Wednesday, June 27, 2018

காற்றில் கரையாத நினைவுகள் 17: தேர்வெனும் அனுபவம்

Published : 26 Jun 2018 09:11 IST

வெ. இறையன்பு

 





அன்று படிப்பு என்பது தேர்வுக்கு முதல் நாள். அன்று மட்டும் கூட்டுப் புழுவாய் கவனம் சிதறாமல் நடத்திய பாடங்களை நன்றாகப் படித்தால் போதும். தேர்ச்சி பெறுவதே இலக்காக இருந்தது. ஆசிரியர் நடத்துவதே அன்று போதும். அவர்கள் கொடுக்கும் வீட்டுப் பாடம், கற்றுத் தருகிற வரைபட அறிவு, எழுதுகிற கட்டுரை நோட்டு போன்றவற்றை முறையாகச் செய்தால் வெற்றி நிச்சயம். வகுப்பில் பாடம் நடத்திய பிறகு புத்தகத்திலேயே பாடத்தில் இறுதியில் இருக்கும் கேள்விகளுக்கான பதில்களைக் குறித்துக் கொடுப்பார்கள். அவற்றை முழுதாகப் படித்தால் போதும். அப்போதும் இருந்தன மாதத் தேர்வுகள், காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு. ஆனாலும் நடந்தன வலிக்காமல் தேர்வுகள். தேர்வு குறித்து பெற்றோர் கவலை கொண்டதும் இல்லை, பள்ளி அவர்களை பயமுறுத்தியதும் இல்லை. ஆண்டுதோறும் நடக்கும் பொதுத் தேர்வுகளை ஏதோ ஒலிம்பிக் போட்டிபோல முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக அன்று பத்திரிகைகள் அச்சடித்ததும் இல்லை. மாதத் தேர்வுக்கு நாமே கொண்டுபோக வேண்டும் விடையெழுதும் தாள்கள். அரையாண்டு, காலாண்டு என்றால் பள்ளி முத்திரையோடு வெள்ளைத் தாள்கள் விநியோகிக்கப்படும்.

தேர்வு குறித்த அச்சமில்லாத காலம் அது. மதிப்பெண்கள் குறித்து பெற் றோர் கன்னத்தில் கைவைத்தபடி காத்திருக்காத யுகம் அது. நான்கைந்து பிள்ளைகள் இருக்கும் வீட்டில் எந்தப் பிள்ளை என்ன வகுப்பு படிக்கிறது என்பதே தெரியாமல், தப்பாகச் சொல்லும் அப்பாக்கள் உண்டு. சமயத்தில் அண் ணன் தவறி தம்பியுடன் ஒரே வகுப்பில் படிக்கிற நிகழ்வுகளும் உண்டு. அதற்காக அண்ணன் குற்ற உணர்வில் குறுகியதும் இல்லை, தம்பி தற்பெருமையில் தளும்பியதும் இல்லை.

அப்போது ஏது கைக் கடிகாரம்?

இயற்கை அறிவு வெளிப்படவே தேர்வு. தேர்வு வருகிறபோது அன்று மாணவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. பெறுகிற மதிப்பெண்களை எண்ணியல்ல, தேர்வுக்குப் பின் வருகிற விடு முறையை எண்ணி. ஒவ்வொரு தேர்வு முடிந்ததும் மாலையில் படிக்கத் தொடங்கும் வரை விளையாட்டு தொடரும். ’சென்று படி’ என்று வற்புறுத்தும் பெற்றோரும் இல்லை, அடுத்த மாணவனை ஒப்பிட்டு ஓட நினைத்த போட்டியாளரும் இல்லை.

