Tuesday, October 20, 2015

ஆங்கிலம் அறிவோமே - 80: கொலைகளின் ஆங்கிலம் .............ஜி.எஸ்.சுப்ரமணியன்

Return to frontpage

What is your good name?

What is your respectable name?

இரண்டில் எது மேலும் பவ்யமானது என்று கேட்டுள்ளார். Good அல்லது respectable தேவையில்லை! What is your name? என்பதே போதுமானது. மரியாதை பொங்க வேண்டுமென்றால் May I know your name என்றோ Can you please tell your name என்றோ கேட்கலாமே!

எனக்கென்னவோ நமது இந்தி மொழி பேசும் மக்கள் மூலமாகத்தான் ‘good name’ வந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. இந்தியில் ‘ஆப் கா ஷுப் நாம் கியா ஹை? (Aap kaa shub naam kya hai?) என்று கேட்பது வழக்கம். அந்த ஷுப் (சுபம்) தான் (shub) ஆங்கிலத்தில் good ஆக எதிரொலித்திருக்க வேண்டும்.

The என்பதை ‘தி’ என்று உச்சரிக்க வேண்டுமா? அல்லது ‘த’ என்று உச்சரிக்க வேண்டுமா? என்று ஒரு வாசகர் கேட்டிருக்கும் கேள்வி வேறு சிலரது மனங்களிலும் எழுந்திருக்க வாய்ப்பு உண்டு.

அதாவது The என்பதை ‘தில்’ என்பதில் உள்ள ‘தி’ என்பதுபோல் உச்சரிக்க வேண்டுமா அல்லது தர்மம் என்பதில் உள்ள ‘த’ என்பதுபோல் உச்சரிக்க வேண்டுமா? அதாவது THIS என்பதில் உள்ள THI என்பதுபோல் உச்சரிக்க வேண்டுமா? அல்லது THAT என்பதில் உள்ள THA என்பதுபோல உச்சரிக்க வேண்டுமா? அதாவது (‘ஐயகோ, விளக்கம் புரியுது. விடையைச் சொல்லுங்க’ என்று குரல்கள் கேட்கின்றன). சரி சரி

A,E,I,O,U ஆகியவற்றை vowels என்றும் பிற ஆங்கில எழுத்துக்களை consonants என்றும் குறிப்பிடுவது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

Vowelsக்கு முன்னால் உள்ள the என்றால் அதை ‘தி’ என்று உச்சரிக்க வேண்டும். The orange தி ஆரஞ்ச். The Umbrella தி அம்ரெல்லா.

Consonantsக்கு முன்னால் உள்ள the என்றால் அதை ‘த’ என்று உச்சரிக்க வேண்டும். The basket த பாஸ்கெட். The purse த பர்ஸ்.

வெகு நாட்கள் கழித்து மொட்டை மாடியில் படுத்துக்கொண்டபோது வானத்தில் தெரிந்த நட்சத்திரங்கள் வெகு ரம்யமாக இருந்தன.

“Never I have seen such a sight’’ என்றான் இளைய மகன். அவனது ஆங்கிலத்தைத் திருத்தி அவன் பரவசத்தை நான் அப்போது குலைக்கவில்லை.

ஆனாலும் ஒரு சிறு விளக்கம். Never என்ற வார்த்தையோடு ஒரு வாக்கியம் தொடங்கினால் அதைத் தொடர்ந்து auxiliary verb இடம் பெறும்.

அதாவது “Never have I seen such a sight’’ என்றுதான் அந்த வாக்கியம் இருந்திருக்க வேண்டும்.

FETICIDE INFANTICIDE



ஒரு வாசகர்“ Suicide என்று அந்த வார்த்தைக்கு ஏன் பெயரிட்டார்கள்?” என்று கேட்டிருக்கிறார். இன்னொருவர் “Infanticide, Feticide ஆகிய இரண்டும் ஒன்றா” என்று கேட்டிருக்கிறார்.

பொதுவாக cide என்பது கொலையைக் குறிக்கிறது. Homicide என்பது மனிதரை மனிதர் செய்யும் கொலை. லத்தீன் மொழியில் sui என்றால் தன்னைத் தானே என்று அர்த்தம். எனவே suicide என்றால் தற்கொலை.

Genocide என்றால் இனப்படுகொலை. Insecticide என்றால் பூச்சிகளைக் கொல்வது. Biocide என்றாலும் நடைமுறையில் பூச்சிக் கொல்லிதான்.

