Thursday, October 1, 2015

புலி படம் எப்படி?

cinema.vikatan.com
வேதாளங்கள் மனிதகுலத்தை ஆட்சி செய்கின்றன. கொடுங்கோலாட்சி. அந்தக் கொடிய ஆட்சியை வென்று மக்களைக் காக்கிறார் விஜய். இந்த ஒற்றைவரிக்கதையை    வேதாளமனிதர்கள், அரக்கர்கள், சித்திரக்குள்ளர்கள், பேசும்பறவைகள் மந்திரதந்திரங்கள் ஆகியனவற்றைக் கலந்து பிரமாண்டமாக எடுத்திருக்கிறார்கள்.
வேதாளர்கள் 56 கிராமங்களை ஆட்சி செய்கிறார்கள். அவற்றில் ஒரு கிராமத்தின் தலைவராக இருக்கும் பிரபு, வேதாளவீரர்கள் மக்களைக்கொடுமைப்படுத்தி அவர்களிடமிருப்பவற்றையெல்லாம் பிடுங்கிக்கொள்கிறார்கள் என்று ஊர்மக்களைக் கூட்டிக்கொண்டு வேதாளராணியிடம் முறையிடப்போகிறார். போகிற இடத்தில் தளபதி, ஊர்மக்களைக் கொல்வதோடு பிரபுவை மட்டும் கையை வெட்டி அனுப்புகிறார். கைவெட்டப்பட்ட பிரபுவுக்கு ஆற்றில் அடித்துவரப்படும் ஒரு குழந்தை கிடைக்கிறது. அந்தக்குழந்தையே விஜய். 

விஜய் வளர்ந்து அந்தக்கிராமத்தைச் சேர்ந்த ஸ்ருதியைக் காதலித்துக் கல்யாணம் செய்கிறார். கல்யாணம் முடிந்ததும் வேதாளர்கள் அவரைக் கடத்திக்கொண்டுபோய்விட, அவரை மீட்கப் விஜய் போகிறார். போகிறஇடத்தில் நடப்பதுதான் கதை.

கிராமமக்கள், வேதாளங்களைக் கண்டு பயப்படுகிற நேரத்தில், ஒரு வேதாளத்தின் காலைப்பிடித்துக்கொண்டு, நீங்க வேதாளம் நாங்க பாதாளம் என்று விஜய் வசனம் பேசுகிறார். உடனே பிரபு, புலி பதுங்குறது பாயுறதுக்குத்தான் என்று உடனே அதைச் சமன்செய்கிறார். 

விஜய் தன் வழக்கமான ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களுடன் ரசித்து நடித்திருக்கிறார். சண்டைக்காட்சிகளில் புதுவேகம் காட்டியிருக்கிறார். புலிவேந்தனாக வருகிற காட்சிகளில் ஓர் உண்மையான தலைவன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார். 

ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகிய இரண்டு நாயகிகளையும் சரிசமமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். முதல்பாதியில் ஸ்ருதிஹாசன் இரண்டாம்பாதியில் ஹன்சிகா என்று கவர்ச்சி விருந்து வைத்திருக்கிறார்கள். கொஞ்சமே நடித்து தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்கிறார்கள். 

ராணியாக நடித்திருக்கும் ஸ்ரீதேவி, இளமையாகத் தெரிகிறார். நடிக்கவும் செய்திருக்கிறார். எல்லாத்தவறுகளும் உங்கள் மூலமாக நடந்தது ஆனால் நீங்கள் தவறு செய்யவில்லை என்பார்கள். அதற்கேற்ப நடித்திருக்கிறார். உருண்டுதிரண்ட அவருடைய கண்கள் அவருடைய வேலையில் பாதியைச் செய்துவிடுகின்றன. 

தளபதியாக வருகிற சுதீப், கொடுங்கோலர்களுக்குரிய எல்லாஅம்சங்களுடனும் இருக்கிறார். விஜய் உடன் படம் முழுக்க வருகிற தம்பிராமய்யாவும் சத்யனும் சிரிக்கவைக்கிறார்கள். அவர்களுடன் இமான்அண்ணாச்சி, ரோபோசங்கர், வித்யுராமன் ஆகியோருடைய வேடங்கள் வித்தியாசம். 

முதல்பாதியில் இயற்கைஎழில்சூழ்ந்தஇடங்கள், இரண்டாம்பாதியில் பிரமாண்டஅரண்மனைகள் ஆகியனவற்றை தன்னுடைய ஒளிப்பதிவின் மூலம் மேலும் பெரிதாக்கியிருக்கிறார் நட்டி. பாடல்களில் அவருடைய வேலை பெரிதாக இருக்கிறது. 

தேவிஸ்ரீபிரசாத்தின் இசையில் ஜிங்கிலியா, புலி புலி பாடல்கள் ஆட்டம்போடவைக்கும். மெல்லிசைரகமான ஏண்டி ஏண்டி ரசிக்கவைக்கும்.  நீங்க தப்பு பண்ணல உங்களச் சுத்தி இருக்கிறவங்கதான் அப்படிப் பண்றாங்க, நான் ஆளவந்தவன் இல்ல, இந்த மக்களை வாழவைக்க வந்தவன், மக்களுக்காக உயிரையும் கொடுக்கிறவன்தான் தலைவன் போன்ற வசனங்களிலும் கடைசிக்காட்சியிலும் விஜய்யின் அரசியல் எண்ணத்துக்கு வலுச்சேர்ப்பதாக அமைந்திருக்கிறது. 

விஜய்யின் வெகுமக்கள் செல்வாக்கையும் தன்னுடைய வழக்கமான பேண்டஸியையும் கலந்து புலியைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சிம்புதேவன்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024