Wednesday, June 27, 2018

உங்கள் ஆளுமைக்கேற்ற துறை எது?

Published : 31 May 2016 12:22 IST

டாக்டர். ஆர். கார்த்திகேயன்







(சென்ற வாரத் தொடர்ச்சி)

கெரியர் கவுன்சலிங் மாணவர்களுக்கு மட்டுமா? நம் சூழலில் பெற்றோர்களுக்குத்தான் அதிகம் தேவைப் படுகிறது. இன்று மார்க் வாங்குவதும் சீட் பிடிப்பதும் பெற்றோர்களின் சமூக அந்தஸ்தை நிர்ணயிக்கிறது.

ஒரு ஆட்டோ ஓட்டுநர் பெருமிதத்தோடு சொல்லிக் கொண்டிருந்தார்: “நிலத்தை அடமானம் வெச்சு பணம் வாங்கி இன்ஜினியரிங் சீட் வாங்கிட்டேன் சார் பையனுக்கு. மார்க் கம்மிங்கறதால செலவு ஆயிடுச்சு. முடிச்சான்னா பெரிய கம்பெனியில சேர்ந்து அப்புறம் இத மாதிரி பத்து மனை வாங்குவான்!”

அவரை குறை சொல்லவில்லை. அவருக்கு சிறந்ததாகத் தோன்றிய முடிவை எடுத்துள்ளார். மார்க் வாங்காத பையனுக்கு சீட் வாங்கித் தர முடியும். படிப்பை முடித்தாலும் நல்ல வேலை வாங்குவது கடினம் என்று அவர் உணர்ந்திருக்கவில்லை.

இரண்டு லட்சம் ரூபாய் புரட்டினால் வாழ்க்கை பிரகாசிக்கும் என்று நம்பிக்கொண்டிருந்தார். அவருடைய மகனின் அறிவுக்கும் ஆர்வத்துக்கும் திறமைக்கும் ஏற்ற வேலைகள் நிறைய உள்ளன என்றும் அதை அறிய ஆய்வுகள் உள்ளன என்றெல்லாம் அவர் அறிந்திருக்க நியாயமில்லை.

அவருக்கு மட்டுமல்ல, எல்லா பெற்றோர்களுக்கும் நிறைய கேள்விகள் உள்ளன. பெற்றோர்கள் அதிகம் கேட்ட கேள்விகள் என்றே அவற்றை தொகுக்கலாம்:

நல்ல மார்க் வாங்கினா அவனுக்கு அந்த சப்ஜெக்ட் பிடிச்சிருக்குன்னு தானே அர்த்தம்? அதை வச்சு கோர்ஸ் தீர்மானிக்கலாமா?

பிளஸ் டூ மார்க் என்பது ஒரு கூட்டு முயற்சி. அதனால்தான் பள்ளியில் சதம் வாங்கியவர்கள்கூட காலேஜுக்கு போனதும் அரியர்ஸ் வைக்கிறார்கள். மார்க்கை மீறி அவர் எவ்வளவு புரிந்து படித்தார் என்பதை வைத்துதான் அந்தப் பாடத்தின் மீதான விருப்பதை தீர்மானிக்க முடியும்.

ஐ.க்யூ. டெஸ்ட் வேண்டுமா?

பிளஸ் டூ தாண்டியவருக்கு அடிப்படை ஐ.க்யூ. நிச்சயமாக இருக்கும். ஆகையால் கெரியர் கவுன்சலிங்கில் அதை சோதிக்க வேண்டியதில்லை.

ஆப்டிடியூட் டெஸ்ட் பயிற்சி எடுத்தால் உதவுமா?

ஒருவருடைய இயல்பு நிலை தெரிய எந்த பயிற்சியும் எடுக்கக் கூடாது. தவிர ஆப்டிடியூட் டெஸ்ட் பயிற்சியை நுழைவுத்தேர்வு பயிற்சியுடன் குழப்பிக்கொள்ள வேண்டாம். முன் தயாரிப்பின்றி உளவியல் சோதனை எடுக்கும்போதுதான் சரியாக இயல்பு நிலையைக் கண்டறிய முடியும்.

ஆர்வங்கள் மாறி மாறி வருகிறதே? எதை தீர்மானமாக எடுத்துக்கொள்வது?

எந்த வகை துறைகளில் ஆர்வம் இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க உளவியல் சோதனை அவசியம். ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாத வேலைகள் என்று நீங்கள் நினைபவற்றில்கூட ஒரு தொடர்பை இதன் மூலம் அறிவீர்கள். இது உங்கள் பிள்ளையின் துறைத் தேடலுக்கு அவசியம்.

வலைத்தளங்களில் உள்ள உளவியல் சோதனைகளை எடுக்கலாமா?