Feticide என்பதும் Infanticide என்பதும் ஒன்றுதான் என்று சிலர் கருதினாலும் அப்படியல்ல. Feticide என்பது கருவில் இருக்கும்போது கொல்வது. அதாவது கருச்சிதைவு. கணிசமான நாடுகளில் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு Feticide-ஐ சட்டங்கள் அனுமதிக்கின்றன.

Infanticide என்பது தன் குழந்தையை அதன் பெற்றோரே (முக்கியமாக அம்மாவே) கொல்வது. ஒருவயதுக்கு உட்பட்ட குழந்தையைக் கொல்வதைத்தான் இப்படிக் குறிப்பிடுவார்கள். Infanticide-ஐ எந்த நாட்டின் சட்டமும் அனுமதிப்பதில்லை.

மன்னரைக் கொன்றால் அது Regicide. தந்தையைக் கொன்றால் Patricide. அன்னையைக் கொன்றால் Matricide.

அதற்காக cide-ல் முடியும் வார்த்தைகள் எல்லாம் கொலையைக் குறிப்பவை என்று ஒட்டுமொத்தமாக மனதில் ‘கொல்ல’ வேண்டாம்.

எடுத்துக்காட்டாக, coincide. ஒரே நேரத்தில் நடப்பது, ஒரே புள்ளியில் இணைவது போன்றவற்றைக் குறிக்க இந்த வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். Our vacations coincided this year. The interest of employers and employees do not generally coincide. The centres of concentric circles coincide.

“That was a sheer coincidence’’ என்றால் அது திட்டமிட்டதல்ல. மிகவும் தற்செயலாக நடைபெற்றது என்று பொருள்.

“Personification குறித்து குறிப்பிட்டிருக்கிறீர்கள். Metaphor குறித்து நான் படித்ததும் இதுவும் ஒன்றாக இருக்கிறதே இரண்டும் ஒன்றுதானே?’’ என்று ஒரு வாசகர் கேட்டிருக்கிறார். இந்த இரண்டோடு Simile என்பதையும் சேர்த்தே விளக்கி விடலாம் என்று தோன்றுகிறது.

Simile (ஸ்மைல் அல்ல ஸிமிலி) என்பது உவமை.

She was as busy as a bee.

It was as black as coal.

You were as brave as a lion.

Metaphor என்பதை உருவகம் எனலாம். அதாவது ஒன்றுக்குக் குறியீடாக மற்றொன்றைச் சொல்வது. மற்றபடி பொதுவான வாக்கியங்களில் அப்படிப் பயன்படுத்த மாட்டோம். Life is a roller coaster என்றால் வாழ்க்கையில் நாம் நிஜமாகவே (அதாவது நம் உடல்) உயரத்திலும், பள்ளத்திலும் சென்று வருகிறோம் என்பதில்லை. நிகழ்வுகள் மாறி மாறி வருகின்றன என்றுதான் அர்த்தம்.

Time is money என்பார்கள். அதற்காக ஒரு பொருளை கடையில் வாங்கிக் கொண்டு time-ஐ கொடுக்க முடியுமா என்ன? Time is money என்பது ஒரு Metaphor.

My neighbour is a fox என்றால் அவர் தந்திரமானவர் என்றுதானே அர்த்தம். அவருக்கு நான்கு கால்கள் இருக்குமா என்ன?

Personification என்பது Metaphor-லிருந்து மாறுபட்டது. உயிரற்ற பொருள் அல்லது தன்மைக்கு உருவம் கொடுப்பது. அதாவது மனிதத் தன்மையை உயிரற்ற ஒரு பொருளுக்கு அளிப்பது.

The trees sighed in the wind.

The moon winked at me.

The stars danced playfully.

தொடர்புக்கு - aruncharanya@gmail.com

SRMC NOTIFICATION 2016-17


இ-மெயில் திருத்த சேவை!..vikatan

இ-மெயில்-மெயிலை பயன்படுத்துவது எப்படி என பாடம் நடத்துவது எல்லாம் இனி தேவையில்லாத விஷயம் என்றுதான் நம்மில் பலர் நினைக்கலாம். ஆனால் இ-மெயிலை சரியாக பயன்படுத்துவது எப்படி என்பது தொடர்பாக எல்லோரும் கற்றுக்கொள்வதற்கான விஷயங்கள் இருக்கவே செய்கின்றன. சரியாக எனும் போது மறுமுனையில் இருப்பவர் அதிருப்தியோ,ஆவேசமோ அடையாத வகையில் வாசகங்களை மெயிலில் இடம்பெறச்செய்வது!

