ஆக, இனி கவனம் செலுத்தவேண்டியது வேலைவாய்ப்பை பெருக்குவதில்தான். கல்வி வளர்ச்சியின் அளவுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் வேகம் இல்லை. இந்தியாவில் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 2.23 சதவீதம் உயர்ந்துகொண்டே இருக்கிறது. ஆனால், வேலைவாய்ப்போ 1.4 சதவீதம்தான் இன்றைய தொழில் வளர்ச்சியிலேயே உயர்ந்துவருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், தற்போதைய நிலவரப்படி 84 லட்சத்து 97 ஆயிரத்து 402 பேர்கள் அரசின் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலைதேடி பதிந்து இருக்கிறார்கள். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 16 லட்சத்து 10 ஆயிரத்து 760 பேர்கள் வேலைதேடி பதிந்து இருக்கிறார்கள். அவர்கள் மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதியாமலேயே ஏராளமானவர்கள் வேலைதேடிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் அரசாங்கமே வேலை வழங்கிவிடமுடியாது. தனியாரின் பங்களிப்பு அத்தியாவசிய தேவையாகும். சமீபத்தில் சென்னையில் நடந்த உலகளாவிய தொழில் முதலீட்டாளர்கள் கையெழுத்திடப்பட்ட 98 ஒப்பந்தங்கள் மூலம் 4 லட்சத்து 70 ஆயிரத்து 65 பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய தொழில்களெல்லாம் சென்னையை சுற்றி மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் பரவலாக தொடங்க வசதிகளை செய்து கொடுக்கவேண்டும்.
தனியாரைப் பொறுத்தமட்டில், இப்போது இருக்கும் தொழிலாளர் சட்டங்கள் மிகக்கடுமையாக இருக்கின்றன என்பதால், தொழில் தொடங்க தயக்கமாகயிருக்கிறது என்கிறார்கள். எனவே, தொழில் வளர்ச்சியையும், வேலைவாய்ப்புகளையும் கருத்தில்கொண்டு இருதரப்பையும் அழைத்துபேசி, உகந்த சூழ்நிலையை உருவாக்கவேண்டும். வேலைவாய்ப்பில் ‘புளூ காலர்’ வேலைகள் என்று அழைக்கப்படும் தொழிலாளர் வேலைவாய்ப்புகளும், ‘ஒயிட் காலர்’ வேலைகள் என்று அழைக்கப்படும் அலுவலர் பணிகளும் இருக்கிறது. இனி நமது இளைஞர்கள் இந்த பாகுபாடு பார்க்காமல், எந்த தொழிலிலும் நிபுணத்துவம் பெற்றால் உயர்வைக்காணலாம் என்ற உணர்வை வளர்த்துக்கொள்ளவேண்டும். இந்த சூழ்நிலையில், வேலைவாய்ப்புகளை அதிகம் அள்ளித்தரும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான புதிய தொழில் கொள்கையை தமிழக அரசு உருவாக்கும் என முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.
No comments:
Post a Comment