Tuesday, October 6, 2015

கையறு நிலை!


Dinamani


By ஆசிரியர்

First Published : 06 October 2015 01:24 AM IST


நாடு முழுவதும் காய்கனி, உணவு தானியங்கள், பால் உள்ளிட்ட இருபதாயிரம் மாதிரிகளை மத்திய வேளாண் துறை ஆய்வு செய்ததில், அவற்றில் 18.7% மாதிரிகளில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் எச்சம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாதிரிகளில் 2.6% காய்கனி, பால், தானியங்களில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக பூச்சிக்கொல்லி மருந்துகளின் எச்சம் இருப்பது தெரிய வந்திருக்கிறது. 12.5% மாதிரிகளில் இருந்த பூச்சிக்கொல்லி எச்சம், இந்தியாவில் அனுமதி மறுக்கப்பட்ட பூச்சி மருந்துகளைச் சார்ந்தது என்பதுதான் அதிர்ச்சி தரும் தகவல்.
இந்தப் பூச்சிக்கொல்லி எச்சம் அங்கக வேளாண்மையில் விளைந்த பொருள்களிலும் இருக்கிறது என்கிறது இந்த ஆய்வு. காரணம், மண் முழுவதும் ரசாயன உப்பாகிக் கிடக்கிறது. புதிதாக உரம் போடவில்லை என்றாலும், நிலம் தன்னில் விளைவிக்கப்படும் பயிரின் மூலம்தான் ஏற்கெனவே கொட்டப்பட்ட உப்பை வெளியேற்ற முடியும். ஆகவே, அங்கக வேளாண்மையிலும் பூச்சிக்கொல்லி நச்சை அப்புறப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது என்பதுதான் யதார்த்த நிலைமை.
கடந்த பிப்ரவரி மாதம் தில்லி நீதிமன்றத்தில் தாக்கலான பொதுநல வழக்கில் மத்திய வேளாண் துறை அமைச்சகம் அளித்த அறிக்கை போதுமானதாக இல்லை என்று நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது. நீதிமன்றம் அமைத்திருந்த குழுவானது, தில்லி நகரச் சந்தைகளில் பெற்ற உணவுப் பொருள், காய் கனிகளின் மாதிரிகளைத் தனியாக ஆய்வு செய்து, அனைத்திலும் பூச்சிக்கொல்லி எச்சம் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக இருப்பதை அறிக்கையாகத் தாக்கல் செய்திருந்தது.
சென்ற ஆண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு அல்போன்சா மாம்பழம் அனுப்ப முடியாமல் போனது. காரணம், அளவுக்கு அதிகமாக பூச்சிக்கொல்லி எச்சம். பல நாடுகளுக்கு நமது கத்தரிக்காய், பாகற்காய், புடலங்காய் ஏற்றுமதி செய்யப்பட முடியாத நிலை இருக்கிறது. சவூதி அரேபியாவுக்கு நமது பச்சை மிளகாய் ஏற்பில்லை. காரத்தைவிட பூச்சிக்கொல்லி எச்சம் அதிகம்.
அண்மையில், கேரள வேளாண் பல்கலைக்கழக ஆய்வுக்கூடம் மேற்கொண்ட பரிசோதனைகளில் பல்வேறு காய், கனிகளில் பூச்சிக்கொல்லி எச்சம் இருப்பதைப் பட்டியலிட்டது. கேரள மாநிலத்துக்கு அதிக அளவில் காய் கனிகள் அனுப்புவது தமிழ்நாடு என்பதால், தமிழ்நாட்டு காய் கனிகளில் அதிக பூச்சிக்கொல்லி எச்சம் இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், இந்தியா முழுவதும் இதே நிலைமைதான் என்பது தெளிவாகியிருக்கிறது.