ஏனெனில் மெயிலில் நாம் பயன்படுத்திம் தொனி அதை வாசிப்பவர் மனதில் பலவித பாதிப்புகளை ஏற்படுத்தலாம். அதிலும் போகிற போக்கில் அதிகம் யோசிக்காமல் அனுப்பி வைக்கப்படும் மெயில்கள் வர்த்தக முறிவுகளை கூட உண்டாக்கலாம்.
இதற்கு முக்கிய காரணம், கடிதம் எழுதும் போது அதற்கென ஒரு வடிவத்தை, அலுவல் மொழியை பயன்படுத்த பழகியிருப்பது போல அதன் நவீன கால வடிவமான ஈ-மெயிலுக்கு என ஒரு அமைப்புக்கு நாம் பழகியிருக்கவில்லை என்பதுதான்.

அலுவலகத்தில் உடன் பார்க்கும் நண்பருக்கு மெயில் அனுப்பும் போது, கோப்பு தேவை அனுப்பவும் என ஒற்றை வரியை டைப் செய்வதற்கும், தயவு செய்து,இந்த கோப்பை உடனே அனுப்பி வைக்கவும் என கேட்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

இப்படி இ-மெயில் அனுப்பும் போது அதில் இடம்பெறும் வாசகங்களில் அலட்சியம், ஆணவம் போன்ற தொனி கேட்பதை தவிர்கக்ச்செய்யும் சேவையை, பாக்ஸ்டைப் அறிமுகம் செய்துள்ளது. இ-மெயில் திருத்தச்சேவையான இதில், நாம் உத்தேசித்துள்ள வாசகங்களை டைப் செய்தால் அவற்றை சரி பார்த்து, பணிவு அம்சம் கொண்ட வாசகங்களாக மாற்றித்தருகிறது.

மெயிலில் உள்ள வார்த்தைகளில் எவை பணிவற்றவை என சுட்டிக்காட்டி, அவற்றை எப்படி மாற்றலாம் எனும் ஆலோசனை சொல்கிறது. நண்பர்களுக்கு அனுப்பும் மெயில்களை கூட விட்டுவிடலாம். ஆனால் வர்த்தக நோக்கிலான மற்றும் அலுவல் நோக்கிலான மெயில்களில் இந்த கவனம் மிகவும் அவசியம். இந்த சரி பார்த்தல் சேவையை ஜிமெயிலுடன் இணைந்து பயன்படுத்தும் வசதியும் இருக்கிறது.

இதன் பரிந்துரைகள் 100 சதவீதம் துல்லியமானவை என்று சொல்ல முடியாது என்றாலும், இ-மெயில் நாகரீகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சேவை. ஆங்கில மொழியில் உள்ள வாசகங்களை மட்டுமே இந்த சேவை திருத்தி தருகிறது என்றாலும் கூட, இதன் பின்னே இருக்கும் அடிப்படை அம்சங்கள் எந்த மொழியில் இ-மெயில் அனுப்பும் போதும் கவனிக்க வேண்டியவைதான்.