அப்போது ஏது கைக் கடிகாரம்? வகுப்பறைக்கொரு கடிகாரம்கூட இருந்ததில்லை. தேர்வு தொடங்கியதும் அரை மணி நேரத்துக்கு ஒருமுறை பள்ளி மணியடித்து எச்சரிக்கை செய்யும். கண்காணிப்பு ஆசிரியர் ‘அரை மணி நேரம் முடிந்தது. இன் னும் 2 மணி நேரம் இருக்கி றது’ என்று கறாராகச் சொல்வார். தண்ணீர்க் குப்பிகளை யாரும் எடுத் துச் சென்றதும் இல்லை. எழுதுகிற அவசரத்தில் தாகம் எங்கே எடுக்கும்? இருந்தாலும் பள்ளி அலுவலக உதவியாளர் ஒரு வாளியில் குடிநீரோடு வகுப்பு வகுப்பாகச் சென்று தண்ணீர் தருவார். அதைக்கூட விரைவாக வாங்கிக் குடித்து முடித்து பரீட்சையைத் தொடர்வோம். கடைசி 10 மணித் துளி இருக்கும்போது 2 முறை எச்சரிக்கை மணி அடிக்கும். உடனே கண்காணிப்பாளர் ‘விடைத்தாளைக் கட்டிவிட்டு எழுதுங்கள்’ என கண்டிப்புடன் சொல்வார். கடைசி மணி அடித்ததும் விடைத் தாள்கள் தேர்வெழுதும் மாணவர் களிடம் இருந்து பிடுங்கப்படும். ஆனால், அதற்கு ஒருநாளும் வாய்ப்புத் தந்ததில்லை. யார் முதலில் வெளியே வருவது என்பதே அங்கு முக்கியமான போட்டி.

பாஸ் மார்க் 35

எப்படி தேர்வு எழுதியிருந்தாலும் காலாண்டு விடுமுறையில் களியாட்டங்களுக்குக் குறைவில்லை. விடு முறையை நாங்கள் துய்க்கக் கூடாது என்பதில் குறியாக இருப்பதைப் போல பள்ளி ஆசிரியர்கள் கட்டளை ஒன்றைப் பிறப்பிப்பார்கள். ‘வினாத் தாள்கள் அனைத்துக்கும் விடுமுறை முடிந்து வரும்போது விடையெழுதிக் கொண்டுவர வேண்டும்’ என்பதே அந்த மரண தண்டனைக்கு நிகரான நிபந்தனை. நாங்கள் எழுதிச் சென்றதும் இல்லை, அவர்கள் கேட்டு நச்சரித்ததும் இல்லை. அவர்கள் அடிப்பதைப் போல அடித்தார்கள், ஆனால் நாங்கள் அழுவதைப் போல அழவில்லை.

அன்று படிப்பில் கனிவு இருந்தாலும் கட்டுப்பாட்டில் பள்ளிகள் கடுமையாக இருந்தன. எங்கள் பள்ளியில் எதிலும் பாரபட்சம் இருந்ததே இல்லை. காப்பிஅடித்த ஆசிரியரின் மகனே தேர்வு அறையில் இருந்து அனுப்பப்பட்டு, அதே வகுப்பில் படிப்பைத் தொடர்ந்த தும் உண்டு. தேர்வுத் தாளைத் திருத்து கிற ஆசிரியர், தன் மகன் எழுதியதற்கு மட்டும் அதிக மதிப்பெண் போட்ட சம்பவங்களும் உண்டு.

தேர்வு விடுமுறைகள்தோறும் விசேஷங்கள் உண்டு. அரையாண்டு விடுமுறை முடிகிறபோது பொங்கல் திருவிழா வரும். கடைசி விடுமுறை நாளைப் போல சோகமானது மாணவன் வாழ்வில் எதுவும் இருக்காது. அதைப் போல விரைவில் முடிகிற ஒன்றும் இருக்காது. தேர்ச்சி பெறுவதற்கு 35 மதிப்பெண்கள் என்றாலும் 30 பெற்றாலே அடுத்த வகுப்புக்கு அனுப்பிவிடுவதும் உண்டு. அன்று முழு ஆண்டுத் தேர்வின் முடிவு அஞ்சலட்டையில் வீட்டுக்கே வரும்.

கடைசி நாள் டீ பார்ட்டி

எந்தப் பாடத்துக்கும் நோட்ஸை (வழி காட்டி) மாணவர்கள் பயன்படுத்தியது இல்லை. தமிழ் பாடத்துக்கு எல்லோரிடமும் ‘கோனார் உரை’ இருக்கும்.

