Thursday, June 7, 2018


மதிப்பற்ற எண்கள்


By சொ. அருணன் | Published on : 05th June 2018 02:51 AM

 தேர்வுமுறை என்பது காலத்திற்குக் காலம் மாறுபடக் கூடியது. ஆசிரியர்களுக்குத் தகுந்தவாறும் கூட மாறுபடும். ஆனால் வாழ்க்கை என்பது தேர்வினைப் போன்றது அன்று. வெறும் மூன்று மணி நேரத்திற்குள் ஒருவருடைய உண்மையான இயல்பறிவை அறிந்து கொண்டு விட முடியாது.
தேர்வு என்பது மாணவர்க்குத் தேடுவதற்குரிய ஊக்கத்தை அளிப்பதாக இருக்க வேண்டும். குழப்பம் மிகுந்த கேள்விகளும் அதற்கு எந்திரத்தனமான பதில்களும் தேர்வுக்குரிய பெருமையைச் சிதைத்து விடுகின்றன. முந்தைய காலத் தேர்வுகள் மாணவர்களின் மனத்தில் சிந்தனை வளத்தைப் பெருக்குவதாக அமைந்திருந்தன.

"உனக்குத் தெரிந்தவற்றை எழுதுக' என்றுதான் கேள்வியின் அமைப்பே இருக்கும். ஆனால் இன்றைய வினாத்தாள்கள் எந்தவிதத்திலும் முடிவு கண்டு விட முடியாத குழப்பங்களையே அதிகம் கொண்டிருக்கின்றன.
"தங்கத்தை விட உயர்ந்தது எது?' என்னும் கேள்விக்குச் சரியான விடையாக- ஏதேனும் உயர்ந்த உலோகங்களின் பெயர்களை எழுதி அதிக மதிப்பெண்களைப் பெற்ற குழந்தைகளைக் காலம் நினைவில் வைத்துக் கொள்ளவில்லை. பாடநோக்கில் முற்றிலும் மாறான விடையாக "தங்கத்தை விட உயர்ந்தது சத்தியம்' என்று எழுதிய குழந்தையைத்தான் மகாத்மா என்று காலம் போற்றிக் கொண்டிருக்கிறது.

விடைகளை வைத்தோ, அதன்மூலம் பெறுகிற மதிப்பெண்களை வைத்தோ மாண்புகள் தோன்றுவதில்லை. மனித மனத்தின் சிந்தனையை, அதன் ஆழத்தைத் தூய்மையாக்குவதே தேர்வுகளின் நோக்கம்.
வகுப்பறையிலிருந்து வெளியேற்றப்பட்டு ஆப்பிள் மரத்தடியில் உட்கார்ந்திருந்த நியூட்டன்தான் அறிவியலில் பல புதிய விதிகளையும் கண்டறிந்தவர். எப்போதும் ஆப்பிள் பழம் கீழே விழும் என்று நம்பிக் கொண்டிருந்த ஒருவித மனன மூளைக்கு மாறாக நியூட்டனின் சிந்தனை ஆப்பிள் பழம் ஏன் மேலே போகாமல் கீழே விழுகிறது என்ற வினாவை எழுப்பியபோதுதான் புவியீர்ப்பு விசைக் கோட்பாடு தோற்றம் பெற்றது.
அரண்மனையில் சுகபோகங்களில் திளைத்து ராஜரீகத் தேர்வுகள் பலவற்றில் தேர்ச்சி பெற்ற சித்தார்த்தனுக்கு வாழ்க்கையில் தேர்ச்சி பெறுவது எங்கு, எப்படி என்று தெரியவில்லை. அரண்மனைச் சுகபோகங்களைத் தூக்கி எறிந்து விட்டுத் தனிமனிதனாக நடு இரவில் வெளியேறிக் கால்போன போக்கெல்லாம் நடந்தலைந்த பின்னால்தான் போதிமரமே அவருக்குத் தேர்வுக்கூடமாயிற்று.

கேள்விகளையே கேட்டுக் கொண்டிருந்த தேர்வுக் கூடத்துக்கு மாற்றாக விடைகளைத் தருகிற ஞானக்கூடமாக அந்தப் போதிமரத்து நிழலடி இருந்தது. சித்தார்த்தன் அங்குதான் புத்தர் ஆனான்.
பண்டிதர்களிடமும், ஞானிகளிடமும் கற்றுப் பெற முடியாத ஞான உணர்வைப் பலரும் பல இடங்களிலிருந்து சுயமாகவே பெற்றிருக்கிறார்கள். தேர்வுக்கூடம் என்பது ஓர் அறை மட்டுமல்ல. அது ஒரு வெளி. எங்கிருந்தும் எப்போதும் அங்கே அறிவின் வெளிச்சம் பாய்ச்சப்படும். பலருக்கும் அறிவுக்கண்கள் திறந்து கொள்ளும்.

பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் கொன்று குவித்து விட்டு வெற்றியைக் கொண்டாடுவதற்காகப் போர்க்களத்திற்கு வந்த அசோகனுக்கு அந்தக் களத்திலேதான் அறிவுக்கண் திறந்தது.

தேர்வு என்பது தேர்ந்து கொள்வதுதான். கேள்விக்கான சரியான விடை எது என்பதை மட்டுமல்ல... அதற்கான நிறைய மதிப்பெண்களை மட்டுமல்ல... சுய அறிவையும் உயிரிரக்கப் பண்பையும் உணர்ந்து தன்னையே தேர்ந்து கொள்வதுதான் தேர்வின் நோக்கம். தங்களுக்குத் தேவையான நல்ல தலைவனைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்கிற முறைக்குத்தான் தேர்தல் என்று பெயர். அந்த வழியாகத் தங்களைத் தாங்களே தேர்ந்து கொள்வதற்காகத்தான் தேர்வுகள் தொடங்கப்பட்டன. ஆனால் இன்றைய தேர்வுகளின் நிலை வேறு.

தேர்வெழுதச் செல்பவர்கள் குழந்தைகள் என்பதும், அவர்களைத் தேர்ச்சி பெறச் செய்யவும் எழுச்சி பெறச் செய்யவும்தான் தேர்வு நடக்கிறது என்பதையும் ஏனோ தேர்வாளர்கள் மறந்து விடுகிறார்கள். ஆலைக்குள் நுழைக்கும் கரும்பினைப் போல அவர்கள் பரபரத்துத் திணிக்கப்படுவதையும், மூன்று மணி நேரத்திற்குப் பிறகு பிழிந்தெடுக்கப்பட்ட சக்கையைப் போல வெளித்தள்ளப்படுவதையும் கண்டால் அதுத் தேர்வறையாகத் தோன்றவில்லை; சோர்வறையாகத் தோன்றுகிறது.
தேர்வுக் கலவரங்களில் கடவுளுக்கும் பங்கு கிடைத்து விடுகிறது. தனது பிள்ளைகள் இத்தனை மதிப்பெண்கள் எடுத்தால் இன்னின்ன பரிகாரங்களைச் செய்கிறேன் என்பதில் தொடங்கி, இந்தத் தெய்வத்தை வணங்கினால் எந்தத் தேர்விலும் வெற்றி கிடைக்கும் என்பதான வேடிக்கைகளையும் பெற்றோரிடம் காண முடிகிறது.

இதையெல்லாம் கடந்து அந்தப் பிஞ்சுகள் தம் அறிவுக்கெட்டியவரை எழுதிய வினாக்களுக்குப் பதிலாகப் பெறுகிற அந்த எண்கள் அவர்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் வலிமையுடைதாகக் கருதப்பெறுவது எத்தனை மூடத்தனம்? பத்தாம் வகுப்பு, (இப்போது பதினோராம் வகுப்பும்) பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் இடப்பட்டுள்ள எண்களின் கூட்டுத் தொகைதான் ஒரு மாணவனின் குழந்தையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகிறது என்று யார் உறுதி சொல்ல முடியும்? இது கல்வி வியாபாரிகளின் மூடப் பரப்புரை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?
அறியாத குழந்தைகளுக்கு அறிவு புகட்டத்தான் ஆசிரியர்குழுவும் கல்விக்கூடங்களும் இருக்கின்றனவே தவிர, "நீங்கள் அறிவிலிகள்' என்று முத்திரை குத்தி அவர்களை வெளித்தள்ளுவதற்கு எதற்கு இத்தனை ஆர்ப்பாட்டமான தேர்வறைகள்?

ஒரு மாணவனை மருத்துவனாக, பொறியாளனாக ஆக்குவதற்கு வேண்டுமானால் இவை மதிப்புடைய எண்களாகக் கணிக்கப்படலாம். ஆனால் நல்ல மனிதனாக, சமூக சிந்தனையாளனாக, செயற்பாட்டாளனாக உருவாக்குவதற்கு மதிப்புடைய அகமாண்புகளே தேவை. அவற்றை இந்தத் தேர்வுகள் வளர்த்துத் தரவில்லை என்றால் இவற்றால் ஒருபோதும் சமூகத்துக்குப் பயனில்லை.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024