இணைய முகவரி:https://labs.foxtype.com/politeness

- சைபர் சிம்மன்

Monday, October 19, 2015

நுகர்வோரே விழித்திருங்கள்.....dinamani


By எஸ். பாலசுந்தரராஜ்

First Published : 19 October 2015 02:01 AM IST


நாம் கடையில் சென்று ஒரு பொருளை வாங்கும்போது, பெரும்பாலானோர் அதில் ஐ.எஸ்.ஐ. முத்திரை அல்லது அக்மார்க் முத்திரை உள்ளதா என கவனிப்பதில்லை.
மேலும் பலர் தயாரிப்பு தேதி, காலாவதி தேதியையும் பார்ப்பதில்லை. பொதுமக்களின் இந்த அறியாமையை சில வியாபாரிகள் பயன்படுத்தி தங்களது பொருள்களை விற்பனை செய்து விடுகிறார்கள். எனவே, நுகர்வோர் விழிப்புணர்வு என்பது மிகவும் அவசியமாகிறது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986, பகுதி2(1)(டி) பிரிவின்படி நுகர்வோர் என்பதன் விளக்கம், பணம் கொடுத்து ஒரு பொருளையோ, பணியையோ, சேவையையோ தன் சொந்த உபயோகத்திற்கு பெறும் ஒருவர் நுகர்வோர் ஆவர். பொருளை வணிக நோக்கத்துடன் வாங்கும் நபர் நுகர்வோராக இருக்க முடியாது.
இருப்பினும், தனது சுய வேலைவாய்ப்பிற்காக அல்லது தனது வாழ்வின் ஆதாரத்திற்கான பொருளை வாங்கியிருப்பவர் அவர் நுகர்வோராகக் கருதப்படுவார். பொருளின் தரம், எடை, அளவு, தூய்மை போன்றவற்றில் குறைபாடு இருந்தால் அந்தப் பொருளை தரமற்ற பொருள் என கருத வேண்டும்.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986, பிரிவு2(1)(ஜி) பிரிவின் படி பணம் கொடுத்து சேவையைப் பெற்றுக்கொள்ளும்போது, வாக்களித்தபடி சேவை கொடுக்கப்படாமல் சேவை பெற்றவரை இன்னல்களுக்கு ஆளாக்குவது சேவை குறைபாடு ஆகும்.
உதாரணமாக, பேருந்து பயணத்தின் போது பணம் கொடுத்து பேருந்தில் பயணிக்கும்போது ஓட்டுநர் அல்லது நடத்துநர் நம்மை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினால் அல்லது குறிப்பிட்ட நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாவிட்டால் அது சேவை குறைபாடு ஆகிறது. இது பணம் கொடுத்து வாங்கும் சேவைகள் (சர்வீஸ்) எனப்படும்.
தொலைபேசி சேவை, காப்பீடு சேவை, பணம் கொடுத்துப் பெறும் மருத்துவச் சேவை, வங்கிச் சேவை, ரயில்வே சேவை, உணவு விடுதி உள்ளிட்டவையும் இதுபோன்ற பணம் கொடுத்து வாங்கும் இதர சேவைகள்.
நுகர்வோர் சேவை குறைபாடுகள், பொருள்களின் அளவு, தரம் குறித்து புகாரின் தன்மையைப் பொருத்து மாவட்ட, மாநில, தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்திடம் புகார் செய்யலாம்.
கோரும் நஷ்டஈட்டுத் தொகை ரூ.20 லட்சம் வரை இருந்தால் மாவட்ட நீதிமன்றத்திலும், ரூ.20 லட்சத்திற்குமேல் ஒரு கோடி ரூபாய் வரை இருந்தால் மாநில நுகர்வோர் நீதிமன்றத்திலும், ரூபாய் ஒரு கோடிக்கு மேற்பட்டு இருந்தால் தேசிய நுகர்வோர் தீர் ஆணையத்திடம் நேரடியாகப் புகார் செய்யலாம்.