பல வலைத்தளங்களில் உளவியல் சோதனைகள் உள்ளன. அவற்றின் நம்பகத்தன்மையை ஆராயத் தெரிய வேண்டும். இலவசமாக அல்லது குறைந்த கட்டணம் என்பதற்காக அவற்றை மேற்கொள்ள வேண்டாம். தவிர நேர்காணலின்போது கிடைக்கும் உள்ளுணர்வு சார்ந்த தகவல் (intuitive data) மிக அவசிய மானது. அதனால் நேர்முக ஆய்வுதான் சிறந்தது.

இந்த ஆய்வுகள் கிடைத்தால் நாங்களே சோதித்துக்கொள்ள முடியாதா?

இன்று ஆய்வுகளை நகலெடுப்பது பெரிய விஷய மல்ல. ஆனால் நீங்கள் ஆலோசனைக்கு செல்லும் நபர் கல்வி அல்லது தொழில் உளவியல் துறையில் அனுபவம் வாய்ந்தவரா என்பதுதான் முக்கியம்.

எந்த கோர்ஸ் சிறந்தது என்று சொல்லமுடியுமா?

அது ஆய்வின் நோக்கமே அல்ல. எந்த துறைகள் உகந்தவை என்று மட்டும்தான் சொல்ல வேண்டும். அதற்கான காரணங்களையும் சொல்ல வேண்டும்.

ஆளுமைக்கேற்ற துறையைத் தேர்வு செய்ய வேண்டும் என்றால், ஆளுமை வாழ்க்கை தோறும் மாறுவதில்லையா?

மாறும்; வளரும். ஆனால் துறையைத் தேர்வுசெய்ய ஆளுமை வடிவத்தகவல்கள் போதும். பணி சார்ந்த ஆளுமைத் தேவைகள் என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ள முடியும். காலப்போக்கில், ஆளுமையும் மாறும். தொழில்களும் மாறும். வேலைகளும் மாறும், அதனால்தான் மாறிக்கொண்டே இருக்கும் இயல்பைப் புரிந்துகொண்டு ஆலோசனை செய்வது முக்கியம்.

எந்தெந்த துறைகளில் வேலை வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை வைத்துத் தயார் செய்ய முடியுமா?

வருங்கால வாய்ப்புகள் பற்றி ஆருடம் சொல்வது எல்லா காலத்திலும் பலிக்காது. தவிர, அவை நமக்கு எந்த அளவுக்கு ஏதுவானது என்று பார்க்க வேண்டும். அடுத்த சுழற்சியில் வேறு துறைகளில் வாய்ப்புகள் வரலாம். அப்போது அதற்குத் தாவ முடியுமா? அதனால் துறைக்கான தேர்வை வெளிலிருந்து தேடாமல், உள்ளேயிருந்து தேடுதல் உத்தமம்.

எந்த வயதில் கெரியர் கவுன்சலிங் கொடுக்கலாம்?

14 வயதில். ஒன்பதாவது படிக்கையில் தொடங்குதல் நல்லது. அதை பள்ளியிலேயே செய்வது நல்லது. எந்த நேர நெருக்கடியும் இல்லாமல், எல்லா துறைகள் பற்றியும் விரிவான பார்வைகளுடன், பதற்றமில்லாமல் ஆய்வுகள் நடத்தி, ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு செயல் திட்டம் அமைத்து கொடுப்பது நன்று.

போட்டி அதிகமாக இருக்கிறதே, இதெல்லாம் செய்தால் கண்டிப்பாக நல்ல எதிர்காலம் உண்டா?

இங்கு பற்றாக்குறையும் பதற்றமும் செயற்கையாக உருவாக்கப்பட்டவை. இது ஒரு சந்தை உத்தியும்கூட. இதில் பலியாகாமல் துணிவுடன் முடிவெடுக்க வேண்டும். வாழ்க்கையில் படிப்பு முக்கியம். படிப்பு மட்டுமே வாழ்க்கை அல்ல. தவிர படிப்பு மட்டுமே வேலை, வசதி, வெற்றி போன்றவற்றை உறுதி செய்வதும் இல்லை. எல்லோருக்குமான வாய்ப்புகள் இங்கு உள்ளன. பதற்றப்படாமல் பிள்ளைகளுக்கு உதவுங்கள். நம் பிள்ளைகளுக்கு துறைத் தேர்வை விட முக்கியமாகப் புகட்ட வேண்டுயது ஒன்று உள்ளது: தன்னம்பிக்கை!

கட்டுரையாளர், உளவியலாளர் மற்றும் ஆலோசகர்,
தொடர்புக்கு: >Gemba.karthikeyan@gmail.com

No comments:

Post a Comment

HC: Cruelty charges need some proof in divorce cases

HC: Cruelty charges need some proof in divorce cases TIMES OF INDIA KOLKATA 27.12.2024 Kolkata : Allegations of cruelty for seeking divorce ...