள் என்பது என் தனிப்பட்டக் கருத்து.

பெற்றோர்கள் பிள்ளைகளிடம் மன்னிப்புக் கேட்பதில் இன்னொரு நுட்பமான விஷயமும் இருக்கிறது. உங்கள் குழந்தை ஒரு தவறு செய்துவிட்டது என்று நினைத்து அவனை/அவளை அடித்து விடுகிறீர்கள். பிறகு, பிள்ளைமீது தவறு இல்லை என்பது தெரிந்து அவனிடம்/அவளிடம் மன்னிப்புக் கேட்பது ஒருவகை. இதில் இன்னொரு வகையும் இருக்கிறது. அதாவது, பிள்ளை நிஜமாகவே தப்பு செய்துவிட்டது. அதனால் பிள்ளையை அடித்து விட்டீர்கள். இதன் பிறகு நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? நீங்கள் நிதானமானதும், பிள்ளையிடம் பேசுங்கள். `நீ இப்படித் தப்பு செய்ததால் அம்மாவுக்குக் கோபம் வந்து அடித்து விட்டேன். ஆனால், நான் அடித்ததற்கு `ஸாரி' என்று கேட்டு விடுங்கள். இதை ஏன் சொல்கிறேன் என்றால், `யாராவது தவறு செய்தால் அவர்களை அடித்தும் திருத்தலாம் போல' என்கிற பாடம் உங்கள் பிள்ளைகளின் மனதில் பதியவே கூடாது என்பதற்காகத்தான் இந்த மன்னிப்பு. கூடவே, செய்த தவற்றை மறுபடியும் பிள்ளைகள் செய்யக் கூடாது என்பதையும் அவர்கள் மனதில் பதிய வைப்பதும் உங்கள் கடமை.

கடைசியாக ஒரு விஷயம், பிள்ளைகள் பெற்றோராகிய உங்களைப் பார்த்துத்தான் வளர்கிறார்கள். நல்ல நல்ல விஷயங்களில் மட்டுமல்ல, மன்னிப்புக் கேட்கிற விஷயத்திலும் நீங்கள்தான் அவர்களின் முன்னுதாரணம்'' என்று புதிய கோணத்தைப் பகிர்ந்துகொண்டார் உளவியல் நிபுணர் சரஸ் பாஸ்கர்.

No comments:

Post a Comment

PhD aspirants demand online availability status of guides

PhD aspirants demand online availability status of guides Ardhra.Nair@timesofindia.com  26.11.2024 Pune : Citing difficulties in application...