பொருள் அல்லது சேவையை விலைகொடுத்து வாங்கிய நபர், பதிவு செய்யப்பட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்பு, மத்திய, மாநில அரசு, ஒத்த நோக்கங்களைக் கொண்ட நுகர்வோரின் சார்பில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நுகர்வோர் கூட்டாக புகார் செய்யலாம்.
நீங்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்யும் முன்னர் வாங்கிய பொருள்களுக்கான ரசீதை அவசியம் வைத்திருக்க வேண்டும்.
அனைத்து மூல ஆவணங்களையும் ஒரு கோப்பில் வைத்திருங்கள். நீதிமன்ற உத்தரவின்றி வேறு எவரிடமும் அதைக் கொடுக்காதீர்கள். தேவைப்படும்போது நகல் எடுத்து பயன்படுத்துங்கள்.
புகார் செய்பவரின் பெயர் மற்றும் முழுமையான முகவரி, எதிர்தரப்பினர் பெயர் மற்றும் முழுமையான முகவரி, பொருள் வாங்கிய மற்றும் சேவை பெற்ற தேதி, செலுத்தப்பட்ட தொகை, பொருள்களின் விவரம், வர்த்தக நடைமுறை, குறையுள்ள பொருள், சேவையில் குறைபாடு, கூடுதல் கட்டணம் வசூலித்தது, இவற்றில் எதைப் பற்றி கூற வேண்டுமோ அது குறித்து தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
பட்டியல், ரசீது நகல்கள், இதுதொடர்பான கடிதப் போக்குவரத்து இருப்பின் அதன் நகல்கள், இந்தச் சட்டத்தின் கீழ் எதிர்நோக்கும் நிவாரணத் தொகை உள்ளிட்ட விவரங்கள் நீங்கள் அளிக்கும் புகாரில் இருக்க வேண்டும்.
மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்ய, ஒரு லட்சம் ரூபாய் வரை நஷ்டஈடு கோரினால் ரூ.100-ம், ஒன்று முதல் ஐந்து லட்சம் வரை ரூ.200-ம், ஐந்து லட்சம் முதல் 10 லட்சம் வரை ரூ.400-ம், 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை ரூ.500-ம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் வரைவு காசோலையாக புகாருடன் இணைக்க வேண்டும்.
மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்ய ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை ரூ.2,000-ம், 50 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை ரூ.4,000-ம் வரைவு காசோலை இணைக்க வேண்டும்.
தேசிய நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்ய ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ரூ.5,000}துக்கு வரைவு காசோலையை இணைக்க வேண்டும்.
தில்லியில் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறி அமர்ந்திருந்த பயணியிடம், திருடன் ஜன்னல் வழியே நகையைப் பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டான். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் ரயில்வே சேவை குறைபாட்டினால்தான் திருட்டு நடைபெற்றது என நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, ரயில்வே நிலையத்திற்குள் கட்டணம் செலுத்திய பின்னர்தான் பயணி நிலையத்திற்குள் வருகிறார்.
எனவே, திருட்டு நடைபெற்றது ரயில்வே துறையின் சேவை குறைபாடுதான். உரிய நஷ்டஈட்டை ரயில்வே நிர்வாகம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே, நுகர்வோரே விழித்திருங்கள்.

திருத்தப்பட வேண்டிய தீர்ப்பு!


Dinamani


By ஆசிரியர்

First Published : 19 October 2015 01:58 AM IST


உச்சநீதிமன்றம், 99-ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தையும், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் 2014-ஐயும், அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என தீர்ப்பளித்திருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாகத் தொடர்ந்துவரும், நீதிபதிகளே நீதிபதிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வழிமுறையே தொடர வேண்டும் என்று ஐந்து பேர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு கூறிவிட்டது. நடைமுறையில் இருக்கும் முறையில் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தவும், மாற்றங்களைக் கொண்டு வரவும் ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் நவம்பர் 3-ஆம் தேதி அமர்வு மறுபடி கூடும்போது அரசு முன்வைக்கலாம் என்றும் தீர்ப்பு கூறியிருக்கிறது.
தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் 2014, நாடாளுமன்றத்தால் அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு, 20 சட்டப்பேரவைகளின் ஒப்புதலையும் பெற்ற சட்டம். இந்தச் சட்டத்தின் மூலம் எந்தவித வெளிப்படைத்தன்மையும் இல்லாமல், எந்தத் தகுதி, காரணங்களுக்காக ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்படுகிறார் என்பதை மக்கள் மன்றத்துக்குத் தெரிவிக்காமல், நீதிபதிகளே நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றது நாடாளுமன்றம்.
இதை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று தீர்ப்பளித்திருப்பதன் மூலம், நாடாளுமன்றத்தால்கூடக் கேள்வி கேட்க முடியாத அதீத அதிகாரம் தங்களுக்கு இருக்கிறது என்று சொல்லாமல் சொல்லிவிட்டிருக்கிறது நீதித் துறை. அரசியலமைப்புச் சட்டம், மத்திய அரசு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்து நீதிபதிகளை நியமனம் செய்ய வேண்டும் என்றுதான் கூறுகிறதே தவிர, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் ஆலோசனைப்படி என்றோ, பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு என்றோ குறிப்பிடவில்லை.
மன்னர் மானிய ஒழிப்பு, வங்கிகள் தேசியமயமாக்கல் போன்ற இந்திரா அரசின் நடவடிக்கைகளை, அன்றைய உச்சநீதிமன்றம் நிராகரித்தபோது, அரசுக்குக் கட்டுப்பட்ட நீதித் துறையை இந்திரா காங்கிரஸ் அரசு ஏற்படுத்த முற்பட்டது. கேசவானந்த பாரதி வழக்கில், நாடாளுமன்றத்துக்கு அரசியல் சாசனத்தை மாற்றவோ, சுருக்கவோ அதிகாரமில்லை என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பிரதமர் இந்திரா காந்தியை மேலும் கோபப்படுத்தியது. அந்தத் தீர்ப்பை வழங்கிய மூன்று நீதிபதிகளையும், பதவிமூப்பு வழக்கத்தைப் புறக்கணித்துவிட்டு தமக்கு வேண்டிய ஒருவரை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமித்தார் பிரதமர் இந்திரா காந்தி.
அப்போது முதல் தொடங்கியது நீதித் துறைக்கும் நாடாளுமன்றத்துக்குமான மோதல். 1980 முதல் நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமாற்றங்களில் அரசுக்குத்தான் முன்னுரிமை நிலவி வந்தது. 1993-இல், நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது, நீதிபதி ஜே.எஸ். வர்மா, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் "கலந்தாலோசித்து' என்பதை மாற்றி "ஆலோசனையின் பேரில்' என்று புதிய விளக்கத்தைக் கொடுத்தார். அதுமுதல் நீதிபதிகளே நீதிபதிகளை நியமித்துக் கொள்ளும் முறை தொடங்கியது. ஓய்வுபெற்ற பிறகு, நீதிபதி வர்மாவே தனது தீர்ப்பின் குறைபாடுகளை ஏற்றுக் கொண்டார். நீதித் துறையும் அரசும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்று கருத்து தெரிவித்தார்.
நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளில் பெரும்பாலானவை அரசுக்கு எதிரானவை எனும் நிலையில், அரசின் கைப்பாவையாக நீதித் துறை செயல்பட்டால் மக்களுக்கு நீதி கிடைக்காது என்கிற நீதித் துறையின் வாதத்தைத் தள்ளிவிட முடியாது. நீதித் துறையின் சுதந்திரம் அரசியல் தலைமையின் தலையீட்டால் பாதிக்கப்படுவதும், ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. அதேநேரத்தில், தலைமை நீதிபதிக்கும் அவரால் தேர்ந்தெடுக்கப்படும் குழுவினருக்கும் வேண்டப்பட்டவர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லைதான். ஊழலும் முறைகேடுகளும் அதிகரித்துவிட்ட நிலைமையில், அரசுக்கு நீதிபதிகள் நியமனத்தில் முழு அதிகாரம் அளிப்பது என்பது, உச்ச, உயர்நீதிமன்ற நியமனங்கள்கூட விலை பேசப்படும் அவலத்துக்குத் தள்ளப்படும் அவலத்தை ஏற்படுத்தக்கூடும். நீதித் துறையிலும் ஊழலும், வேண்டியவர் வேண்டாதவர் என்கிற பாகுபாடும், திறமையைவிடத் தோழமைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் செயல்பாடும் காணப்படுவதாக ஓய்வுபெற்ற சில நீதிபதிகளே வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறார்கள். அதனால் இப்போதைய முறை தொடர்வதும் சரியல்ல.
அமெரிக்காவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிபரால் நியமிக்கப்பட்டு மேலவையின் ஒப்புதலைப் பெறுவதாக இருக்கிறது. இங்கிலாந்தில், இதற்கென்று ஆணையம் அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகளிலிருந்து பிரதமர் தேர்ந்தெடுக்கும் நபர்கள்தான் நீதிபதிகளாக அரசியால் நியமிக்கப்படுகிறார்கள். அரசுக்கு நியமனத்தில் எந்தவித அதிகாரமோ, கருத்தோ இருக்க முடியாது என்கிற வாதம் மக்களாட்சியில் ஏற்புடையதல்ல.
ஆலோசனைகளும், பரிந்துரைகளும் வரவேற்கப்படுகின்றன என்று நீதிபதிகளின் அமர்வே கூறியிருக்கும் நிலையில், இப்போதைய முறையில் தவறுகள் இருப்பதை அவர்களே ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதுதான் பொருள். தவறு திருத்தப்படுவதுதான் முறை. மாற்றம் கொண்டுவரப்பட வேண்டியது இப்போதைய நியமன முறையில் அல்ல. தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தில்தான். எங்கெல்லாம் திருத்தங்கள் தேவை என்பதைத்தான் தீர்ப்பு தெளிவுபடுத்தி இருக்க வேண்டுமே தவிர, நாடாளுமன்றத்தின் முடிவை ஒட்டுமொத்தமாக விசிறி அடித்திருப்பது நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தின் தேவைக்கு மேலும் வலு சேர்க்கிறது!

Sunday, October 18, 2015

சீனப்பட்டாசை தடுக்கவேண்டியது யார்?...daily thanthi

அடுத்த மாதம் 10–ந் தேதி தீப ஒளித்திருநாளாம் தீபாவளி வருகிறது. எவ்வளவு போனஸ் வரும்?, அதற்கு என்னென்ன செலவுகள் இருக்கும்? என்று மனதில் உள்ள கால்குலேட்டர்களை வைத்து கணக்கிடும் வேலைகள் இப்போதே குடும்ப தலைவர்களுக்கு தொடங்கிவிட்டது. இல்லத்தரசிகளுக்கோ இந்த ஆண்டு தீபாவளிக்கு என்னென்ன பலகாரங்கள் செய்யலாம்? என்பது தொடங்கி துணிமணிகள் உள்பட பல யோசனைகள் நிழலாடும். ஆனால், எது இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் பட்டாசு என்றால் தனி மகிழ்ச்சிதான். பட்டாசு இல்லாமல் தீபாவளி இல்லை.

தீபாவளி நெருங்கும் இந்த வேளையில், சென்னை முதன்மை சுங்க ஆணையர் வெளியிட்டுள்ள ஒரு விளம்பரம், ஒரு அபாய எச்சரிக்கையை பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது. ‘‘வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள பட்டாசுகள் தொடர்பாக ஓர் எச்சரிக்கை’’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அந்த விளம்பரத்தில், ‘‘இதனால் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால், பட்டாசுகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதி கிடையாது. ஏனென்றால், வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் பட்டாசுகளில் பொட்டாசியம் குளோரைடு என்னும் வேதிப்பொருள் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த வேதிப்பொருள் எளிதில் தீப்பிடிக்கக்கூடியது மட்டுமன்றி, திடீரென்று வெடிக்கக்கூடியதாகும். மேலும், இவ்வகைப் பட்டாசுகள் சுற்றுப்புற சூழலை மாசுபடுத்துவதோடு, சுகாதாரக்கேடுகளையும் விளைவிக்கும். பொதுமக்களின் உயிர் மற்றும் உடமைகளின் பாதுகாப்பு நலன் கருதி, மேற்கூறிய வெளிநாட்டு பட்டாசுகளை யாராவது கையிருப்பில் வைத்திருந்தாலோ, அல்லது விற்பனை செய்தாலோ, அதன் விவரங்களை உடனே தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’’ என்று கூறப்பட்டு இருந்தது. சீனாவில் இருந்துதான் சட்டவிரோதமாக இந்த பட்டாசு இறக்குமதி செய்யப்படுகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அதை சொல்வதற்கு ஏன் தயக்கம்?

சீனாவில் உற்பத்தி செய்து கள்ளத்தனமாக கொண்டுவரப்படும் பட்டாசுகள் பொட்டாசியம் குளோரைடு கொண்டும், தமிழ்நாட்டில் சிவகாசியில் உற்பத்தியாகும் பட்டாசு அலுமினியம் நைட்ரேட்டாலும் உற்பத்தி செய்யப்படுகிறது. பொட்டாசியம் குளோரைடால் தயாரிக்கப்படும் பட்டாசுகள் அதிக குளிர் பிரதேசத்துக்குத்தான் பொருத்தமானது. இந்தியா போன்ற வெப்பமான பிரதேசங்களில் எளிதில் தீப்பிடிக்கக்கூடியது. திடீர் விபத்துக்களை உருவாக்கி ஆனந்த தீபாவளியை கண்ணீர் தீபாவளியாக்கிவிடும். பொட்டாசியம் குளோரைடைவிட, அலுமினியம் நைட்ரேட் விலை இருமடங்குக்கு மேல் அதிகம், அதுமட்டுமல்லாமல், அலுமினியம் நைட்ரேட் பயன்படுத்தப்படும் அளவில் 10–ல் ஒரு பங்கு பொட்டாசியம் குளோரைடை பயன்படுத்தினால் போதும். இதுபோல பல காரணங்களால்தான் ஆபத்து மிகுந்த சீன பட்டாசின் விலை மிகக்குறைவாக இருக்கிறது. ஆனால் குறைந்த விலை என்பதால் ஆபத்தை விலை கொடுத்து வாங்கமுடியுமா? சீனபட்டாசு இறக்குமதி செய்ய அனுமதி இல்லை. அப்படியும் இந்தியாவுக்குள் நுழைகிறது, தாராளமாக கிடைக்கிறது என்றால் அதைத்தடுக்கவேண்டிய அதிகாரிகள் ஏன் செய்யவில்லை? என்று மத்திய–மாநில அரசுகள் கேட்கவேண்டும்.

