யு.ஜி.சி., பெயரை மாற்ற மத்திய அரசு முடிவு
dinamalar 28.06.2018
புதுடில்லி:யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானிய கமிஷனின் பெயரை மாற்றவும், அதனிடம் உள்ள நிதி அதிகாரத்தை ரத்து செய்யவும், மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது பற்றி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக உயர் அதிகாரிகள் கூறியதாவது:உயர் கல்வியை மேம்படுத்தும் அமைப்பாக, யு.ஜி.சி.,யை மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனிடமிருந்து நிதி அதிகாரத்தை பறிக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
யு.ஜி.சி.,யின் பெயரை, 'இந்திய உயர் கல்வி கமிஷன்' என, பெயர் மாற்றம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பல்கலையில், கல்வி தரத்தை நிர்ணயித்தல், தரத்தை உயர்த்துதல் போன்ற கல்வி மேம்பாட்டு பணிகளில் மட்டுமே, கமிஷன் கவனம் செலுத்த வேண்டுமென, அரசு விரும்புகிறது.தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்றவை, கல்வி தரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. அவற்றுக்கு நிதி வழங்கும் அதிகாரம் கிடையாது. அதேபோல், உயர் கல்வி கமிஷனும் செயல்பட, அரசு முடிவுசெய்துள்ளது.
கமிஷனின் பணிப் பளுவை குறைக்கவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தரமற்ற மற்றும் போலி நிறுவனங்களை மூடவும், கமிஷனுக்கு அதிகாரம் வழங்கப்படும். விதிமுறைகளை மீறும்
நிறுவனங்களுக்கு, கமிஷனே அபராதம் விதிக்கும்.
இது தொடர்பான மசோதா தயாரிக்கப்பட்டு, கல்வியாளர்கள், நிபுணர்கள், பொது மக்களின் கருத்துகளை அறிய, மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதளத் தில், அது தொடர்பான விபரங்கள் வெளியிடப் பட்டுள்ளன. ஜூலை, 7ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment