காமராஜ் பல்கலை செனட் பிரதிநிதி தேர்தல் : தேதி நினைவில் இல்லையாம் பதிவாளருக்கு
Added : ஜூன் 27, 2018 05:53
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் தேடல் குழுவில் இடம் பெறும் செனட் பிரதிநிதிக்கான தேர்தல் குறித்து ரகசியம் காக்கப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.துணைவேந்தர் செல்லத்துரை நியமனத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், 'தேர்வு குழு அமைத்து வெளிப்படையாக துணைவேந்தர் தேர்வு பணி நடத்த வேண்டும்' என உத்தரவிட்டது.சட்டத்துறை செயலர் பூவலிங்கம் தலைமையில் வழிகாட்டுதல் குழு அமைத்தும், தேடல் குழுவில் சிண்டிகேட் பிரதிநிதியாக திருச்சி பாரதிதாசன் பல்கலை முன்னாள் துணைவேந்தர் தங்கமுத்துவையும் நியமித்தும் உயர்கல்வி செயலர் சுனில்பாலிவல் உத்தரவிட்டார்.இதற்கிடையே உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரிய செல்லத்துரையின் மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.இதையடுத்து புதிய துணைவேந்தர் தேடல் குழுவில் இடம் பெறும் செனட் பிரதிநிதியை தேர்வு செய்ய பதிவாளர் சின்னையாவிற்கு உத்தரவிடப்பட்டது.செனட் பிரதிநிதி தேர்தல் ஜூலை 25ல் நடக்கும் எனவும், 7ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் அறிவிப்பு ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.பேராசிரியர்கள் கூறுகையில், 'தேர்தல் குறித்து ஜூன் 22 ல் முடிவு செய்யப்பட்டது. இந்த அறிவிப்பு நேற்று வரை (ஜூன் 26) இணையதளத்தில் வெளியாகவில்லை' என்றனர்.பதிவாளர் சின்னையாவிடம் கேட்டபோது, ''தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டு விட்டது. ஆனால் தேதி சரியாக நினைவு இல்லை. நாளை விபரம் சொல்கிறேன்,'' என்றார்.துணைவேந்தர் பொறுப்பு வகிக்கும் பதிவாளரின் 'பொறுப்பான' பதில் இது. செனட் தேர்தலில் ரகசியம் காப்பதற்கு இதுவே உதாரணம்.
No comments:
Post a Comment