இந்த பட்டாசுகள் சீனாவில் இருந்து திருட்டுத்தனமாகத்தான் கொண்டுவரப்படுகின்றன, மும்பையில் இருந்தும், தூத்துக்குடி துறைமுகம் மூலமாகவும் கண்டெய்னர்களில் கொண்டுவரப்படுகின்றன என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழக சட்டசபையில் அமைச்சரே சொல்லியிருக்கிறார். எனவே, சுங்கத்துறை பொதுமக்களுக்கு சொல்வதுபோல, எப்படி வந்தது? என்று அந்த துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவேண்டும். மேலும், சீன பட்டாசை விற்பனை செய்யமுடியாத சூழ்நிலையை உருவாக்கிவிட்டால் சரக்குகள் தேங்கிப்போய்விடும், இனி வியாபாரிகள் யாரும் வாங்கவும்மாட்டார்கள். அதை தீவிரமாக செய்யவேண்டும்.

பம்பையில் ஆடைகளை வீசினால் ஆறு ஆண்டு சிறை: கேரள ஐகோர்ட் உத்தரவு..dinamalar

சபரிமலை: பம்பையில் பக்தர்கள் ஆடைகளை வீசி எறிந்தால் அவர்களுக்கு ஆறு ஆண்டு வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என்றும், இல்லாத ஆச்சாரங்களை உருவாக்கும் குருசாமிக்கும் தண்டனை உண்டு என்று கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.சபரிமலை பயணத்தில் பக்தர்கள் பம்பையில் குளிக்க வேண்டும். பம்பையில் குளிப்பதன் மூலம் பாவங்கள் களையப்படுகிறது என்பது நம்பிக்கை. ஆனால் பக்தர்கள் இந்த நதியையும் அசுத்தப்படுத்துவதுதான் வேதனை. தரிசனம் முடிந்து வரும் போது தங்கள் உள்ளாடைகள் உள்ளிட்ட அனைத்து ஆடைகளையும் வீசி எறிவது, பம்பையில் உணவு சாப்பிட்டு விட்டு அதன் எச்சில் இலைகளை பம்பையில் கொண்டு போடுவது என இல்லாத ஆச்சாரங்கள் சமீப காலமாக வளர்ந்து வருகிறது. இதை தவிர்க்க வேண்டும் என்று தந்திரிகள், தேவசம்போர்டு என அனைத்து அமைப்புகளும் கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை. மகரவிளக்கு காலத்தில் பம்பை நதி மிக மோசமாக அசுத்தமாகிறது.
இது தொடர்பாக ஐகோர்ட் நியமித்த சிறப்பு ஆணையர் அளித்த அறிக்கையின் பேரில் நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், அனு சிவராமன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
பம்பை நதி அசுத்தம் அடையாமல் இருக்க மாசு கட்டுப்பாடு வாரியம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தர்கள் அணிந்த ஆடைகளை பம்பையில் போட வேண்டும் என்ற ஆச்சாரம் சபரிமலையில் கிடையாது. ஆனாலும் பக்தர்கள் இவ்வாறு செய்கின்றனர். இவ்வாறு ஆடைகளை வீசுவது தடை செய்யப்படுகிறது. மீறி வீசுபவர்களுக்கு ஒன்றரை முதல் ஆறு ஆண்டு வரை சிறைத்தடைனையும், அபராதமும் விதிக்கலாம்.
பக்தர்களை அழைத்து வரும் குருசாமிகளின் உத்தரவு படிதான் பக்தர்கள் பம்பையில் ஆடைகளை வீசுகிறார்கள். இனி குருசாமிகள் அப்படி செய்தால், குற்றம் செய்ய துண்டியதாக அவர் மீதும் வழக்குப்பதிவு செய்து ஆடைகளை போடுவதற்கு இணையான தண்டனை வழங்கலாம். இந்த விஷயத்தில் மாசுக்கட்டுப்பாடு வாரியத்துக்கு தேவசம்போர்டும், போலீசும் உறுதுணையாக இருக்க வேண்டும். பம்பை நதிக்கரையில் அந்தந்த மாவட்ட மாஜிஸ்திரேட்டுகளும், பம்பையில் ஸ்பெஷல் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மாஜிஸ்திரேட்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பம்பையில் ஆடைகளை வீசினால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்ற விபரத்தை பக்தர்களிடம் விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்த தேவசம்போர்டும், மாசு கட்டுப்பாடு வாரியமும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...