Friday, June 29, 2018

மாவட்ட செய்திகள்

தந்தை வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் ‘மகளுக்கு கல்வி கடன் வழங்க வங்கி மறுத்தது சரிதான்’ சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு





தந்தை வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால், மகளுக்கு கல்வி கடன் வழங்க வங்கி மறுத்தது சரிதான் என சென்னை ஐகோர்ட்டு ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்தது.

ஜூன் 29, 2018, 04:30 AM
சென்னை,
தந்தை வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால், மகளுக்கு கல்வி கடன் வழங்க வங்கி மறுத்தது சரிதான் என சென்னை ஐகோர்ட்டு ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்தது.

நாகை மாவட்டத்தை சேர்ந்த நர்சிங் மாணவி ஏ.தீபிகா. இவர், வேதாரண்யம் பாரத ஸ்டேட் வங்கியில், கல்விக்கடன் கேட்டு விண்ணப்பம் செய்தார். இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வங்கி நிர்வாகம் சார்பில் ஆஜரான வக்கீல் எஸ்.ஆர்.சுமதி, ‘தீபிகாவின் தந்தை வாங்கிய கடனுக்கு தவணையை முறையாக செலுத்தவில்லை. வழக்குதாரர் கல்லூரி நிர்வாக இடஒதுக்கீட்டின் கீழ் நர்சிங் படிப்பில் சேர்ந்துள்ளார். இந்த நர்சிங் படிப்பு, கல்விக்கடன் வாங்கும் திட்டத்தில் இடம் பெறவில்லை. அதனால் அவருக்கு கல்விக் கடன் வழங்க முடியாது’ என்று வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவி தரப்பில் ஆஜரான வக்கீல் விஜேந்திரன், ‘வழக்குதாரர் தந்தை தவணை செலுத்தவில்லை என்ற காரணத்துக்கு கல்விக்கடனை வழங்க மறுப்பது சரியானது இல்லை. வாங்கிய கடனுக்கு தவணையை வழக்குதாரர் தான் செலுத்த போகிறாரே தவிர, அவரது தந்தை இல்லை’ என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

அரசியல் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில், பல பெரும் புள்ளிகளுக்கு பெரும் தொகையை வங்கிகள் கடன் வழங்குகின்றன. அவ்வாறு கடன் வாங்குபவர்கள், கடனை திருப்பிச் செலுத்தாமல், வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிடுகின்றனர். இதனால், கடன் வழங்க கையெழுத்திட்ட வங்கி ஊழியர்கள் தான் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். அதுமட்டுமல்ல, இவ்வாறு கடன் வழங்குவதால், பொதுமக்களின் பணம் முறைகேடு செய்யப்படுகிறது.

கடன் தொகை சிறியதோ, பெரியதோ பிரச்சினை இல்லை. கடன் வாங்கியவர்களிடம் பணத்தை திரும்ப வசூலிக்க வேண்டும். இதற்காக கடன் கொடுத்து விட்டு அதை வசூலிக்க, கடன் வாங்கியவர்களின் பின்னால் வங்கி அதிகாரிகள் ஓடுவதைவிட, கடன் வழங்காமல் இருப்பதே நல்லது.

எனவே, வழக்குதாரரின் தந்தை தவணை தொகையை திருப்பிச் செலுத்தாததால், இவருக்கு கடன் வழங்க முடியாது என்று வங்கி நிர்வாகம் சரியாக முடிவு எடுத்துள்ளது. நர்சிங் படிப்பு, கல்விக்கடன் திட்டத்தில் இடம்பெறாததால், வழக்குதாரர் கல்விக்கடன் பெறமுடியாது. இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.

இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

KGMU starts clinic for L GBTQ patients

 KGMU starts clinic for L GBTQ patients  TIMES OF INDIA LUCKNOW 27.12.2024 Lucknow : King George's Medical University (KGMU) launched a ...