பசுமைப் புரட்சியின்போது அதிக அளவு ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிப் பயன்பாடு இந்திய வேளாண்மையில் இல்லாத அளவுக்குப் புகுத்தப்பட்டது. அதன் விளைவாக, தானிய உற்பத்தி பெருகியது. நாளும் பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஈடுகொடுக்கவும், உர உற்பத்தியில் இந்தியா அன்னிய நாடுகளை எதிர்பார்க்காமல் தன்னிறைவு பெறவும் அன்றைய இந்திரா காந்தி அரசு எடுத்த பசுமைப் புரட்சி நடவடிக்கையைக் குறை கூறுவதில் அர்த்தமில்லை.
பசுமைப் புரட்சியின் விளைவாக இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற பிறகு ரசாயன உரத்திலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டு, பாரம்பரிய விவசாயத்துக்கு நாம் திரும்பியிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யவில்லை. பாரம்பரிய வேளாண்மையில் அதிக விளைச்சல் கிடைக்காது என்ற ஒரு வாதம் மட்டுமே தொடர்ந்து 40 ஆண்டுகளாக முன்வைக்கப்படுகிறது. பல ஆயிரம் கோடி ரூபாய்க்குத் தொடர்ந்து உர மானியம் வழங்கப்பட்டு உர நிறுவனங்கள் பலனடைகின்றன என்பது மட்டுமல்லாமல், மண்ணும் முழுமையாகப் பாழ்பட்டுக் கிடக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
பூச்சிக்கொல்லி ரசாயன உரங்களால் உண்ணும் உணவு விஷமாகி, உடலின் அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன. ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாமல் கல்லீரல், சிறுநீரகக் கோளாறுகள், புற்றுநோய், மலட்டுத்தனம் எல்லாமும் அதிகரித்த நிலைமை. உரத்தையும் பூச்சிக்கொல்லி மருந்தையும் குறைக்க நாம் முயற்சிக்கவில்லை என்பது மட்டுமல்ல, முடியவுமில்லை.
மாறாக, சிறுநீரக சிறப்பு மருத்துவமனைகள் தொடங்கப்பட்டன. சிறுநீரகத் திருட்டு ஒரு வணிகமாயிற்று. புற்றுநோய் மருத்துவமனைகள், புற்றுநோய் அறியும் பயாப்ஸி சோதனைக்கான ஆய்வகங்கள் புற்றீசலாக உருவாகியிருக்கின்றன. மலட்டுத் தனத்தைப் போக்கவும், செயற்கை கருவூட்டு வழங்கவும் போட்டி போட்டுக்கொண்டு வியாபாரம் நடக்கிறது. தம்பதிக்கு குழந்தைப்பேறு வழங்கும் செயற்கை கருவூட்டு மையங்கள் எல்லாமும் ஒவ்வொரு நகர்ப் பகுதியிலும் இரண்டு மூன்று உருவாகி, போட்டிப்போட்டு வியாபாரம் நடத்தின. இந்த நோய்களுக்கு அடிப்படைக் காரணமான ரசாயன உரம், பூச்சிக்கொல்லியை தவிர்ப்பதை அரசோ, வேளாண் துறையோ யோசிக்கக்கூட தயாராக இல்லை.
கடந்த 40 ஆண்டுகளாகவே பாரம்பரிய வேளாண்மையில் அக்கறையுள்ள அமைப்புகள் ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிக்கு எதிராகக் குரல் கொடுத்து அதன் தீமையை மக்களிடம் எடுத்துச் சென்றன. ஆனால், பரந்துபட்ட அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியவில்லை. இப்போது ஊடகங்களின் ஆதரவு சில ஆண்டுகளாகத்தான் கிடைக்கத் தொடங்கியுள்ளது. இயற்கை சாகுபடி, மாடித்தோட்டத்தில் காய்கனி உற்பத்தி, அங்கக வேளாண்மையில் ஈடுபடும் தகவல்கள், பேட்டிகள் என்று காட்சி ஊடகம், பத்திரிகைகள் என எல்லாவற்றிலும் இயற்கை வேளாண்மை குறித்த குரல் கேட்கிறது.
நமக்கு பாரம்பரிய வேளாண்மையின் நன்மை புரிகிறது. ஆனால், நமது மண் பாழ்பட்டுக்கிடக்கிறதே, என்ன செய்ய?

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024