‘படிப்பு விடுப்பு’ 10 நாள் உண்டு. பலர் அப்போதுதான் படிக்கத் தொடங்குவார்கள். 8-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு. 11-ம் வகுப்புக்கு அப்போது விருப்பப் பாடம் உண்டு. பல பேர் அதிக மதிப்பெண் பெறலாம் என்று கணக்கை எடுத்து கஷ்டப்படுவார்கள். பள்ளி இறுதித் தேர்வுக்கு முன்பு 3 ‘திருப்புதல் தேர்வுகள்’ நடக்கும். மாணவர் மன்றம் நடத்தும் சிறப்புத் தேர்வுகளும் உண்டு.

அப்போதெல்லாம் ஆண்டு விழா ஆண்டு இறுதியில்தான் நடக்கும். கலை நிகழ்ச்சிகளுக்கு ஒத்திகை நடக்கும். பள்ளியை விட்டு பிரிந்து செல்லும் மாணவர்களுக்குத் ‘தேநீர் விருந்து’ (டீ பார்ட்டி) நடக்கும். மாணவர்கள் பங்களிப்புடன் ஆசிரியர்களுக்குச் செய்யும் கவுரவம் அது. விருந்தென்றால் ஓர் இனிப்பு, கொஞ்சம் காராபூந்தி, குளிர்பானம் அவ்வளவுதான். அந்தக் காலத்தில் எப்போதாவது மட்டுமே தின்பதற்கு இனிப்பு கிடைக்கும். வகுப்பு வகுப்பாக புகைப்படம் எடுக்கும் பழக்கமும் அப்போது இருந்தது. இன்று ஆண்டு விழா பல பள்ளிகளில் ஜூலை மாதமே நடக்கிறது

தேர்ச்சி பெறாத மாணவர்களை யாரும் இழித்துப் பேசியதில்லை. அவர்கள் படித்த வகுப்பிலேயே தங்கி இளைய மாணவர்களுடன் ஐக்கியமாவார்கள். விளையாட்டில் கெட்டிக்கார மாணவர்கள் சிலர், ‘‘பள்ளிக்குத் தாங்கள் தொடர்ந்து போட்டிகளில் விளையாட வேண்டுமென்று ‘ஃபெயில்’ செய்துவிட்டார்கள்’’ என்று சொல்லித் திரிவார்கள்.

தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வெற்றியைக் கொண்டாட முனைவதுண்டு. அன்று கொண்டாட்டம் என்றால் அருகில் இருக்கும் திரையரங்கில் படம் பார்ப்பது மட்டுமே. தேர்ச்சி பெறாத மாணவர்களும் அவர்களோடு சேர்ந்துகொள்வார்கள்.

வாழ்க்கையே முடிந்துவிட்டதாக பூதாகரமான எண்ணங்களை மனதில் தாங்கி விபரீத முடிவுகளை யாரும் எண்ணிப் பார்த்ததில்லை. காரணம், அன்று போட்டி இல்லை. பொறாமை இல்லை.

கோடையிலும் வகுப்பு

11-ம் வகுப்பு படித்துவிட்டு பணிக் குச் சென்றவர்கள் அதிகம். அரசுப் பணி கிடைத்ததால் படிப்பைப் பாதி யில் விட்டவர் உண்டு. பள்ளி இறுதித் தேர்வு மதிப்பெண்களை வைத்து தபால் இலாக்காவில் நேரடி பணி நியமனம் பெற்றவர் உண்டு.

இன்று தேர்வு என்பது போருக்குப் புறப்படுவதைப்போல. பெற்றோர் நெற்றியில் திலகம் வைத்து அனுப்பு கிறார்கள். மகன் மேனிலை வகுப்பு என்றால் முடிவு வெளியாகும்போது அத்தனை பேரும் தொலைபேசியில் என்ன மதிப்பெண் என்று விசாரித்து துளைத்து எடுக்கிறார்கள். இன்று கோடையிலும் வகுப்பு. விதவிதமான பயிற்சி. தினம் ஒரு தேர்வு. எப்போதும் படிப்பு. படித்தவற்றை உடனே மறந்து, அடுத்தவற்றை நினைவில் கொள்ளும் அவசரம்.

மறுபடியும் தேர்வை தேர்வாகவே பார்க்கும் காலம் ஒன்று வராதா!

- நினைவுகள் படரும்...

No comments:

Post a Comment

PhD aspirants demand online availability status of guides

PhD aspirants demand online availability status of guides Ardhra.Nair@timesofindia.com  26.11.2024 Pune : Citing difficulties in application...