Monday, October 19, 2015

திருத்தப்பட வேண்டிய தீர்ப்பு!


Dinamani


By ஆசிரியர்

First Published : 19 October 2015 01:58 AM IST


உச்சநீதிமன்றம், 99-ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தையும், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் 2014-ஐயும், அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என தீர்ப்பளித்திருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாகத் தொடர்ந்துவரும், நீதிபதிகளே நீதிபதிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வழிமுறையே தொடர வேண்டும் என்று ஐந்து பேர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு கூறிவிட்டது. நடைமுறையில் இருக்கும் முறையில் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தவும், மாற்றங்களைக் கொண்டு வரவும் ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் நவம்பர் 3-ஆம் தேதி அமர்வு மறுபடி கூடும்போது அரசு முன்வைக்கலாம் என்றும் தீர்ப்பு கூறியிருக்கிறது.
தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் 2014, நாடாளுமன்றத்தால் அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு, 20 சட்டப்பேரவைகளின் ஒப்புதலையும் பெற்ற சட்டம். இந்தச் சட்டத்தின் மூலம் எந்தவித வெளிப்படைத்தன்மையும் இல்லாமல், எந்தத் தகுதி, காரணங்களுக்காக ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்படுகிறார் என்பதை மக்கள் மன்றத்துக்குத் தெரிவிக்காமல், நீதிபதிகளே நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றது நாடாளுமன்றம்.
இதை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று தீர்ப்பளித்திருப்பதன் மூலம், நாடாளுமன்றத்தால்கூடக் கேள்வி கேட்க முடியாத அதீத அதிகாரம் தங்களுக்கு இருக்கிறது என்று சொல்லாமல் சொல்லிவிட்டிருக்கிறது நீதித் துறை. அரசியலமைப்புச் சட்டம், மத்திய அரசு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்து நீதிபதிகளை நியமனம் செய்ய வேண்டும் என்றுதான் கூறுகிறதே தவிர, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் ஆலோசனைப்படி என்றோ, பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு என்றோ குறிப்பிடவில்லை.
மன்னர் மானிய ஒழிப்பு, வங்கிகள் தேசியமயமாக்கல் போன்ற இந்திரா அரசின் நடவடிக்கைகளை, அன்றைய உச்சநீதிமன்றம் நிராகரித்தபோது, அரசுக்குக் கட்டுப்பட்ட நீதித் துறையை இந்திரா காங்கிரஸ் அரசு ஏற்படுத்த முற்பட்டது. கேசவானந்த பாரதி வழக்கில், நாடாளுமன்றத்துக்கு அரசியல் சாசனத்தை மாற்றவோ, சுருக்கவோ அதிகாரமில்லை என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பிரதமர் இந்திரா காந்தியை மேலும் கோபப்படுத்தியது. அந்தத் தீர்ப்பை வழங்கிய மூன்று நீதிபதிகளையும், பதவிமூப்பு வழக்கத்தைப் புறக்கணித்துவிட்டு தமக்கு வேண்டிய ஒருவரை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமித்தார் பிரதமர் இந்திரா காந்தி.
அப்போது முதல் தொடங்கியது நீதித் துறைக்கும் நாடாளுமன்றத்துக்குமான மோதல். 1980 முதல் நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமாற்றங்களில் அரசுக்குத்தான் முன்னுரிமை நிலவி வந்தது. 1993-இல், நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது, நீதிபதி ஜே.எஸ். வர்மா, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் "கலந்தாலோசித்து' என்பதை மாற்றி "ஆலோசனையின் பேரில்' என்று புதிய விளக்கத்தைக் கொடுத்தார். அதுமுதல் நீதிபதிகளே நீதிபதிகளை நியமித்துக் கொள்ளும் முறை தொடங்கியது. ஓய்வுபெற்ற பிறகு, நீதிபதி வர்மாவே தனது தீர்ப்பின் குறைபாடுகளை ஏற்றுக் கொண்டார். நீதித் துறையும் அரசும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்று கருத்து தெரிவித்தார்.
நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளில் பெரும்பாலானவை அரசுக்கு எதிரானவை எனும் நிலையில், அரசின் கைப்பாவையாக நீதித் துறை செயல்பட்டால் மக்களுக்கு நீதி கிடைக்காது என்கிற நீதித் துறையின் வாதத்தைத் தள்ளிவிட முடியாது. நீதித் துறையின் சுதந்திரம் அரசியல் தலைமையின் தலையீட்டால் பாதிக்கப்படுவதும், ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. அதேநேரத்தில், தலைமை நீதிபதிக்கும் அவரால் தேர்ந்தெடுக்கப்படும் குழுவினருக்கும் வேண்டப்பட்டவர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லைதான். ஊழலும் முறைகேடுகளும் அதிகரித்துவிட்ட நிலைமையில், அரசுக்கு நீதிபதிகள் நியமனத்தில் முழு அதிகாரம் அளிப்பது என்பது, உச்ச, உயர்நீதிமன்ற நியமனங்கள்கூட விலை பேசப்படும் அவலத்துக்குத் தள்ளப்படும் அவலத்தை ஏற்படுத்தக்கூடும். நீதித் துறையிலும் ஊழலும், வேண்டியவர் வேண்டாதவர் என்கிற பாகுபாடும், திறமையைவிடத் தோழமைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் செயல்பாடும் காணப்படுவதாக ஓய்வுபெற்ற சில நீதிபதிகளே வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறார்கள். அதனால் இப்போதைய முறை தொடர்வதும் சரியல்ல.
அமெரிக்காவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிபரால் நியமிக்கப்பட்டு மேலவையின் ஒப்புதலைப் பெறுவதாக இருக்கிறது. இங்கிலாந்தில், இதற்கென்று ஆணையம் அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகளிலிருந்து பிரதமர் தேர்ந்தெடுக்கும் நபர்கள்தான் நீதிபதிகளாக அரசியால் நியமிக்கப்படுகிறார்கள். அரசுக்கு நியமனத்தில் எந்தவித அதிகாரமோ, கருத்தோ இருக்க முடியாது என்கிற வாதம் மக்களாட்சியில் ஏற்புடையதல்ல.
ஆலோசனைகளும், பரிந்துரைகளும் வரவேற்கப்படுகின்றன என்று நீதிபதிகளின் அமர்வே கூறியிருக்கும் நிலையில், இப்போதைய முறையில் தவறுகள் இருப்பதை அவர்களே ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதுதான் பொருள். தவறு திருத்தப்படுவதுதான் முறை. மாற்றம் கொண்டுவரப்பட வேண்டியது இப்போதைய நியமன முறையில் அல்ல. தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தில்தான். எங்கெல்லாம் திருத்தங்கள் தேவை என்பதைத்தான் தீர்ப்பு தெளிவுபடுத்தி இருக்க வேண்டுமே தவிர, நாடாளுமன்றத்தின் முடிவை ஒட்டுமொத்தமாக விசிறி அடித்திருப்பது நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தின் தேவைக்கு மேலும் வலு சேர்க்கிறது!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024