Thursday, June 28, 2018

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடும் இல்லை , காலக்கெடுவும் இல்லை: வெறும் அறிவிப்பா?- ஆர்டிஐயில் அதிர்ச்சித் தகவல்

Published : 27 Jun 2018 13:54 IST

புதுடெல்லி,
 
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், இந்த மருத்துவமனை உள்ளிட்ட 5 மருத்துவமனைகளுக்கு நிதி ஒதுக்கீடும் இல்லை, எப்போதும் முடிக்கப்படும் என்ற காலக்கெடுவும் மத்திய அரசிடம் இல்லை என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

‘இந்தியா டுடே’ பத்திரிகை ஆர்டிஐ மூலம் இந்தத் தகவலை வெளிக்கொண்டுவந்துளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்திடம் ஆர்டிஐ மூலம் கேள்விகள் கேட்கப்பட்டு இந்தத் தகவல் அனைத்தும் பெறப்பட்டுள்ளது. இந்த தகவலை கடந்த 21-ம் தேதிதான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது குறிப்பிடத்துள்ளது.
 
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்ததும், 14 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்கப்படும், ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்தது. அதன்படி கடந்த 2014-15, 2015-16, 2017-18-ம் ஆண்டு பட்ஜெட்டில் 13 எய்ம்ஸ்கள் அமைக்க அறிவிப்பு வெளியாகின. ஆனால், ஆட்சிக்கு வந்து 48 மாதங்கள் ஆகியும் இன்னும் எந்த எய்ம்ஸ் மருத்துவமனையும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

5 எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஜம்மு, காஷ்மீர், பிஹார், தமிழகம், குஜராத் ஆகிய இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது, ஆனால், இதுவரை நிதிஏதும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மேலும், இந்த 5 எய்ம்ஸ் மருத்துவமனைகளும் எப்போது கட்டி முடிக்கப்படும் என்ற காலக்கெடுவும் இல்லை.

இதில் உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 10 சதவீத நிதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை 2020-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கோரக்பூரில் ரூ.1,011 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, இதுவரை ரூ.98.34 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திரா மாநிலத்தில் ரூ.1618 கோடியில் எம்ய்ஸ் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதில் ரூ.233.88 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், ஒன்றரை ஆண்டுக்குள் இதை முடிப்பது இயலாது.

மேற்குவங்காளத்தில் கல்யாணி பகுதியில் ரூ.1,754 கோடியில் எய்ம்ஸ் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு ரூ.278.42 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது வரும் 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைமுறைக்கு வரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவில் நாக்பூரில் அக்டோபர் 2020ம் ஆண்டுக்குள் எய்ம்ஸ் மருத்துவனை ரூ.1,577 கோடியில் அமைக்க ஒப்புதல் அளித்துள்ள மத்திய அரசு இதுவரை ரூ.231.29 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது.

அசாம் மாநிலத்தில் கம்பூர் மாவட்டத்தில் எம்ய்ஸ் மருத்துவமனை ரூ.1,123 கோடியில் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை 2021ம் ஆண்டு முடிக்கப்பட இலக்குநிர்ணயிக்கப்பட்டு, இதுவரை ரூ.5 கோடி மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் பத்தின்டா நகரில் ரூ.925 கோடியில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை ரூ.36.57 கோடி நிதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டுக்குள் இந்த மருத்துவமனை கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜம்முவில் சம்பா மாவட்டத்திலும், காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்திலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதில் ரூ.90.84 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காலக்கெடு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. இப்போது ஜம்முகாஷ்மீரில் ஆட்சியும் இல்லை.


இமாச்சலப்பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் ரூ.1,350 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, பிரதமர் மோடி கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி அடிக்கல்லும் நாட்டினார். ஆனால், இதுவரை ஒருபைசா நிதிகூட ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்த மருத்துவமனை 2021-ம் ஆண்டுடிசம்பர் மாதம் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பிஹார் மாநிலத்தில் கடந்த 2015-16ம் ஆண்டு பட்ஜெட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கத் திட்டமிடப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக அங்கு இடமும் முடிவு செய்யப்படவில்லை, நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை

தமிழகத்தில் மதுரைக்கு அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை எந்தவிதமான நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எப்போது இந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என்ற காலக்கெடுவும் குறிப்பிடப்படவில்லை.

ஜார்கண்ட் மாநிலத்தில் தியோகார்க் நகரில் ரூ.1,103 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்காக ரூ.9 கோடி மட்டுமே அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 2021-ம் ஆண்டு முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் போலவே பிஹார், குஜராத் ஆகிய மாநிலங்களில் எய்ம்ஸ் அமைப்பதற்கு எந்தவிதமான நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை, எப்போது கட்டிமுடிக்கப்படும் என்ற காலக்கெடுவும் இல்லை. இவ்வாறு ஆர்டிஐயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடிதலைமையிலான பாஜக ஆட்சி முடிய இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில், இன்னும் இந்த திட்டங்களுக்கு ஆயிரக்கணக்கில் நிதி தேவைப்படும். அடுத்த ஆண்டு மத்திய அரசு செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யும் என்பதால், அதில் நிதிஒதுக்கீடு செய்யுமா என்பது கேள்விக்குறியே.

No comments:

Post a Comment

HC: Cruelty charges need some proof in divorce cases

HC: Cruelty charges need some proof in divorce cases TIMES OF INDIA KOLKATA 27.12.2024 Kolkata : Allegations of cruelty for seeking divorce ...